
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது கடவுளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஊழலுக்கு மிகவும் பொருந்தும். பல நாமகரணங்கள் சூட்டப்பட்டு வியாபித்திருக்கிறது ஊழல். லஞ்சம், கையூட்டு, favour செய்வது, கவனிக்கிறது, பார்த்துச் செய்வது என்று பல பெயர்கள். பரிசு தருவது, பணமாகவோ, பொருளாகவோ, ஒரு செலவை ஏற்பது என்று பல வழிகள் உண்டு இதனை நிறைவேற்ற.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இருவேறு வாதம் உண்டு; ஆனால் ஊழல் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதில் ஈடுபடுபவர் கூட இவ்வளவு வாங்கவில்லை என்றோ அசந்தர்ப்பமாகப் பிடிபட்டோமே என்றோ தான் வருந்துகிறார்கள்.
இது எங்கிருந்து துவங்குகிறது எங்கே முடிகிறது என்பதும் விளங்காத புதிர். புற்றீசல் போலப் பரவி விரவி மொத்தச் சமூகத்தையும் நாசம் செய்யும் தன்மையால், இதனை ஒழிப்பது மிக அவசியம். சாத்தியமா என்பது தான் கேள்வி? கறையான்கள் மறுபடி மறுபடி வருவதற்கு Pest control செய்பவர்கள் மண்ணின் தன்மை/இயல்பு என்பார்கள்.
மனித உடலில் கிட்னி ஸ்டோன் என்பது எப்படி கறைக்கக்கறைக்கத் தோன்றுகிறதோ அப்படித் தான் இதுவும். சர்க்கரை நோய் அவ்வப்போது கட்டுப்படுமேயன்றி ஒழிக்க முடியாததை போல இந்த ஊழலும் அப்படியே!
இது உலகளாவிய போக்கு என்பது உண்மைதான். வெளிநாட்டில் வியாபாரப் பேரங்களில் மேலடுக்கில் ஊழல் இருக்கும். அதுவும் விதிமீற மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது பொதுவான கருத்து. இங்கே நம் நாட்டில் ஒரு சாமானியன் அவனது நியாயமான முறைப்படி நடக்க வேண்டிய அன்றாடச் செயல்களுக்கே ஊழல் அவசியமாகிறது. அரசாங்க சக்கரம் சுழலவே இந்த வழுக்கு எண்ணெய் தேவைப்படுகிறது! பிணம் தின்று போஷிக்கும் கழுகினைப் போல ஊழலை உண்டு கொழுத்து வீங்கி நிற்கிறது ஜனநாயகம்.
அரசியல் வாதிகளும் அரசாங்க அலுவலர்களும் எவ்விதக் கூச்சமோ குற்றவுணர்வோ இல்லாமல் சகஜ ஸ்திதியில் ஊழல் செய்கிறார்கள். சில இடங்களில் மக்கள் இது தானே வழக்கம் என்று பழகிப்போய் விட்டனர். இதனால் கேள்வி கேட்பதையே மறந்து போய் விட்டார்கள். விலைப் பட்டியல் இல்லாதது தான் குறை, அதுவும் கூட வசதி கருதியே ஆட்களுக்குத் தகுந்தது போல அளவினை மாற்றவே பயன்படுகிறது.
தேர்தல் சமயத்தில் எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களும் பணம்/பொருள் கொடுத்து ஓட்டை வாங்குவது என்பது இயல்பான நடைமுறையாகிவிட்டது. எப்படி அரசாங்க ஊழியர் லஞ்சத்தைக் கேட்டுப் பெறுகிறாரோ அதைப்போல வாக்காளர்களும் வாதிட்டுச் சண்டையிட்டு பணத்தைப் பெறுகிறார்கள்! ‘நான் கெட்டதும் இல்லாமல் உன்னையும் கெடுப்பேன்’ என்பது தான் இந்த நடைமுறை. வாக்காளனுக்கு இருக்கும் தார்மீகத் தன்மையும் மழுங்கடிக்கப்படுகிறது. இதுவும் ஒரு கொத்தடிமைத் தனம் தான் என்பதைப் பணம் பெற்று ஒட்டு போடுபவர் உணறுவதேயில்லை. கீழிருந்து மேலேயும், மேலிருந்து கீழேயும் நீக்கமற பரவிக் கோலோச்சுகிறது ஊழல்.
