
கடவுள் மனிதனைப் படைத்தார், பறவைகளையும் விலங்குகளையும் படைத்தார், மரம், செடி, கொடி, தானியத்தை படைத்தார், ஆகாயம், பூமி, நிலம், நெருப்பு, காற்று என அனைத்தையும் படைத்தார். ஆனால் அவர் எவ்வித பேதமுமின்றி எல்லாவற்றையும் படைத்தார்.
அவர் அன்று முதல் இன்று வரை அப்படித்தான் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் படைத்த எந்த இயற்கையும் நம்மை ஆட்டி படைக்க வில்லை. எதுவும் மாறவில்லை மனிதனைத் தவிர. விலங்குகளும் பறவைகளும் அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன.
ஆனால் உங்களுக்குத் தெரியுமா? மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் எல்லோரையும் தலை எது கால் எது என்று புரியாத அளவிற்கு ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது.
புரியவில்லையா எது என்று?
ரூபாய், பைசா, டப்பு, money, டாலர், என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற பணம் தான் உலகத்தில் உள்ள மக்களை ஆட்டி படைக்கிறது.
குடிசை வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பாவப்பட்ட குழந்தை, மாளிகையில் பிறந்தால் அதிர்ஷடக்கார குழந்தை.
எனக்கு ஒன்று புரிய வில்லை, கடவுள் எல்லோரையும் சரி சமமாகத் தானே படைக்கிறார்? பின் ஏன் இந்த பாகுபாடு?
அடி மட்டத்தில் இருப்பவர்கள் அங்கேயே அமுக்கப் பட்டிருக்கிறார்கள். கோடீஸ்வரர்கள் கவலையே இல்லாமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடு நிலையில் இருப்பவர்கள் மேலேயும் ஏறமுடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் தவிக்கிறார்கள்.
நாமே ஏற்படுத்திய இந்த பணத்தை வைத்து ஏன் இந்த பிரிவினை?
சூரியன் குடிசைப் பகுதியாக இருந்தாலும் சரி, மாளிகைப் பகுதியாக இருந்தாலும் சரி ஒரே நேரத்தில் ஒரே திசையில் தானே உதிக்கவும் மறையவும் செய்கிறது? அதாவது காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறைகிறது... இதில் ஏதாவது பாகுபாடு இருக்கிறதா?
இந்த ரூபாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? நம் ரூபத்தை மாற்றக் கூடிய ஒரு மாயை தான் ரூபாய். ரூபாயிற்கு சொல்லபட்ட இந்த அர்த்தம் முழுக்க முழுக்க என் சிந்தனைக்குரியது. சரியா என்பது எனக்குத் தெரியாது.
பணத்தை வைத்து கொண்டு காடுகள் மற்றும் மலைகளையெல்லாம் அழித்து விட்டு அடுக்கடுக்காக வீடுகளையும், அலுவலகத்தையும் கட்டி விட்டோம். பிறகு ஏன் வெள்ளம் வராது? மழை நீர் போகும் பாதயை நாம் மூடிவிட்டால் அது என்ன செய்யும்? தட்டு தடுமாறி எங்கேயாவது நுழைவதால் சேதமாகிறது. எல்லாவற்றையும் நாம் செய்து விட்டு பழியை கடவுளின் மீது போடுவது நியாயமா?
அந்த காலத்தில் யார் வீட்டலேயாவது மின்விசிறி இருந்ததா? இல்லையே...மரங்களே தேவையான காற்றை அள்ளி கொடுத்தன. மரங்களை நாமே வெட்டி விட்டு இப்போது அந்த காற்றையும் குறை கூறுகிறோம்.
அது மட்டுமா? அப்பப்பா! இந்த வாகனங்கள் படுத்தும் பாடு, ஏராளம், ஆகாயத்தை தன் கரும்புகையால் ஓட்டையாக்கி விட்டது. அதன் காரணமாக சூரியனின் வெப்பம் நம்மை நேரடியாக தாக்குகிறது.
இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? பெரிய பெரிய கோவில்களில் அதிகமாக பணம் கொடுத்தால் அவர்கள் கூட்டத்தில் நிற்காமல் மிக அருகில் சென்று கடவுளை தரிசிக்கலாம். கொஞ்சம் கொடுத்தவர்கள் சிறிது நேரம் கூட்டத்தில் நிற்க வேண்டி இருக்கும், பாவம் பணமே இல்லாதவர்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டி இருக்கும். நம்மை படைத்த அந்த கடவுளை தரிசிப்பதற்கு கூட பணம் தேவை.
சரி, பணத்தை நாம் தயாரித்தோம் நம் வசதிகளுக்காகவும் தேவைக்காகவும் தான், ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் அது இல்லாதவர்களை நாம் ஏன் கேவலப்படுத்த வேண்டும்? இதில் இவர்களின் கருத்து, இன்னும் பிரமாதம்... என்ன தெரியுமா? பணம் இல்லாதவன் போன பிறவியில் பாவம் செய்திருக்கிறான், பணக்காரர்கள் புண்ணியம் செய்திருக்கிறான் என்று. யாருக்குமே தெரியாது அவர்களின் பூர்வ ஜென்மத்தைப் பற்றி. பணம் எப்படி எல்லாம் பேச வைக்கிறது, நீங்களே பாருங்கள்..
உங்களிடம் இருக்கும் பணத்திலிருந்து இல்லாதவர்களுக்கும் கொடுங்கள், எல்லோரையும் ஒன்றாக பாவியுங்கள்...
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் கடவுள் தந்த அந்த இயற்கையை காப்பாற்றி அதைப் பேணுவதற்கு முயற்சி செய்யுங்கள்!