வரட்டும் நாலாம் தேதி... காத்திருப்போம் நான்கிற்கு!

தேர்தல் கால அரசியலை மிக எதார்த்தமாகவும், அதே சமயம் கூர்மையான நையாண்டியுடனும் செதுக்கப்பட்டுள்ள இந்தப் பதிவு, இன்றைய வாக்காளர்களின் மனக்குமுறலை அப்படியே பிரதிபலிக்கிறது.
Tamil Nadu Assembly Election
Tamil Nadu Assembly ElectionImg credit: AI Image
Updated on
Kalki strip
Kalki strip

ஒருவழியாகத் தேர்தல் பிரசாரங்கள் முடிந்து, (பிரசாரங்கள் என்பதைக் காட்டிலும் கூத்துகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்) மக்களைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள விடுவார்கள் என்று பார்த்தால், அடுத்த கூத்தை ஆரம்பித்து விட்டார்கள்!

ஒவ்வொரு கூட்டணியிலும் அமைச்சர்கள் யார் யார்? அதிகாரிகள் யார் யார்? என்று பட்டியல்களைத் தயார் செய்து வருவதாகச் செய்திகள் பரபரக்கின்றன!

“ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாம்!” என்ற நம் முன்னோர்களின் மொழி எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தீர்களா?

அவர்கள் வார்த்தைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குமே உகந்தவையாகவல்லவா அமைந்திருக்கின்றன!

“குழந்தை பிறக்குமுன்னே பெயர் சூட்டாதே!” என்று என்றோ சொல்லி வைத்தவர்கள் கூற்று சாதாரணமானதல்ல!

ஒரு தாயின் வயிற்றில் சுமார் முன்னூறு நாட்கள் மெல்ல வளரும் சிசு, ஒரு கன்னிப் பெண்ணை தாயாக மாற்றும் மகோன்னதத்தையும் செய்கிறது! குழந்தை, தாயின் வயிற்றில் வளர இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கருவாகி, உயிராகி, கால் கை முளைத்து,மூளையும் வளர்ந்து, வெளியுலக வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்குத் தயாரான பிறகே குழந்தை வெளியுலகுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்:
சூடுபிடிக்கும் தேர்தல் களம்: தமிழகத்திற்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பிரதமர் மோடி..!
Tamil Nadu Assembly Election

‘தற்பொழுதைய அரசியல் நிலையோ முற்றிலும் ரிவர்ஸ்!’ பணம் மட்டும் இருந்தால் போதும்! எல்லோரும் மக்களை ஆளலாம்! அரசியல்வாதியாகிப் புகழும், அளவுக்கதிகமான அதிகாரங்களும் பெற்று, ‘ஹாய்’ யாக வலம் வரலாம் என்று நினைக்கிறார்கள்.

அந்தக் கால, மக்கள் நலனில் அக்கறை செலுத்திய தலைவர்கள், ஒரு நாளில் 4 மணி நேரந்தான் தூங்குவார்களென்று படித்தது ஏனோ இப்பொழுது ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

இன்றோ, தேர்தல் அறிவித்தவுடன் தொடங்கப்படும் கட்சிகளும், திடீரென களத்தில் குதிக்கும் தலைவர்களும், நம்மை வியக்கவே வைக்கிறார்கள்!

“பெண் குந்தும் முன் பந்தல் போடாதே” என்பதும் கிராமங்களில் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ள பழமொழி.

குடும்பத்திலுள்ள பெண் வயதுக்கு வந்ததும், பச்சை மட்டையால் பந்தலி்ட்டு, ஊரும் உறவும் அறிய சடங்கு நடத்துவது வழக்கம்.

உற்றார் உறவினர்களுக்கு ‘எங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள்’ என்று அறிவிக்கும் சடங்கு அது! ஆனால், பருவ வயதை அடைந்த பெண் வீட்டில் இருக்கிறாள் என்பதற்காக, எதுவும் நடவாத போது பந்தலைப் போட்டு ஊரைக் கூட்டமுடியாது; அவ்வாறு செய்வதும் முறையாகாதே!

தற்கால நிதர்சனம் என்னவென்றால், பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வருவதை வெளியே சொல்வதேயில்லை; அப்படிச் சொன்னாலும், அவர்களுக்கு விருப்பமான நேரங்களில்தான் வெளியில் சொல்கிறார்கள்; அதற்குப் பல காரணங்களும் உண்டு.

போடப்பட்ட ஓட்டுகளுக்கு மட்டும் உயிர் இருந்தால் அவை என்னவெல்லாம் நினைக்கும்?

கற்பனைதானே! காசா பணமா?

இருந்த இடத்தில் நாம் இருந்தபடியே இருக்க, கற்பனைக் குதிரை மட்டும் கடலையும் தாண்டிச் சென்று வருமல்லவா?

“இதைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள்! மறக்காமல் வாக்களியுங்கள்! என்றெல்லாம் சொல்லியதால் மனிதர்கள் மூலம் நாங்கள் எலக்ட்ரானிக்ஸ் பெட்டிக்குள் வந்தோம்.

அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை, எங்களை இப்படிச் சிறையில் அடைப்பார்களென்று! நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? 10 நாட்கள் சிறையென்றாலும், சிறை சிறைதானே! அதிலும் 4 அடுக்குப் பாதுகாப்புச் சிறை. இன்டர்நேஷனல் குற்றவாளிகளுக்குத்தான் சிறையில் அதிக அடுக்குகள் இருக்குமென்பார்கள். 10 நாட்கள் சிறையென்றால் அதற்கான குற்றங்கள் என்னவென்று சட்டம் படித்தோர் சொல்லுங்களேன். எங்களுக்கு அதனைத் தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது.

“எங்களுக்கு வரும் 4ஆம் தேதி விடுதலையாம். எங்கள் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவீர்கள் தானே! எங்களில் யார் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோமோ அந்தக் கட்சிக் காரர்கள்தான் ஆட்சி அமைப்பார்களாம்! எங்களை உருவாக்கியது நீங்கள்தான். நல்லதோ…கெட்டதோ…அது உங்களையே சாரும்!

இதையும் படியுங்கள்:
பரபரக்கும் அரசியல் களம்: பனையூரில் நாளை விஜய் அவசர ஆலோசனை..!!
Tamil Nadu Assembly Election

ஓ! வரட்டும் நாலாம் தேதி பார்த்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?”

ஆமாங்க! காத்திருப்போம் நான்கிற்கு!

நல்லதே அமையுமென்று நம்பியே!

logo
Kalki Online
kalkionline.com