உலகமே கண்டிராத ஒரு அதிசய ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து உலகமே அதிசயித்தது.
அந்தப் பெண்ணின் பெயர் ஆஞ்சலிக் காடின்.
பிரான்ஸ் நாட்டில் போவிக்னி (BOUVIGNY) என்ற கிராமத்தில் 1832ம் ஆண்டு அந்தப் பெண் பிறந்தாள். 1846ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அவளுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு அதிசய சம்பவம் நடந்தது.
ஒரு நிறுவனத்தில் ஓக் மரத்தினால் செய்யப்பட்ட சட்டம் ஒன்றில் மற்ற பெண்களுடன் சேர்ந்து பட்டு க்ளவ்ஸ்களை அவள் நெய்து கொண்டிருந்தாள்.
திடீரென்று உயிர் பெற்றது போல அந்தச் சட்டம் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்தது. அதை நிறுத்தப் பார்த்தார்கள் முடியவில்லை. அந்தச் சட்டத்தில் இருந்த ஒரு உருளை திடீரென விடுபட்டுப் பறந்து சற்று தூரத்தில் போய் விழுந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓவென்று கத்தியவாறே பெண்கள் அங்கிருந்து ஓடினர்.
உடனே அந்த சட்டம் பழைய நிலைக்கு வந்தது. பெண்கள் அருகே வந்தனர். மறுபடியும் ஒரு ஆட்டம்! தொடர்ந்து அலறல். பெண்களின் ஓட்டம். இது பல முறை நடந்தது. அனைவரும் திகைத்தனர்.
பின்னர் தான் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தனர்.
ஆஞ்சலிக் அந்த சட்டத்தை நெருங்கும் போது தான் அது ஆட ஆரம்பிக்கிறது என்றும் அவள் நகர்ந்தால் அது தனது இடத்தில் அமர்ந்து விடுகிறது என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஆஞ்சலிக்கின் வீட்டார் அரண்டு போயினர்.
தங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சந்தேகப்பட்ட அவர்கள் ஆஞ்சலிக்கை உள்ளூர் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றனர் – பேயை ஓட்ட!
சர்ச்சில் இருந்த பாதிரியார் அவளை ஒரு மருத்துவரிடமும் காண்பிக்குமாறு ஆலோசனை கூறவே பிரபல மருத்துவரான டாக்டர் டாஞ்சோவிடம் (Dr Tanchou) அவளை அழைத்துச் சென்றனர்.
இப்போது அவள் சக்தி இன்னும் வீரியம் கொண்டது.
இந்தச் சம்பவம் அனைத்து செய்தித்தாள்களிலும் வரவே பிரான்ஸே அல்லோலகல்லோலப்பட்டது.
அவள் அருகே சென்றவர்களுக்கும் ஒரு எலக்ட்ரிக் ஷாக் அனுபவம் கிடைத்தது. நேராக இருக்கும் ஊசி அவள் அருகே வந்தால் ஆட ஆரம்பித்தது.
டாக்டர் டாஞ்சோவும் அவளது பெற்றோரும் அவளை பாரிஸில் உள்ள பாரிஸ் அகாடமி ஆப் ஸயின்ஸஸுக்கு அழைத்துச் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல விஞ்ஞானியும், அரசியல்வாதியும், வானவியல் நிபுணருமான பிராங்கோயிஸ் அராகோ (Francois Arago) அவளைத் தன் சோதனைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். இதை ஆராய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.
மேஜையின் மீது பேனா, பேப்பர் உள்ளிட்ட எந்தப் பொருளும் ஆஞ்சலிக் அருகில் வந்தவுடனே நகர்ந்து பறக்க ஆரம்பித்தது.
விஞ்ஞானி அதிசயித்தார். மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இந்த சக்தி தீவிரம் அடையும். அப்போது அவளது உடலின் இடது பக்கம் சூடாக இருக்கும்.
ஒரு நாற்காலியில் அரைபாகத்தில் விஞ்ஞானி உட்கார, அடுத்த அரை பாகத்தில் ஆஞ்சலிக்கை உட்கார அவர் அழைத்தார். அவள் உட்கார்ந்தவுடன், அவ்வளவு தான், அவரைத் தள்ளி விட்டு நாற்காலி நகர்ந்தது. இப்படி ஒரு சக்தி அவளிடம் இருக்கிறது என்பதை அராகோ உறுதிப் படுத்தினார்.
பத்து வாரங்கள் இந்த மின்சக்தி அவள் உடலில் இருந்தது. பின்னர் அவளை விட்டு அகன்றது.
அவள் பூப்புப் பருவம் அடைவதை ஒட்டி இந்த சக்தி அவள் உடலில் புகுந்திருக்குமோ என்ற ஊகத்தை ஒருவர் கிளப்பினார்.
ஆனால் யாராலும் காரணம் கண்டுபிடிக்க முடியாத ஒரு அபூர்வ சக்தி அவளிடம் வந்தது; அது தானே போனது! உலகில் இப்படி ஒரு விவரிக்க முடியாத அதிசய மின்சக்தி கொண்டிருந்த பெண் ஆஞ்சலிக் ஒருத்தி தான் என்பதை வரலாறு கூறுகிறது!