ஆங்கிலத்தின் மிக நீண்ட சொல் எது தெரியுமா?

Alphabets
Alphabets

தேனி மு. சுப்பிரமணி

பாலூட்டிகளில் காணப்படும் மிகப்பெரிய புரதச் சத்தான டைட்டின் (Titin) என்பதன் வேதியியல் பெயரான ”methionylthreonylthreonylglutaminylalanyl... isoleucine” என்று 189,819 எழுத்துகளைக் கொண்ட சொல்லே, ஆங்கில மொழியில் அதிகமான எழுத்துகளைக் கொண்ட மிக நீளமான சொல்லாகச் சொல்லப்படுகிறது. தொழில்நுட்பச் சொல்லாக உருவாக்கப்பட்ட இச்சொல் ஆங்கில அகராதியில் இடம் பெறவில்லை; இது ஒரு சொல்லா? என்ற கருத்து வேறுபாடும் இருக்கத்தான் செய்கிறது.

அதற்கடுத்ததாக, “Methionylglutaminylarginyltyrosylglutamyl... serine” எனும் 1,909 எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பச் சொல் இருக்கிறது. இச்சொல்லும் ஆங்கில அகராதியில் இல்லை.

முக்கியமான நூலாசிரியர் ஒருவரால் உருவாக்கப் பெற்றதாகச் சொல்லப்படும், “Lopadotemachoselachogaleokranioleipsano... pterygon” எனும் 183 எழுத்துகளைக் கொண்ட இலக்கியச்சொல் இருக்கிறது. ஆனால், இச்சொல்லும் ஆங்கில அகராதியில் இடம் பெறவில்லை. இது பழமையான கிரேக்க மொழி எழுத்துப் பெயர்ப்புச் சொல்லாகக் கருதப்படுகிறது.

இதே போன்று, தொடர்ந்து கனிம அல்லது உலோகப் புழுதியை சுவாசித்தால், மனித நுரையீரலில் தோன்றும் நோய்க் குறிப்பாக,  சிலிக்கா புழுதியால் ஏற்படும் நோயைக் குறிப்பிடும் “Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis” எனப்படும் 45 எழுத்துகளைக் கொண்ட சொல்லே ஆங்கில அகராதியில் காணப்படும் மிக நீண்ட சொல்லாகும். இச்சொல்லைச் சுருக்கமாக, silicosis என்று அழைக்கின்றனர். இந்தச் சொல் ஆங்கிலத்தில் நீளமான சொல்லாக இருக்க வேண்டுமென்பதற்காகவே உருவாக்கப்பட்ட சொல்லாகும். 

'மேரி பாப்பின்ஸ்' திரைப்பட பாடலில் வரும் ”Supercalifragilisticexpialidocious” எனும் 34 எழுத்துகளைக் கொண்ட சொல் ஆங்கில அகராதியில் இடம் பெற்றிருக்கிறது.

மேரி பாப்பின்ஸ் திரைப்படத்தில்...
மேரி பாப்பின்ஸ் திரைப்படத்தில்...

தொழில்நுட்பச் சொல்லான, “Pseudopseudohypoparathyroidism” எனும் 30 எழுத்துகளைக் கொண்ட சொல் ஒன்றும் இருக்கிறது. இச்சொல் ஒரு சில ஆங்கில அகராதிகளில் இடம் பெற்றிருந்தாலும், முக்கியமான ஆங்கில அகராதிகளில் இடம் பெறவில்லை.

ஒரு பொருள் அல்லது செயலை முக்கியமானதல்ல என்று கருதும் ஆங்கிலச் சொல்லான ”Floccinaucinihilipilification” எனும் 29 எழுத்துகளைக் கொண்ட சொல், தொழில்நுட்பமில்லாத, எதிர்ப்பற்ற சொல் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தச் சொல்லும் ஒரு உருவாக்கப்பட சொல்லாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஹை ஹீல்ஸ் செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
Alphabets

இங்கிலாந்தின் மதப்பிரிவுக்கு எதிரான அரசியல் தத்துவம் என்று குறிப்பிடப்படும் “Antidisestablishmentarianism” எனும் 28 எழுத்துகளைக் கொண்ட சொல், தொழில்நுட்பமற்ற மற்றும் உருவாக்கப்படாத மிக நீளமான ஆங்கிலச் சொல்லாகும். எனவே, இந்தச் சொல்லை உலகின் மிக நீண்ட சொல் இதுதான் என்று குறிப்பிடுவர். இந்தச் சொல் ஆங்கில அகராதியில் இடம் பெற்றிருக்கிறது.

இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்ட, “Honorificabilitudinitatibus” 27 எழுத்துகளைக் கொண்ட இச்சொல் வில்லியம் சேக்சுபியர் பாவித்த நீண்ட சொல், ஆங்கிலத்தில் உயிரையும் மெய்யையும் மாற்றும் அம்சமுள்ள நீண்ட சொல் எனப்படுகிறது. இந்தச் சொல் சில ஆங்கில அகராதிகளில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த சொற்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com