

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கின்றன. இதுதவிர த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களம் காண உள்ளனர்.
எனவே இந்த தேர்தல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஆளும் தி.மு.க.வை போல், அ.தி.மு.க.-பாஜக கூட்டணியும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. மத்திய மந்திரி அமித்ஷா, கடந்த சில மாதங்களுக்கு முன்பே, அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை.
ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் முதல் முறையாக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல் குறித்தும், 2026 தேர்தல் யுத்தத்தை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் பயன்பெறும் வகையில் பல புதிய அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுமாறும் அதை நிறைவேற்ற தேவைப்படும் உதவிகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும் என்றும் அதிமுக தலைமைக்கு பாஜக மேலிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 2021 சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக. அந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இந்த வாக்குறுதி தான் முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் திமுக அரசு அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் தருவோம் என வாக்குறுதி அளித்து விட்டு 1.15 கோடி பேருக்கு தான் பணம் வழங்கப்படுகிறது. அதேபோல் 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட வேறு எந்த வாக்குறுதியும் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தி விட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே முக்கிய காரணம், வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதேசமயம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார் என பாஜக ஆளும் வட மாநிலங்களில் தமிழத்தை விட கூடுதலாக மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்பதுதான் மோடி அரசின் உயரிய இலக்கு. அதை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
தொழில் தொடங்க கடன் உள்பட பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இது தொடர்பான அறிவிப்புகளை பாஜக அரசு தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளாக அறிவித்ததாலேயே அந்த மாநிலங்களில் பாஜகாவின் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் பிரதமர் மோடியால் நினைத்த மாத்திரத்தில் நிதி உள்ளிட்ட பல விஷயங்களில் எந்த மாநிலத்திற்கும் உதவிகளை செய்யமுடியும்.
இதையெல்லாம் அதிமுகவிடம் சுட்டிக்காட்டி பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி, தாலிக்கு தங்கம், தொகுப்பு ஊதிய பணியாளார்கள் பணி நிரந்தரம் உட்பட மக்கள் பயன்பெறும் வகையில் வாக்குறுதிகளை வெளியிடவும் அதிமுகவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பற்றி கவலையே படவேண்டாம் என்று பாஜக மேலிடம் அதிமுகவிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை பெறுவது எப்படி என்பது குறித்தும் அதிமுகவும், பாஜகவும் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.