இந்தியாவின் ஐஸ்கிரீம் மேன் யார் தெரியுமா?

Ice Cream Man of India
Ice Cream Man of India

வயது வித்தியாசமின்றி அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் தான் ஐஸ்கிரீம். ஐஸ்கிரீம் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் சுவைத்துப் பார்க்க ஆசைப்படுவார்கள். அனைவரும் விரும்பும் ஐஸ்கிரீமில் பல விதமான வகைகளை உருவாக்கிய இந்தியாவின் ஐஸ்கிரீம் மேன் பற்றி யாருக்கேனும் தெரியுமா? பரவாயில்லை, இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகில் உள்ள குக்கிராமத்தில் பிறந்து தனது தன்னம்பிக்கையினாலும், இடைவிடாத முயற்சியினாலும் இந்தியாவில் மிகவும் பிரபலமான 'நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம்' என்ற பிராண்டை உருவாக்கினார் ரகுநந்தன் காமத்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே ஒரு ஐஸ்கிரீம் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கேற்ப மாம்பழ வியாபாரியான தனது தந்தையிடம் இருந்து நல்ல பழங்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டார். இவரது 14 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு, தனது அண்ணன் தொடங்கிய 'கோகுல் ரெஃப்ரெஷ்மென்ட்ஸ்' என்ற உணவகத்தில் வேலை செய்தார். வேலை செய்து கொண்டே விரைவில் சொந்தமாக ஐஸ்கிரீம் கடையைத் தொடங்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டே இருந்தார்.

தந்தையின் சொத்துகளை பிரித்து பங்கு போட்ட சமயத்தில், ரகுநந்தனுக்கு ரூ.3,50,000 கிடைத்தது. இதனை முதலீடாக வைத்து சிறிய அளவில் ஒரு ஐஸ்கிரீம் கடையைத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டில் மங்களூரில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்து, நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் என்ற பிராண்டை மும்பையின் ஜூஹூ பகுதியில் 6 ஊழியர்களுடன் தொடங்கினார். தொடக்கத்தில் 12 வகையான சுவைகளில் ஐஸ்கிரீமை விற்பனை செய்தார். மக்களின் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியதும், ஐஸ்கிரீம் வகைகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். அனைத்து விதமான பழங்களிலும் ஒவ்வொரு விதமான சுவையுடன் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தார்.

ஐஸ்கிரீம் தயாரிக்கத் தேவைப்படும் பால், பழங்கள் மற்றும் சர்க்கரையில் அதிக கவனத்தை செலுத்தினார் ரகுநந்தன் காமத். நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் என்ற பிராண்டின் ஸ்லோகனாக 'டேஸ்ட் தி ஒரிஜினல்' (Taste The Original) என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது. பிராண்டின் நற்பெயரை அதிகரிக்கும் நோக்கில் புதுப்புது ஃப்ளேவர்களில் ஐஸ்க்ரீம்களை அறிமுகப்படுத்தி வந்தார். கடை தொடங்கிய அடுத்த 10 ஆண்டுகளிலேயே ஐந்து கிளைக் கடைகளைத் திறந்து அமர்க்களப்படுத்தினார். இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் மேன்' என பல பத்திரிகைகள் இவரைப் பாராட்டியது. இப்போது நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் பார்லர் சுமார் 15 நகரங்களில் 165 இடங்களில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
Ice Cream Man of India

டேஸ்ட் அட்லஸ் அறிக்கையின்படி, உலகில் உள்ள மிகச் சிறந்த 100 ஐஸ்கிரீம்களில் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீமின் இளநீர் கொண்டு செய்யப்படும் ஐஸ்கிரீமும் ஒன்று என்பது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

ஐஸ்கிரீம் உலகை ஆட்டிப் படைத்த ரகுநந்தன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஐஸ்கிரீம் மேன் இவ்வுலகில் இல்லையென்றாலும், அவர் உருவாக்கிய ஐஸ்கிரீம் ஃப்ளேவர்கள் என்றென்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com