
பிறந்து, வளர்ந்த சொந்த நாட்டை விட்டு மற்றொரு நாட்டுக்குக் குடியேறுவது என்பது தொன்று தொட்டு நடந்து வருவது. தன்னுடைய நாட்டில் நிரந்தரமில்லாத ஆட்சி, அதனால் உள் நாட்டுக் கலகம் அல்லது அண்டைய நாட்டுடன் இடைவிடாத சண்டை ஆகிய காரணத்தால், மனிதன் வேறு வழியில்லாமல் அன்னிய மண்ணில் அகதிகளாகக் குடியேறுகிறான். உயர்கல்வி கற்க, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, வளமான வாழ்விற்குப் பொருள் ஈட்ட என்று வளர்ந்த நாடுகளுக்குக் குடியேறுவது இன்றும் நடந்து வருகிறது. இதைத் தவிர பொருளாதாரக் குற்றங்கள், வங்கி கடன் மோசடி, நிதி மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப, அன்னிய மண்ணில் ஓடி ஒளிவது ஒரு சாரார்.
ஆனால், பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டிற்கு மற்றவர்கள் வந்து குடியேறுவதைக் கட்டுப்படுத்த பல வழிகளிலும் முயன்று வருகின்றனர்.
அதே நேரத்தில், வளர்ந்த நாடுகள் சில, குறைந்த வருமான வரி, தடங்கலில்லாத நிம்மதியான வாழ்க்கை, நிலையான அரசு, ஆகியவற்றை வைத்து மற்ற நாட்டின், அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களை சிகப்புக் கம்பளம் விரித்து தங்கள் நாட்டிற்கு அழைக்கின்றனர்.
ஒருவருடைய சொத்தின் நிகர மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அவர்களை அதிக நிகர மதிப்புள்ள தனி நபர் என்கிறார்கள். பொதுவாக இவர்களை மில்லியனர்கள் என்று குறிப்பிடுவதுண்டு.
சொந்த நாட்டை விடுத்து, அன்னிய நாட்டில் மில்லியனர்கள் குடியேறுவது, கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. 2025ஆம் வருடம் மொத்தம் 1,42,000 மில்லியனர்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணம் படைத்தவர்கள் தங்கள் நாட்டில் குடியேறுவதால், தொழில் தொடங்க அதிக மூலதனம் கிடைப்பதுடன், வேலை வாய்ப்பும் உருவாகிறது. உலகில் சுமார் 30 நாடுகள், மற்ற நாடுகளின் பணம் படைத்தவர்களைத் தங்கள் நாட்டிற்கு விரும்பி அழைக்கின்றனர். அதைப் போலவே, சுமார் 30 நாடுகளிலிருந்து மில்லியனர்கள், அன்னிய நாட்டிற்கு குடி போகின்றனர்.
அன்னிய நாட்டிற்கு பணத்துடன் குடியேறுபவர்களில் முதலிடம் வகிப்பது கிரேட் பிரிட்டன். முன்னொரு காலத்தில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலிருந்து பலர் பிரிட்டனுக்கு குடியேறினார்கள். ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 31-ம்தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது. அதிலிருந்து மில்லியனர்கள் பிரிட்டனிலிருந்து வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இது வரை சுமார் 16500 பணக்காரர்கள் பிரிட்டனிலிருந்து வெளியேறியுள்ளனர். 2024ஆம் வருடம், அதிக எண்ணிக்கையில் சீன மில்லினியர்கள் வெளியேறி, சீனா முதலிடத்தில் இருந்தது. தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தில் இருப்பது பிரிட்டன். சீனாவிலிருந்து, புலன் பெயர்ந்தவர்களைக் காட்டிலும், பிரிட்டனிலிருந்து மற்ற நாடுகளுக்குக் குடியேறியவர்கள் இரண்டு மடங்கு.
அன்னிய நாட்டுக்கு குடியேறுபவர்களில் முதல் மூன்று இடத்தில் இருப்பவர்கள் பிரிட்டன், சீனா, இந்தியா. வியப்பான விஷயம், வசதியான வாழ்வைத் தேடி மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் பட்டியலில் வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளும் உள்ளன.
இவர்கள் எந்த நாடுகளுக்குச் செல்கிறார்கள். இதில் முதல் மூன்று இடங்கள் வகிக்கும் நாடுகள் ஒருங்கிணைந்த அரேபிய கூட்டமைப்பு, அமெரிக்கா, மற்றும் இத்தாலி. கனடா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒருங்கிணைந்த அரேபிய கூட்டமைப்புக்குச் செல்பவர்கள் 9800 மில்லினியர்கள். குறைந்த வரிகள், வளமான வாழ்க்கை ஆகியவை இதற்கு காரணம். அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்கா செல்பவர்கள் 7500 பணக்காரர்கள். காரணம் பல்வகைப்பட்ட பொருளாதாரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்.
தன்னுடைய நாட்டுக்கு வரும் பணம் படைத்தவர்களுக்கு ஒருங்கிணைந்த அரேபிய கூட்டமைப்பு தருவது என்ன?
கோல்டன் விசா அளிப்பதுடன், 5/10 வருடங்கள் புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு, விசா எடுப்பதற்கு உள்ளூர் மக்கள் சிபாரிசு தேவையில்லை. குடும்பத்தினர் விசாவுக்கு பரிந்துரைக்கலாம், வரி விதிப்பதில் எளிமை.
விசா வாங்குவதற்கு 2 மில்லியன் தினார் (₹ 4.66 கோடி) முதலீடு செய்யவேண்டும்.
அமெரிக்காவில் கோல்ட் கார்ட் பெறுவதற்கு 5 மில்லியன் அமெரிக்கன் டாலர் (₹ 41.5 கோடி) முதலீடு செய்ய வேண்டும்.
பணம் படைத்தவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு என்று சொல்லலாம்.