

கம்ப்யூடர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிதாகி விட்டன. பல நாட்கள், பலர் கூடி செய்ய வேண்டிய பல பணிகளை, மணிக் கணக்கில் நிறைவேற்றித் தரும் மாபெரும் பிதாமகராக அவை விளங்குகின்றன. மின்சாரம் போலவே கணினிகளும் மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பிடித்து விட்டன.
அனுபவித்தவர்களால்தான் அவற்றின் முழுப் பயனையும் முற்றாக உணர முடியும்!
பொங்கல் நெருங்கி விட்டது! குடும்பத்தாருடன் சொந்த கிராமத்திற்குச் சென்று ஊரார், உறவினருடன் பண்டிகையை மகிழ்வாகக் கொண்டாட வேண்டும். ஆன்லைனில் ரிசர்வ் செய்ய நேரம் கிடைக்கவில்லை. அலுவலகம் போகும் வழியில், எக்மோர் ஜங்க்ஷனில் இறங்கி விட்டார். அவசரம் அவசரமாக ஓடுகிறார் ரிசர்வேஷன் கவுண்டருக்கு. ஏற்கெனவே நீண்டிருக்கிறது க்யூ! ஐந்தாறில், எதில் குறைவானவர்கள் நிற்கிறார்கள் என்று நெருங்கும் முன்பே அனுமானித்து, குறைவான நபர்கள் உள்ள க்யூவில் இடம் பிடித்து விட்டார்.
மெல்ல, தான் எத்தனையாவது நபர் என்று எண்ண, வரிசையில் முதலாவது நிற்பவரிலிருந்து எண்ண ஆரம்பிக்கிறார். பசக்! சிறு சப்தம்! எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் ஓடிக் கொண்டிருந்த ஃபேன்கள் நிற்க, விளக்குகள் ஒளியை ஓட்டி விட்டு, மௌனம் காக்க, எல்லோர் முகத்திலும் திடீரென்று படிகிறது சோகம்! ஜெனரேடர் ஆன் ஆக சில நிமிடங்கள் ஆக, அதற்குள் அனைவரின் முகத்திலும் பயரேகை படிய, எரிய ஆரம்பித்த விளக்குகளும், சுழல ஆரம்பித்த மின் விசிறிகளும் அவர்கள் முகங்களுக்கு ஒளி தந்தன. ’அப்பாடா!’ என்று ஆசுவாசப்பட்ட படி, கவுண்டரை நோக்கினால் அந்நப் பெண் நகரவேயில்லை! எல்லோரும் ஒரு முறை ரிஸ்ட் வாட்சைப் பார்த்தபடி, ’என்ன? என்ன?’ என்று பதற, ’கம்ப்யூடர் சரியாக ஒர்க் பண்ணலையாம்’ என்க, பயமும், சோகமும் எல்லோர் முகங்களையும் தேடி ஓடி வந்து ஒட்டிக் கொண்டன! கரண்டும், கம்ப்யூடருந்தான் இப்பொழுதெல்லாம் நம் இரண்டு கண்கள் என்றால் அது மிகையில்லை!
விரல்களும், பட்டன்களுமே இப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகி விட்டன. தட்டல், நகர்த்தல் (swipe) ஆகியவற்றுடனே அன்றாட வாழ்க்கை கழிகிறது. ஏஐ முழு உபயோகத்திற்கு வந்து விட்டால் இவைகளுக்குக் கூட வேலை இருக்குமா என்று தெரியவில்லை.
கணினிகளுக்கு நாம் கொடுக்கும் கட்டளைகளை (Commands), அவை அப்படியே நன்றி கொண்ட சேவகனைப்போல் நிறைவேற்றுகின்றன. நமது ஆங்கிலக் கட்டளைகளை சென்னைத் தமிழில் (Chennai Tamil) மொழி பெயர்த்தால் எப்படி இருக்குமென்று பார்ப்போமா?
save - தா வெச்சிக்க
save as - ஐய அப்டியே வெச்சிக்க
find - தேடிக்க
find again - இன்னொரு தபா தேடிக்க
move - ஜகா வாங்கு
zoom - பெர்சா காட்டு
open-தொற நைனா
replace-இதத் தூக்கி அப்டிகா போடு
cut-வெட்டிக் கடாசு
paste-ஒட்டு நைனா
drag & hold-நல்லா இஸ்து புச்சிக்க
do you want to delete the selected item?-மெய்யாலுமே தூக்கிடவா?
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்!
கொஞ்சம் சிரிங்களேன்!
இறுக்கம் இதயத்துக்கு ஆகாதாம்!
தமிழ், சிந்திக்க வைத்துச் சிறப்பைக் கூட்டுவது போல சிரிக்கச்செய்து
ஆரோக்கியத்தையும் வளர்க்கும்!