
இரு தினங்களுக்கு முன் எனக்கு அந்த அழைப்பு வந்தது. சீனி என்ற சீனிவாசன் செத்துட்டான் என்று. நம்ம சீனி நல்லா தானே இருந்தான் என்று யோசித்து கொண்டிருந்தேன். சாவு அவனை தேடி வரவில்லை. சாவை தேடி அவனே சென்றுள்ளான் என்ற தகவலை கேட்டறிந்தேன். சீனி அளவுக்கதிகமான குடியால் கல்லீரல் வீங்கியோ, உடல் நலம் சரியில்லாமலோ இறந்து போயிருப்பானோ என்று யாரும் நினைக்க வேண்டாம்.
சீனி தற்கொலை செய்வதற்கு முதல் நாள் முகநூலில் தானும் தன் மனைவியும் ஒன்றாக இருந்த படம் ஒன்றை இளையராஜாவின் காதல் பாடல் ஒன்றுடன் பதிவிட்டிருந்தான். ஆஹா...! என்ன ஒரு பொருத்தம். ஆனால் அதற்கு அடுத்த நாள் அவன் ஒட்டு மொத்த குடும்பமே கதறி அழுவதற்கு அவனே காரணமாக இருப்பானென்று நான் நினைக்கவில்லை. சம்பவத்தன்று சீனியின் மனைவி வேலைக்கு சென்ற பிறகு சீனி நண்பர்களுடன் குடிக்க சென்றுள்ளான்.
வேலைக்கு செல்லாமல் ஏன் குடிக்கிறாய் என்று மனைவி தொலைபேசியில் கண்டித்ததை எதிர்த்து, அவளை திட்டியதோடு, 'நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாது' என்று பட வசனங்களை பேச, அவன் மனைவியோ அழைப்பை துண்டித்து அலுவலகத்தில் தனது வேலையை கவனித்திருக்கிறாள். தொடர்ந்து சீனியின் அழைப்பை வேலை காரணமாக ஏற்காமல் இருந்தவளின் நிலையை புரிந்து கொள்ளமால், அவளுக்கு பாடம் கற்று கொடுக்கிறேன் என்று முடிவெடுத்து வீட்டிற்கு சென்ற சீனி, தன்னை தானே ஒரு கயிற்றில் பழியாக்கி கொண்டான்.
ஜெயகாந்தன் சொல்வது போல ‘மது மயக்கம் மனிதனின் சுயேச்சைத் தன்மையை தான் முதலில் அழிக்கிறது.’
என்னுடன் கல்லூரியில் படித்த மற்றொரு நண்பன் சங்கர். கல்லூரி படிப்பு முடிந்ததும் ஆரம்பத்தில் வேலை கிடைக்காமல் சில மாதங்கள் சிரமத்திற்கு ஆளாகியவன், ஒருகட்டத்தில் குடிப்பதற்கு பழகினான். ஒருநாள் அளவுக்கதிகமாக குடித்து தான் படித்த இந்த படிப்பை பழி வாங்குகிறேன் என்று எழுதி வைத்து விட்டு முட்டாள்தனமாக தூக்கில் தொங்கினான். இதே சங்கர் குடிப்பழக்கத்திற்கு முன் கல்லூரி நாட்களில் சுய முன்னேற்றத்தை பற்றி பட்டிமன்றத்தில் பேசியவன். சங்கரின் இந்த விபரீத முடிவால் பாதிக்கப்பட்டது அவனின் பெற்றோர்கள். அந்த பாதிப்பு அவர்களுக்கு சொல்ல முடியாத வலியாக இருந்தது, இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு துணையாக ஒரே மகனான சங்கர் மட்டுமே இருந்தான். அவனும் குடியால் உயிரை அழித்து கொண்டான்.
பிரச்சனைக்கு தீர்வு குடி என்ற எழுதப்படாத உறுதிப்பத்திரம் இங்கு உள்ளது. குடி தீர்க்கப்பட கூடிய நமது பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் வளரவிடுவதற்கும், தீ பரவுவது போல தங்களால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மற்றவர்கள் பாதிப்படைவதற்கும் குடி ஆரம்ப புள்ளியாகிறது.
இன்னொரு சம்பவம் ...
‘என் அப்பாவுக்கு குடிப்பழக்கமில்ல. அதனால நானும் குடிக்க மாட்டேன்’ என்று சொல்லி திரிந்தவன், கூடாப்பழக்கத்தால் ஒரு கட்டத்தில் குடிக்க பழகினான். குடி என்றால் அது எதோ அமிர்தம் போல சிலர் சொல்லும் ‘நான் சாராயம் குடிக்க மாட்டேன், பியர் மட்டும் தான்’ என்று அந்த பியர் மட்டும் தான் குடிப்பான். அதை குடிக்கப் பழகிய அவனுக்கு பின்னாளில் அது இல்லாமல் இருக்க முடியாது என்றாகி விட்டது. நாளாக நாளாக அவனுக்கு அவனே வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டான்.
தினமும் குடிக்க தொடங்கினான். அவனது வேலை, மரியாதை போனதுடன் வலிப்பு நோய் அவனுக்கு குடியின் பரிசாக கிடைத்தது. பிறகும் திருந்தாமல் அளவுக்கதிகமாக குடித்து ரோட்டில் விழுந்து கிடந்தான். பொறுத்து பார்த்த குடும்பத்தினர் அவனை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். இன்ஜினியரிங் படித்தும் குடியால் நல்ல வேலையை இழந்து, மற்றவர்களிடம் மரியதையை இழந்து, விட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, சாக்கடையில் ஓரத்தில் படுத்து எழும்பி அவன் தினக்கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். நாள் சம்பளத்தில் குடித்து குடித்து தனக்கு தானே வலிப்பை வரவழைத்து காலத்தை ஓட்டிக் கொண்டு சென்றான்.