உரிமைகளை பெறுவது முதல் தேர்வுகளில் ஜெயிப்பதில் தொடர்ந்து ஒட்டு, பதவி பரிசுகளை வாங்குவது வரை எல்லாவற்றையும் எதையாவது கொடுத்துத்தான் பெறுகிறோம். எதை பெறுவதற்கும் ஒரு விலை உண்டு தான் அது உழைப்பும் தகுதியும் என்றில்லாமல் கையூட்டு என்று மாறி நிற்பது தான் சமூகத்தின் நோய்!
ஜனநாயகத்திற்கு நான்கு தூண்கள் என்பது வழக்கம். நடுவில் முளைத்து நன்றாக நிலைப்பெற்று ஐந்தாவது தூணாக இந்த ஊழல் ஆகிவிட்டது. இந்த நடுத்தூனே மற்ற நான்கு தூண்களையும் ஆட்டம் காணவைத்தோ அவசியம் இல்லாமலோ ஆக்கிவிட்டது.
மக்கள் தன்னிறைவு பெறாததால் ஊழல் மலிந்துள்ளதா? வசதிகள் மோகம் கூடிப்போனதால் வளர்ந்துள்ளதா? வாய்ப்போ வசதியோ நம் தகுதிக்கு இணையாக இருத்தலே ஆரோக்கியம். எல்லை மீறினால் பெருகினால் வீக்கம் தானே? வளர்சியில்லையே! இந்த அளவுகோல் நம் ஒவ்வொருவரிடமும் தான் இருக்க வேண்டும் சமூகத்திடம் கொடுத்தல் கூடாது. நேர்மையாக செயல்பட்டு தன்னிறைவாக வாழ்வதே நீடித்த நிம்மதியை தரும். இல்லையென்றால் வள்ளுவன் சொன்னது போல ‘ஆன்ற இடும்பை தந்துவிடும்’.
இந்த புற்றீசல் அரக்கனாக மாறி நம் ஜனநாயகத்தை முழுவதுமாக முழுங்க செய்கிறது. அவ்வப்போது ஆங்காங்கே யாரோ ஓரிருவர் எதிர்த்தோ மறுத்தோ குரல் கொடுக்கிறார்கள், செயல்படுகிறார்கள். அதுவும் இப்போது ஈனக்குரலாகி வருகிறது. அவர்களுக்கு துணை நிற்கவோ சக்தி தரவோ யாரும் முன்வருவதில்லை.
ஊழலை எதிர்ப்பதாக சொல்லுபவரும் செயல்படுபவரும் கால ஓட்டத்தில் ஊழல்வாதியாக மாறிப்போவது தான் மிகப்பெரிய காவிய சோகம்! சிக்கலான சிண்டை சரிசெய்ய எங்கே துவங்குவது என்று தெரியாமல் சிக்கலை மேலும் சிக்கலாக்கி வருகிறோம். சாக்கடையை சரி செய்ய இறங்கி சகதியில் மூழ்கிப்போகிறோம்.
எதிலிருந்து விடுதலை பெற்று எந்த சுதந்திரத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பது தெளிவில்லாத பயணமாக ஆகிப்போனது. இந்த பயணம் மலையேறும் போது பாதையை மறைக்கும் மூடுபனியாக நம்மைப் போர்த்தி நிற்கிறது. மேகமும் பனியும் விலகி பாதைவிளங்கி பயணம் தொடர என்ன வழி?
பயணம் பாதை இலக்கு எல்லாமும் நேர்மையாக ஒழுக்கம் பாற்பட்டு நிற்பது என்பது கனவாகவே முடிந்து விடுமோ? கனவு வாழ்வு சாத்தியப்படுமா? நாம் வாழ்வதற்கு கனவு உதவலாம். கனவே வாழ்வு ஆகாது! நாம் விழித்தால் தான் வாழமுடியும். இந்த விழித்தல் கனவிலிருந்து வாழ்வுக்கு திரும்பவா அல்லது கனவாக போன வாழ்வை மீட்டு எடுக்கவா என்பது மிகப்பெரிய கேள்வி? விழிப்பதே இந்த ஊழல் உலகில் வாழ்வதற்கே என்று ஆகி விட்டது!