ஜனவரி 1ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் 2025ம் வருடத்தை வரவேற்கக் காத்திருக்க, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியா, 8 வருடங்கள் பின்தங்கி, 2017ம் வருடத்திலேயே இருக்கிறது. இதன் காரணம், எதியோப்பிய நாட்டின் புது வருடம், மற்ற நாடுகளைப் போல ஜனவரி 1ம் தேதி தொடங்குவதில்லை. நம்முடைய நாட்காட்டியின்படி, செப்டம்பர் 11ம் தேதிதான் அவர்களின் புது வருடம் தொடங்குகிறது. புத்தாண்டு தினத்தை அவர்களுடைய மொழியான அம்ஹாரிக்கில் ‘என்குடாடாஷ்’ என்று சொல்கிறார்கள். இதன் அர்த்தம் ‘நகைகள் பரிசு.’ இந்த நாள் மழைக்காலத்தின் முடிவில் வருகிறது. அந்த நாளில், எதியோப்பியா நாட்டில் மட்டும் வளரும் ‘அடேஅபேபா’ மலர்கள் பூக்கின்றன. கிரிகோரியன் நாள்காட்டிக்கும், எதியோப்பியன் நாள்காட்டிக்கும் ஏழு அல்லது எட்டு வருடங்கள் வித்தியாசம்.
1582ல் போப் கிரிகோரி அறிமுகப்படுத்திய நாள்காட்டியை உலக நாடுகள் பலவும் ஒப்புக் கொண்டன. இது இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை ஒட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டை இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டாக எதியோப்பியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆண்டிற்கு ஏழு அல்லது எட்டு வருடங்கள் கழித்து இயேசு பிறந்ததாக, எதியோப்பியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எதியோப்பியாவின் நாள்காட்டி, எகிப்து நாட்டை மையமாகக் கொண்ட ‘ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் சர்ச்’ நாள்காட்டியை, ஒத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஜனவரி 1, புத்தாண்டு நாள் குளிர்காலமான வறண்ட பருவத்தில் வருகிறது. ஆனால், செப்டம்பர் 11, மழைக்காலம் முடிந்தவுடன், எங்கும் பச்சைப்பசேல் என்றிருக்கும் பருவத்தில் வருவதால், எங்களுடைய முடிவு சரியானது என்று கூறுகிறார்கள் எதியோப்பிய மக்கள்.
சூரிய, சந்திர அமைப்பை ஒட்டி இருக்கும், எதியோப்பியாவின் நாள்காட்டியில் 13 மாதங்கள். இவற்றில் 12 மாதங்கள், மாதத்திற்கு 30 நாட்கள், 13வது மாதம் 5 அல்லது லீப் வருடங்களில் 6 நாட்கள். “நாங்கள் தனித்துவமானவர்கள். எங்கள் நாடு காலனி ஆதிக்கத்தின் கீழ் வரவில்லை. எங்களுக்கென்று தனி மொழி, கலாசாரம் உள்ளது” என்கிறார்கள் இந்த நாட்டு மக்கள்.
ஆனால், இந்த எதியோப்பிய நாள்காட்டி, இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. மற்ற நாடுகளுடன் கலாசார தொடர்பு, வர்த்தகம், ஆகியவற்றிலும் எதியோப்பிய மக்களுக்கு இது சற்றே சிரமம்தான். தலைநகர், முக்கிய நகரங்களில் எதியோப்பிய மற்றும் ஆங்கில நாள்காட்டி இரண்டும் உபயோகித்து வந்தாலும், கிராமப் பகுதிகளில் எதியோப்பிய நாள்காட்டி மட்டுமே பழக்கத்தில் இருக்கிறது. அன்னிய நாட்டிற்கு படிப்பு மற்றும் வேலை நிமித்தம் விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு, பிறந்த தேதி கொடுத்து, சான்றிதழில் சரியான மேற்கத்திய நாள்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளதா என சரிபார்ப்பது பெரிய சவாலாக உள்ளது.
நாள், மாதம், வருடம் ஆகியவை மட்டுமே எதியோப்பியாவில் மற்ற நாடுகளை விட வேறாக இல்லை. இவர்கள் கடிகார நேரமும் மாறுபடுகிறது. புதிய நாள் இந்த நாட்டில் நள்ளிரவில் பிறப்பதில்லை. சூரியன் உதயத்தில் நாள் பிறக்கிறது. ஆகவே, மற்ற நாடுகளில் காலை ஏழு மணியென்றால், எதியோப்பியாவில் காலை மணி ஒன்று. எல்லோரும் உறங்கும் நேரம் எப்படி காலை மணி ஒன்றாக முடியும். ஆகவே, நேரத்தைக் கணிப்பதில் எங்கள் முடிவு சரியானது என்பது அவர்கள் கருத்து.
ஆனால், இதனால் பல சிக்கல்களைச் சந்திக்கவேண்டி நேருகிறது. விமானம் புறப்படும் நேரம், பரீட்சை நேரம், நேர்காணலுக்கான நேரம் ஆகியவற்றை, எதியோப்பிய நேரம், மேற்கத்திய நேரம் என்று இரண்டிலுமே குறிப்பிடாவிட்டால், விமானத்தைத் தவறவிடுதல், பரீட்சை, நேர்காணல் ஆகியவற்றிற்கு தவறான நேரத்தில் செல்லுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
எதியோப்பிய விமான சேவைகளில், பயணிகள் சிரமத்தைப் போக்குவதற்காக, விமான நுழைவுச் சீட்டில் மேற்கத்திய நாள்காட்டியையும், நேரத்தையும் உபயோகிக்கிறார்கள். தற்போது புழக்கத்தில் இருக்கின்ற ஸ்மார்ட் ஃபோன் வகை கைபேசியினால், நாள், நேரம் ஆகியவற்றிலுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணப்படும் என்பது இந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.