ஏதேச்சையாக அவன் கைக்கு அந்த நாள் அந்த நேரத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் புத்தகம் கிடைத்தது. முமு புத்தகத்தையும் உட்கார்ந்து வாசித்து முடித்தான். கண்களில் கண்ணீர் வடிந்தது. அத்தோடு கைக்கு கிடைத்த மற்றொரு புத்தகமான அகிலன் எழுதிய நெஞ்சின் அலைகள் நாவலை வாசிக்க தொடங்கினான். அகிலனின் எழுத்தில் மயங்கி போய் விட்டான் என்று சொல்வதை விட அகிலன் தன் எழுத்தில் மூலம் அவனுக்கு ஒரு பாதையை கைகாட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். பிறகு புத்தகம் வாசிப்பதற்கு தனது நேரத்தை செலவிட்டு குடியை மெதுமெதுவாக மறக்க ஆரம்பித்தான்.
சில நாட்களில் சொந்தமாக கதை எழுத ஆரம்பித்தான். இந்தியாவில் கல்கியில் அவனின் முதல் சிறுகதை பிரசுரமானது.
குடியால் வாழ்க்கையை இழக்க இருந்தவன் வாசிப்பால் உயர தொடங்கினான். வாசிப்பதும் எழுதுவதும் அவன் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டது. துரத்திய சொந்தங்கள் ஆச்சரியப்பட்டனர். வாழ்க்கையில் பல்வேறு விதமான நன்மைகள் அவனை தேடி வந்தன. தற்போது இந்தியா, இலங்கை நாடுகளில் இணையதளங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சோசியல் மீடியா என அனைத்திலும் எழுதி வருகிறான்.
ஆரம்பத்திலிருந்து உண்மையை சொல்லிக் கொண்டு வரும் நான் இவனை மட்டும் ஒரு கற்பனை கதாபாத்திரமாக வடிக்க விரும்பவில்லை என்பதை சொல்லி அந்த அவன் இதை எழுதும் நான் தான் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
5 வருடத்திற்கு முன் நான் குடிக்கு அடிமையான காலத்தில் நான் மட்டுமல்லாமல் என்னால் என் குடும்பமே மிகவும் கஷ்டப்பட்டது. குடியால் அவமானம், அசிங்கம் என அனைத்திலும் என் பாதச்சுவடு பதிந்தது. வாசிப்பு என்னை மாற்றினாலும் அந்த வாசிப்புக்கு என்னை நானே முழு மனதாக ஈடுபடுத்திக் கொண்டதற்கு காரணம் என்னை நானே அலசிக் கொண்டதேயாகும். என்ன அலசல்?
அது, என் வாழ்க்கையை பற்றிய யோசனை எனலாம். வாழ்க்கை என்பது குடியோடு மட்டுமல்ல என்பதை முதலில் புரிந்து கொண்டேன். குடியை நான் எப்படி தேர்ந்தெடுத்தேனோ அதைபோல என் மற்றொரு நல்வாழ்வுக்கான வழியை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்குள்ளது என்பதை நான் உணர ஆரம்பித்தேன். அதற்கு நான் தான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் சரியான ஒரு விடயத்தில் எனது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு அந்த வழியில் பயணிக்க ஆரம்பித்தேன்.
அன்பு நெஞ்சங்களே உங்களுடன் இன்னும் சில வார்த்தைகள்...
குடிப்பழக்கம் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாகிறது. இதனால் பெரும்பாலும் தாங்கள் குடும்ப உறுப்பினர்களே பாதிப்படையும் நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் எப்போதுமே குடியை பற்றியே சிந்திக்க தூண்டுவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க செய்யும். இதனால் ஆரம்பத்தில் சொந்த வீட்டிலே திருட்டு, கொலை, கொள்ளை, பொதுசொத்துகளை சேதப்படுத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் குடி ஈடுபட வைக்கும். சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு தற்கொலை எண்ணங்கள், பயம், மன உளைச்சல், மனச்சோர்வு உண்டாகும். அதுமட்டுமல்லாமல் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைவதோடு பக்கவாதம், வயிற்றுப்புண், எடைக்குறைவு, நடுக்கம், உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சீக்கிரமே மரணமும் நிகழ்கிறது. சிலர் மனநோயாளிகளாகவும் பாதிப்படைகின்றனர்.
மனநல மருத்துவரையோ, உளவியல் நிபுணரையோ ஆலோசித்து குடிப்பழக்கத்தை கைவிட முடியும். எனக்கு புத்தகங்கள் கைகொடுத்தது போல சிலருக்கு இசை கேட்டல், விளையாடுதல், வேலையில் கவனம் செலுத்தல், தியானம், உடற்பயிற்சி, பயணம் செய்தல், நல்ல காரியங்களில் தங்களை ஈடுபடுத்தல் போன்றவற்றின் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவரலாம்.
நமக்குள் ஒன்றை பதிய வைத்துக் கொள்ள வேண்டும் குடிப்பழக்கம் தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ள அனைவரையுமே கறுவருக்கும் என்பதை. அத்தோடு குடிப்பழக்கம் தனக்கு தானே வெட்டியான் வேலை செய்வதற்கும் சமமாகும் என்பதையும் மறக்க கூடாது.