
எம்.ஜி.ஆர் மறைந்து முப்பத்து ஆறு வருடங்கள் முடிவடைந்து விட்ட போதிலும், எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தில் கட்டுண்டு கிடக்கும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்ஜி.ஆரைப் போன்றே உடைகளை அணிந்து, அவரைப் போன்று ஒப்பனை செய்து கொள்பவர்கள், அவர் திரைப்படங்களில் பயன்படுத்திய உரையாடல்களைத் தங்கள் பேச்சுக்களில் உதாரணமாகச் சொல்பவர்கள், அவர் நடித்த திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளைத் தேடிச் சென்று இன்றும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அவர் நடித்த படங்களைக் குறுந்தகடுகளாக வாங்கி வந்து அதனைத் தொலைக்காட்சியில் அடிக்கடித் திரையிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், எம்ஜிஆரைத் தங்கள் வழிகாட்டியாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள், எம்ஜிஆரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டிருப்பவர்கள் என்று எம்ஜிஆர் மேல் தீவிரப் பற்று கொண்டவர்கள் எத்தனையோ பேர் இன்னும் இருக்கின்றனர்.
இவர்களெல்லாம் எம்ஜிஆரால் பயனடைந்தவர்கள் அல்ல. எம்ஜிஆர் நடிப்பில் கவரப்பட்டு, அவர் மேல் தீராத பற்று கொண்டவர்கள். அவர் நடித்த திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மேல் அதிகமான ஈடுபாடு கொண்டு, அவரைப் போலவேத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அவர் மறைந்து விட்ட நிலையிலும், அவரை மறக்க முடியாமல், இன்னும் தங்கள் நினைவில் நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர்கள். இப்படித் தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று பல நாடுகளிலும் அவருக்கென்று தனி விசிறிகள் இன்னும் இருக்கின்றனர்.
அவர்களில், தேனி பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருக்கும் வசந்தம் தங்கும் விடுதி மற்றும் உணவகத்தின் மேலாளராகப் பணியாற்றிய பி.நாகராசன் என்பவரும் ஒருவர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்டவர்.
1966 ஆம் ஆண்டு ‘விஜயா இன்டர்நேசனல்’ பட நிறுவனத்திற்காக நாகிரெட்டி தயாரிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப்பிள்ளை' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், ராமு, இளங்கோ எனும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இருவரில் ராமு பயந்த சுபாவமுடையவர், கள்ளங்கபடமில்லாதவர். இளங்கோ கிராமத்து இளைஞராகவும், நல்ல உழைப்பாளியாகவும், அநீதியை எதிர்த்துப் போராடுபவராகவும் இருப்பார். அந்த இரு வேடங்களாலும் கவரப்பட்ட பி. நாகராசன், அன்றிலிருந்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறினார். அன்றிலிருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து நிறையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
பொதுவாக, எம்ஜிஆர் நடித்து வெளியான அனைத்துப் படங்களிலும் இடம் பெறும் வசனங்களில் சான்றோரை மதித்தல், இளைஞர்களுக்கு நல்வழி காட்டுதல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் போன்றவை அதிகம் இடம் பெற்றிருக்கும். இந்த வசனங்கள் எல்லாம் அவரது இதயத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட நிலையில், எம்.ஜி.ஆர் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்த நாகராசனுக்கு, எம்ஜிஆர் மீது தீராத பற்று ஏற்பட்டது. அந்தத் தீவிரப்பற்றின் காரணமாக, அவர் படத்துடன் வெளியான செய்திகளைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினார். பின்னர், அவருடைய படத்துடனான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார் அதனைத் தொடர்ந்து, அட்டையில் எம்.ஜி.ஆர் படமிட்டு வெளியான இதழ்கள் ஒவ்வொன்றாகத் தேடித்தேடிச் சேகரித்தார்.
