
'தேவதாஸ்' என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவனது தாடியும் அவனுடன் இருக்கும் ஒரு நாயும் ஆகும். ஆனால், உண்மையில் தேவதாஸ் வாழ்க்கையில் அவை இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காதல் தோல்வியில் உயிர் பிரிந்த தேவதாஸ் பற்றி அறிய சிறிது நேரம் செலவிடலாமா? வாருங்கள் சென்று பார்ப்போம்.
தேவதாஸ் உண்மையில் யார்
தேவதாஸ் என்பவன் நிஜத்தில் வாழ்ந்த மனிதன் அல்ல. 1917 இல் சரத் சந்திர சட்டோபாத்யாய் என்னும் பெங்காலி எழுத்தாளர் எழுதிய தேவதாஸ் என்ற நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு கற்பனைக் கதாபாத்திரம். தேவதாஸ் மற்றும் பார்வதி (பாரோ) சிறு வயது முதலே தோழன் தோழியாக வளர்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தேவதாஸ் ஒரு பணக்கார ஜமீன்தாரின் மகன். பார்வதி தேவதாஸ் அளவுக்கு வசதி படைத்தவள் அல்ல. ஆனால், இருவருக்கும் இடையேயான காதல் உண்மையானதாகவே இருந்தது.
தேவதாஸின் தவறான முடிவு
இருவரின் காதலை அறிந்த பாரோவின் தாய் தேவதாஸ் வீட்டிற்குச் சென்று சம்பந்தம் பேசினார். ஆனால், தேவதாஸின் தந்தை சமூக அந்தஸ்து, கௌரவம், குடும்ப மதிப்பு ஆகியவற்றைக் காட்டி சம்பந்தத்தை நிராகரித்து விட்டார். பின் பாரோ தேவதாஸிடம் கேட்க, அவனும் அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாது எனக் கூறி அனுப்பி விட்டான்.
தேவதாஸின் மன வருத்தம்
இந்தச் சம்பந்தம் கைகூடாததால் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பணக்கார முதிய ஆணுக்கு பாரோவை அவளது பெற்றோர்கள் மணமுடித்தனர். பாரோவிற்கு தேவதாஸ் உடன் கொண்ட காதலை மறக்க முடியவில்லை. எனினும், குடும்பப் பொறுப்பினையும், கல்யாணம் செய்தவருக்கு உண்மையாக வாழ வேண்டும் என்ற முடிவினைத் தேர்ந்தெடுத்தாள். பாரோவிற்குத் திருமணம் நடந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாத தேவதாஸ் மிகவும் மனம் உடைந்து, தன்னால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது என்று உணர்ந்து, அதிலிருந்து வெளிவர இயலாமல் பெரிய மன வலியினைச் சுமந்துகொண்டு வாழ்ந்தான். பின் அந்த வலியினை மறக்க நண்பன் மூலமாக மதுவிற்கு அடிமையானான்.
தேவதாஸின் முடிவு
மதுவிற்கு அடிமையாகி தன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட தேவதாஸ் ஒரு நாள் பாரோவினை சந்திக்க அவளது வீட்டிற்குச் சென்றான். அவளைச் சந்திக்காமலேயே அவள் வீட்டின் முன் மரணிக்கிறான் தேவதாஸ். ஆனால், இறந்தவன் தேவதாஸ் என அறிந்தும் அவனை வெளியே வந்து பார்த்து அவன் முன் அழுக முடியாமல் சமூகக் கட்டமைப்பின் காரணமாக பாரோ தவித்தாள் என கதை முடிகிறது.
தேவதாஸ் திரைப்படங்கள்
இந்த நாவலைத் தழுவி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில் 1955 இல் பிமல் ராய் இயக்கிய இந்தி தேவதாஸ் (திலீப் குமார் நடித்த) படத்தில் தான் தாடியும், ஒரு நாயும் காதல் தோல்வியின் சின்னமாக முதலில் பயன்படுத்தப்பட்டது.
பின் 2002 இல் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் என்னும் படம் இளைஞர்களிடையே அந்தப் பெயருக்கு மீண்டும் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
இக்கதை ஒருவன் காதல் தோல்வி அடைந்து எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதனை சமூகத்திற்குத் தெரியப்படுத்துகிறது. என்ன தான் நாவலின் தலைப்பு தேவதாஸ் என இருந்தாலும், பாரோ என்பவள் அவனுடன் கொண்ட காதலைத் தன்னுள்ளே வைத்துக்கொண்டு வாழ்ந்தாள். எந்தக் காதலியும் தன் காதலன் அவனின் வாழ்க்கையில் அவளை நினைத்து வருந்தி நாசமாகிக் கொள்வதை விரும்ப மாட்டாள்.
தேவதாஸ் இறக்கிறான் என்று கதை முடிகிறது. ஆனால், பாரோ அவனை நினைத்து தினம் தினம் இறப்பாளல்லவா? மேலும், தேவதாஸ் எனும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் நூறு ஆண்டுகள் கழித்தும் இன்றும் பல இளைஞர்களிடையே வாழ்ந்து வருகிறான் என்பது, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் சமூகத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு சான்று.