
நாடகங்கள் பார்க்கும் பழக்கம் குறைந்து விட்டது. திரைப்படங்களுக்கே ஆட்கள் வருவதில்லை. மக்கள் ரசனை மாறிவிட்டது. இப்படிப் பல கருத்துகள் நிலவி வருகின்றன. அப்படியிருக்கையில் மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் சனியன்று மாலை ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது எனக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. (கடைசியாக நான் பார்த்த நாடகம் பொன்னியின் செல்வன்)
நாடகத்தின் பெயர் கலாட்டா கல்யாணம். இந்த நாடகத்தின் கதை வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் அழைத்திருந்தார். பல கொடுமையான படங்களைப் பார்த்து நொந்து போயிருந்த எனக்கு, 'வித்தியாசமாக இருக்கும். போய்த்தான் பார்க்கலாமென' நினைத்துச் சென்றேன்.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் உள்ளே சென்றேன். முதல் ஆச்சரியம் நாடகம் சரியான நேரத்தில் துவங்கியது. மேடை நாடகங்களுக்கே உண்டான அந்தப் பாணி பழகக் கொஞ்சம் நேரமானது. அதன் பிறகு நம்மையறியாமல் ரசிக்கத் துவங்கிவிடுகிறோம்.
தனது மகளை ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் பஞ்சாபகேசன். கட்டினால் தனது அத்தை மகனைத்தான் கட்டுவேன் என அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்துள்ள அவர் மகள் கிருஷ்ணவேணி. சொத்துத் தகராறில் பேச்சுவார்த்தை முறிந்து போன தாய்மாமா செங்கல்வராயன். அவரது மகன் கந்தசாமி. கிருஷ்ணவேணியின் சத்தியத்தைக் காப்பாற்றப் பல தகிடுதத்தங்கள் செய்யும் சமையல் காண்ட்ராக்டர் அறுசுவை அருணாச்சலம். இந்தக் கல்யாணம் ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் எப்படி நடக்கிறது என்பதுதான் கதை.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொரு நல்ல விஷயம் நாடகத்தின் நேரம். இடைவேளையின்றிச் சரியாக நூறு நிமிடங்கள். சற்றே மணல் கயிறுப் படம்போல இருந்தாலும் முதல் காட்சியிலிருந்து துணுக்குத் தோரணங்களால் பின்னப்பட்டுச் 'சிரிப்புக்கு நான் உத்தரவாதம்' என்று சொல்கிறார் வசனகர்த்தா அரவிந்தன். கஜினி போல அரைமணி நேரம் மட்டுமே நினைவுக்கு இருந்து பின்னர் மறந்து விடும் கிருஷ்ணவேணியின் தாத்தாவிடம் மாட்டிக் கொண்டு பாடுபடும் அரசியல்வாதியாக ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார் இவர்.
சற்றே நீளமாக இருந்தாலும் அருணாச்சலமும், செங்கல்வராயனும் சந்திக்கும் அந்த முதல் காட்சி பலத்த கரகோஷத்திற்கும் சிரிப்பிற்கும் நல்ல வாய்ப்பு. செங்கல்வராயனாக வரும் சாய், அருணாச்சலமாக வரும் இந்த நாடகத்தைத் தயாரித்து இயக்கியுள்ள மாப்பிள்ளை கணேஷ், இருவரும் இந்த நாடகத்தைத் தாங்கி நிற்கிறார்கள்.
சாணம் உருட்டி வறட்டி தட்டும் காட்சியில் அரங்கத்தையே கலகலக்க வைத்து விடுகிறார் சாய். அவரது மகனாக ராம்பிரகாஷ் கச்சிதம். திருடனாக வரும் கே எஸ் பழனி அவர் பங்குக்கு நகைச்சுவை வெடியைக் கொளுத்திப் போடுகிறார். செண்டிமெண்ட் இல்லை என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத் தனக்கு ஒரு பிளாஷ் பேக்கையும் வைத்துக் கொண்ட இயக்குநரின் சாமர்த்தியத்திற்கு ஒரு ஷொட்டு. தாத்தாவாக ஒரு இளைஞரை நடிக்க வைத்தது சரி. வெள்ளை விக்கிற்கும் அவரது கருப்பு பிரெஞ்சு தாடிக்கும் உள்ள விஷயத்தைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
திரைப்படங்களுக்கே கதை, திரைக்கதை என்று பெரிதாக எதிர்பார்க்க முடியாத இந்நாட்களில், 'வாருங்கள். சிரியுங்கள். ஆதரியுங்கள். சந்தோஷமாகத் திரும்பிச் செல்லுங்கள். நகைச்சுவை மட்டுமே பிரதானம்' என்று முடிவெடுத்துச் செய்திருக்கிறது இந்தக் குழு. இரட்டை அர்த்த வசனங்கள், அரசியல் அதிரடிகள், சாதியத் தாக்குதல்கள், அறிவுரை சொல்கிறேன் என்று பக்கம் பக்கமாக வசனங்கள் என்று எதுவும் இல்லாத அழகான ஒரு முயற்சிதான் கலாட்டா கல்யாணம்.