

விஞ்ஞானம் விளக்க முடியாத பல விசித்திர மனிதர்கள் காலம் தோறும் தோன்றி, அனைவரையும் வியக்க வைப்பது வழக்கம். அப்படி ஒரு அதிசய மனிதராகத் திகழ்ந்து உலகை பிரமிக்க வைத்தவர் டேனியல் டக்ளஸ் ஹோம் என்னும் அமெரிக்கர்.
(பிறப்பு: 20-3-1833 மறைவு: 21-6-1886)
இவரது அபூர்வ அதீத உளவியல் ஆற்றல்கள் பல. இவரை தீ சுடாது; எரிக்காது! எரியும் நிலக்கரியைக் கையில் எடுப்பார். கொள்ளிக்கட்டையால் சொறிந்து விட்டுக் கொள்வார். ஒன்றும் இவருக்கு நேராது. இவரது இந்த அதிசய சக்தியைப் பார்வையிட ஏராளமானோர் கூட்டமாகக் கூடுவதுண்டு.
அப்படி வரும் பார்வையாளர்களில் ஒருவருக்கும் அவர் இந்த சக்தியை மாற்றுவார். அப்படி இந்த சக்தியைப் பெற்ற பார்வையாளரும் கொதிக்கும் பொருள்களைக் கையில் எடுப்பார். அவர்களுக்கும் ஒன்றும் நேராது. இவரது இந்த அதீத ஆற்றலினால் ஏராளமான அரசர்களும், செல்வந்தர்களும் இவருக்கு நெருங்கிய நண்பர்களாயினர்.
பிரிட்டனில் இருந்த பிரிட்டிஷ் சொஸைடி ஃபார் சைகிகல் ரிஸர்ச் இயக்குநரான சர் வில்லியம் க்ரூக்ஸ் (Sir William Crookes) இவரை ஆராய முன் வந்தார்.
ஆரஞ்சு அளவில் உருண்டையாக இருந்த ஒரு நிலக்கரித் துண்டை இவர் முன்னிலையில் கையில் எடுத்துக் கொண்டார் ஹோம். அதை ஊதவே அது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அவர் கைகளுக்கு ஒன்றும் நேரவில்லை. சற்று நேரம் கையில் வைத்து விட்டு நிலக்கரித் துண்டை ஹோம் கீழே வைத்தார். அவரது கை ஒரு அழகிய இளம் பெண்ணின் கை போல பளபளத்தது. சோதனைக்கு முன்னர் க்ரூக்ஸ் அவர் கையை நன்கு பார்த்தார். அதில் ஏதேனும் மூலிகைப் பசையோ அல்லது ஆயின்மெண்ட் ஏதாவது கையில் தடவப்பட்டிருக்கிறதா என்று பார்த்து ஒன்றுமில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.
அயர்லாந்தைச் சேர்ந்த லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் ஹோமின் சரிதத்தை எழுதியுள்ளார். Experiences in Spiritualism with D. D. Home என்ற அடேரின் புத்தகம் பல சுவையான நிகழ்ச்சிகளைச் சொல்கிறது.
ஹோமுடன் கூடவே பயணிப்பது அடேரின் வழக்கம். ஒரு முறை அடேரின் முன்பாக ஹோம் எரியும் தீயில் தன் முகத்தை விட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டினார். அவரது முகத்தில் தீக்காயமே காணப்படவில்லை.
இன்னொரு சமயம் ஒரு எரியும் துண்டை எடுத்து அடேரின் கையில் ஹோம் கொடுத்தார். அடேரின் கை சுடவே இல்லை. சற்று நேரம் கையில் வைத்திருந்த அந்த எரி துண்டை அவர் கீழே வைத்தார். கை எப்போதும் போலவே இருந்தது.
இன்னும் பல அதிசய ஆற்றல்களும் அவருக்கு இருந்ததைப் பல பார்வையாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.
ஒரு முறை மூன்று பார்வையாளர்கள் முன்பு அவர் இரண்டாவது மாடியில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே சென்று பறந்தார். பின்னர் மீண்டும் உள்ளே வந்தார். கயிறைக் கட்டி பாதுகாப்பாக அவர் பறந்தாரா என்று ஆராயப்பட்டது. அப்படி ஒரு கயிறும் காணப்படவில்லை.
INCIDENTS IN MY LIFE என்று ஒருபுத்தகத்தை எழுதியுள்ள ஹோம், அதில் 1852ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் செய்த சாகஸ செயல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். சவுத் மான்செஸ்டர் நகரில் பட்டு தயாரிப்பாளரான வார்ட் செனய் என்பவரின் வீட்டில் பல பார்வையாளர்களின் முன்னர் தான் இருமுறை பறந்து கூரையைத் தொட்டதாக அவர் கூறுகிறார்.
இறந்தவருடன் பேசும் ஆற்றலும் ஹோமுக்கு இருந்தது. இவரது ஐரோப்பிய விஜயம் மகத்தான வெற்றியைக் கண்டது. மூன்றாம் நெப்போலியன் முன்னால் ஒரு அமர்வை நடத்திக் காட்டினார். அயர்லாந்து ராணியின் முன் இவர் நடத்திக் காட்டிய அபூர்வ காட்சிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. “மிக மிக ஆச்சரியகரமானவை. இவரைப் பார்த்ததில் நான் சந்தோஷப்படுகிறேன்” என்றார் அவர்.
பிரபல நாவலாசிரியரான சர் ஆர்தர் கானன் டாயில் இவரை வெகுவாகப் புகழ்ந்தார்.
அதே சமயம் இவரை கடுமையாக விமரிசித்தவர்களுள் முக்கியமானவர் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங்.
“இவர் செய்வது எல்லாம் மோசடி” என்று அவர் கூறிய அதே வேளையில் அவருடன் கூடவே சென்று ஹோம் நடத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்ட கவிஞரின் மனைவி, இவையெல்லாம் உண்மை தான் என்று அடித்துக் கூறினார். கவிஞருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த இந்தக் கருத்து வேறுபாடு நெடுங்காலம் தொடர்ந்தது.
53 வயதில் மறைந்த ஹோம், காலத்தால் மறக்கப்படாமல் இன்றும் அதிசய மனிதராகவே பேசப்பட்டு வருகிறார். உலகம் கண்ட அதிசய மனிதர்களுள் ஹோம் ‘தீயும் கூட எரிக்க முடியாத வியப்பூட்டும் மனிதர்’ தான்!