ஐம்பதிலும் ஆசை வரும்... எதற்கு?
பணி ஓய்வு பெற்றவர்கள் ஐம்பது வயதாகியும் புதிய முயற்சிகளை மேற்கொள்வது இப்போது அதிகமாக காணமுடிகிறது. முப்பது நாற்பது வருடங்கள் உழைத்த பின்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடலில் இவர்கள் இருப்பதற்கு என்ன காரணம்?
குழந்தைகளின் திருமணம் போன்ற கடமைகளை முடித்த பின்னும், ஓரளவுக்குச் செல்வம் சேர்ந்து ஓய்வூதியம் பெற்றோ அல்லது முதலீட்டில் வட்டி பெற்றோ பணத்தேவையும் பூர்த்தி செய்த பின்னும் உழைப்பு முடிந்ததாக இவர்கள் உணரவில்லை. உழைத்ததும் மனத்திற்குத் திருப்தியைத் தந்து ஓய்விற்கு இவர்களை இட்டுச் செல்லாதது என்?
இத்தனை வருட உழைப்பும் குடும்பத்திற்காக உழைத்ததாகதான் நினைக்கிறார்கள். தனக்காக, தான் விரும்பியதைச் செய்ய நினைத்ததைச் செய்ததாக உணரவில்லை. வருவாயை அதிகமாக பிரதானப்படுத்தாமல் மனத் திருப்திக்காக நேரத்தைச் செலவிட்டு உழைக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறார்கள். எப்போதோ தொலைத்த வாழ்கையைத் தேடி மீட்டுவர முயல்கிறார்கள்.
அறுபதுகளில் பிறந்தவர்கள், எண்பதின் பிற்பகுதிகளில் அல்லது தொண்ணூறின் முற்பகுதியில், பணிக்கு சென்றிப்பார்கள். விருப்பப்பட்ட படிப்போ, மனம் விரும்பிய வேலையோ பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கப்படவில்லை அந்த காலகட்டங்களில். பெற்றோரின் நிலை, விருப்பம், அக்கா தங்கைகளின் கல்யாணம் குடும்பத்தை நிலைப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவை பிரதானப்பட்டு தனது ஆசை, விருப்பம் புறந்தள்ளி, படிப்பும், வேலையும் அமைந்த காலகட்டம். சற்றே ஸ்திரப்பட்டவுடன் கூட, பணி மாற துணிச்சலும் வாய்ப்பும் சூழலும் அனுமதி தராது.
ஓடி முடித்த பின்னும் எஞ்சிய விருப்பம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு இருக்கிறது இவர்களிடம். தங்களது மன விருப்பத்தைப் பூர்த்தி செய்து, சொச்சமாக வாழும் மிச்சக் காலத்தைக் கழிக்க எண்ணுகிறார்கள்.
ஆர்வ மிகுதியால் வியாபாரம் செய்வோரும் விவசாயம் செய்வோரும் இதில் அடங்குவர். குடும்பம் சார்ந்து பேரப் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டோ, கிருஷ்ணா ராமா என்று ஆன்மிகம் சார்ந்து திருப்தி அடையாமல் இருப்பவர்கள் தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். மறுபடியும் குடும்ப சுழலில் அகப்பட விருப்பம் இல்லாதவர்கள் தான் இப்படி விட்டு விடுதலை ஆகி நிற்கத் துணிகிறார்கள், ஆனால் சற்று காலம் தாழ்த்தி.
இருபது அல்லது இருபத்தைந்து வயது வரை படித்துவிட்டு, பின்பு ஒரு முப்பத்தைந்து - நாற்பது வருடங்கள் உழைத்தபின் கிடைக்கும் பணி ஓய்வு மனமும் உடலும் ஓய்வை நாடிச் செல்லவேண்டிய நேரம். அப்போதும் இவர்களிடம் தாங்கள் விரும்பியதை மனதுக்கு பிடித்ததை செய்யவில்லை என்ற ஏக்கம் எஞ்சியிருக்கிறது. அந்த மனக்குறையை நீக்க பிரயத்தனப்படுகிறார்கள்.
பணி புரியம்போதே, பணியின் ஊடாக, தங்களது விருப்பத்தை, செயலை பகுதி நேர பணியாக செய்பவர்களும் இருக்கிறார்கள். பணிஓய்வு பெற்றபிறகு அதனை முதன்மை தொழிலாக செய்பவர்களும் இருக்கிறார்கள். மற்றும் சிலருக்கு செய்யும் பணி தனது விருப்பத்தை செய்ய நேரமோ சூழலோ தடையாக இருக்கும். எனவே ஓய்வுக்கு பிறகு புதிய பாதையை தொடங்குவர். அவர்களது பணியை ஒட்டியோ அதற்கு தொடர்பான வேலைகளையோ சுயமாக செய்பவர்களும் உண்டு.
வேலை என்பது பலவிதத்தில் பலரையும் கட்டுப்படுத்திவிடுகிறது. ஒரு வரையறைக்குள் மேலதிகாரி அல்லது நிறுவன விருப்பம் மற்றும் திட்டங்களுக்கு ஒட்டியே செயல்படமுடிகிறது. நமது எண்ணம் அல்லது யோசனை வளர்ச்சியை புதிய பாதையை திறக்கும் என்பதை நம்மாலும் விளக்கி சொல்ல முடிவதில்லை. அதனை கேட்டு செயல்படுத்தவும் நிறுவனம் தயாராக இல்லை. தனக்குள் இருக்கும் அனுபவத்தை திறமையை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டோம், நமக்காக அதனை பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. பொருள் ஈட்டும் நோக்கத்தை பிரதானப்படுத்தாமல், தனது திறமையை செயல்படுத்தும் விதமாகவோ அதனை அமைத்துகொள்கிறார்கள்.
KFC நிறுவனர் அறுபது வயதுக்கு பிறகு வெற்றிபெற்றதை உதரணமாக காட்டுபவரும் உண்டு. அப்படிப்பட்ட உலகளாவிய வாளர்ச்சி இல்லையென்றாலும் தனது வட்டத்திலாவது தான் வென்றுவிட்டதை அறிவிக்க துடிக்கிறார்கள்.
அன்றைய காலத்தை விட இப்போது வாய்ப்புகளும் நிரம்பி கிடக்கின்றன. முன்பெல்லாம் ஒய்வு பெற்றவர்களை பணிக்கு அமர்த்தும் வழக்கம் மிக குறைவு. இப்போது முன்னணி காப்பீடு நிறுவனங்கள் அவர்களை நோக்கியே அழைப்பு விடுப்பதை பார்க்க முடிகிறது. வீட்டில் இருந்தபடியே பணி செய்யவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் இணைய வாய்ப்புகளும் பெருகிவிட்டன.
உதரணமாக ஒருவர் பாடங்கள் கற்றுத்தர விரும்பினாலோ, பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுத விரும்பினாலோ அவர்கள் இந்த இணைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பணி ஒய்வு சாய்வு நாற்காலியைத்தேடி செல்ல விடாமல் மீண்டும் உழைக்க இவர்களை துணிபு கொள்ள செய்வது இவர்களது மனதளவில் முடிக்கப்பட்டத பணிகளா அல்லது செய்த பணியின் மனதிருப்தி இன்மையா, வேறு தேடல்களா என்பது விடை தேடவேண்டிய கேள்வி தான்.