அதன் பின்னர், எம்.ஜி.ஆர் அவர்களின் அபூர்வப் படங்கள் ஒவ்வொன்றாகச் சேகரிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கடிதத் தலைப்புகள் (Letter Head), பொருட்கள் போன்றவைகளையும் சேகரித்தார். இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடித நகல்கள் போன்றவைகளையும் அவருடைய அலுவலகத்தில் கேட்டுப் பெற்று தன்னுடைய சேகரிப்பில் வைத்துக் கொண்டார். எம்ஜிஆர் பயன்படுத்திய கேமரா ஒன்றையும் வாங்கி தன்னிடம் வைத்துக் கொண்டார்.
எம்ஜி.ஆர் படத்துடன் இந்திய அரசு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல் தலை மற்றும் எம்.ஜி.ஆர் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒளிப்படம், எம்.ஜி.ஆர் போக்குவரத்துக் கழகப் பயணச்சீட்டு போன்ற எம்.ஜி.ஆர் பெயரிலான அனைத்தையும் சேகரித்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பாட்டுப்புத்தகங்கள், எம்.ஜி.ஆர் படக் குறுந்தகடுகள் ஆகியவைகளையும் சேகரிப்பில் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடர்புடைய அனைத்தையும் ஒன்றுபடுத்தி, அவைகளைக் காப்பதற்காக ‘எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியம்’எனும் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் காப்பாளராகவும் இருந்தார்.
1986 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமானவாரகவும், ஆன்மிக ஈடுபாடுடையவராகவும் இருந்த ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் (சேர்மன்) வழக்கறிஞர் பாண்டித்துரை என்பவர், ஒரு முறை இவரைச் சென்னைக்கு அழைத்துச் சென்று, எம்.ஜி.ஆரிடம் இவரைப் பற்றிச் சொல்லியதுடன், எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களையும், படங்களையும் அதிகமாகச் சேகரித்து வைத்திருப்பதைப் பற்றியும் சொன்னார். அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்து, அவரை அருகில் அழைத்துத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.
இவரது எம்.ஜி.ஆர் குறித்த அனைத்து சேகரிப்புகளையும் 1996 ஆம் ஆண்டில், ஜனவரி 17 மற்றும் ஜனவரி 18 ஆகிய இரு நாட்கள் ’எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியக் கண்காட்சி’ எனும் தலைப்பில் ஒரு கண்காட்சியினை, அப்போதையத் தேனி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.அழகர்ராஜா அவர்கள் தலைமையில், தேனி நகர்மன்றத் தலைவர் டாக்டர் உ.கண்ணப்பன் முன்னிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காரும், சென்னை, கமலா திரையரங்க உரிமையாளருமான வி.என்.சிதம்பரம் அவர்களைக் கொண்டு திறந்து, தான் சேகரித்து வைத்திருந்த எம்ஜிஆர் தொடர்புடைய அனைத்தையும் காட்சிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் 84 நகரங்களில் 136 கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை மாவட்டந்தோறும் கொண்டாடிய போது, தேனியில் நடைபெற்ற நிகழ்வில் இவரது சேகரிப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்விலும் எம்ஜிஆர் கண்காட்சியினை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் குறித்த முதல் கண்காட்சியினை நடத்திய பெருமையும், எம்.ஜி.ஆர் தொடர்பான கண்காட்சிகளை அதிக அளவில் நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
எம்.ஜி.ஆர் குறித்த தனது கருத்துகளை ‘காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர்’ எனும் தலைப்பில் நூலாக்கம் செய்து சென்னை, மணிமேகலை பிரசுரத்தின் வழியாக வெளியிட்டார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மலரில் இவருடைய கட்டுரை ஒன்று இடம் பெற்றிருந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொடர்பான சேகரிப்புகளுக்கும், அதனைக் கண்காட்சிகள் வழியாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இவர் தன்னுடைய பணத்தைச் செலவிட்டிருக்கிறார்.
எம்ஜிஆர் குறித்த தன்னுடைய சேகரிப்புகள் அனைத்தையும், காட்சிப்படுத்திட நிரந்தரமாக ஒரு காட்சிக்கூடம் அமைத்து விட வேண்டும் என்று நினைத்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் காலமானார். அவர் சேகரித்து வைத்திருந்த எம்ஜிஆர் குறித்த சேகரிப்புகள் அனைத்தும் அவரது வீட்டின் ஒரு அறையில் முடங்கிப் போய்விட்டன.