
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் நாளன்று, ‘பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள்’ (International Migrants Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மக்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். தங்கள் தாய்நாட்டிற்கு வெளியே சென்று வாழ்ந்த புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில், 17 கோடியே 30 லட்சம் பேர் என்றிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 28 கோடியே 10 லட்சம் என்று அதிகரித்தது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும். அதனைத் தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டு, டிசம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 18 ஆம் நாளை ‘பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள்’ என்று கடைப்பிடிப்பதென்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
பொதுவாக பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற ஏதாவதொரு காரணங்களால் பாதிக்கப்படுவோர், தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் சென்று பணி செய்கின்றனர். இவர்களைப் புலம் பெயர்ந்தோர் (Migrant) என்று வகைப்படுத்துகின்றனர்.
அதே வேளையில், சொந்த நாட்டிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தப்படாத நிலையில், தாங்களாகவே ஒரு நாட்டைத் தேர்வு செய்து, அங்கு வாழ வேண்டுமென்கிற விருப்பத்தின்படி ஒரு நபர் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ வரும் போது அவர் குடியேறியவர் (Immigrant) எனப்படுகிறார்.
போர், இயற்கைப் பேரழிவு, துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று வாழ முற்படுபவர்களை, அகதி (Refugee) என்கின்றனர்.
தனது சொந்த நாட்டிலிருந்து, ஏதாவதொரு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்படுபவர்கள், மற்றொரு நாட்டில் தஞ்சமடைந்து தாங்கள் வாழ அனுமதிக்கும்படி வேண்டி வாழ்பவர்களை, ‘தஞ்சம் வேண்டுபவர்’ (Asylum Seeker) என்கின்றனர்.
2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்ற புள்ளி விவரத்தின்படி, உலகளவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் ரசியா - 10.7 மில்லியன், மெக்சிகோ - 9.6 மில்லியன், இந்தியா - 7.9 மில்லியன், சீனா - 5.9 மில்லியன், உக்ரைன் - 5.6 மில்லியன், பெர்முடா - 5.4 மில்லியன், ஆப்கானிஸ்தான் - 4.8 மில்லியன், ஐக்கிய ராஜ்ஜியம் - 3.9 மில்லியன் பேர் எனும் அளவில் இருந்தது.
உலகளவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பட்டியலில் 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்ற கணக்கெடுப்பில், இந்தியா முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் பேர் வெளிநாட்டில் சென்று வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு அடுத்த நிலையில் மெக்சிகோ - 11.2 மில்லியன், ரசியா - 10.8 மில்லியன், சீனா - 10.5 மில்லியன், சிரியா - 8.5 மில்லியன், பெர்முடா - 7.4, பாகிஸ்தான் - 6.3 மில்லியன் பேர் என்று மாறியிருக்கிறது.
2000 ஆம் ஆண்டில் முதலிரு இடங்களிலிருந்த ரசியா மற்றும் மெக்ஸிகோவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.