

பசியில் தவிக்கும் போது ஒரு பிஸ்கட்டின் விலை என்னவென்று தெரியுமா? 1909-ல் அண்டார்டிகா உறைபனியில் சிக்கிய எர்னஸ்ட் ஷாகில்டன், தன் கடைசி பிஸ்கட்டை மரணத்தின் விளிம்பில் இருந்த சகாவிற்காகத் தியாகம் செய்தார். உலகப் பணத்தாலும் வாங்க முடியாத அந்த ஒற்றைப் பிஸ்கட் கதை, ஒரு உண்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற உன்னதப் பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.
மனித வாழ்க்கையில்தான் எத்தனை விதமான அறுசுவை உண்டிகள்! விதவிதமான உணவு வகைகளை ருசித்து அனுபவித்துச் சாப்பிடுகிறோம்.
ஆனால் அவற்றின் மதிப்பை என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
ஒரு பிஸ்கட்டைக் கொடுத்தால் ‘பூ’ இவ்வளவு தானா என்று எள்ளி நகையாடுவோம்.
ஆனால் ஒரு பிஸ்கட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரு பிஸ்கட்டின் கதையைப் பார்ப்போம்.
1909ம் ஆண்டு. ஜனவரி மாதம். அண்டார்டிகாவில் உறைபனியில் எர்னஸ்ட் ஷாகில்டன் (Ernest Shakleton) தனது மூன்று சகாக்களுடன் தங்கள் ஸ்லெட்ஜ் வண்டிகளில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். தென் துருவத்தை அடையும் முயற்சியில் தோல்வியுற்று கையிலிருந்த அனைத்து உணவுப் பொருள்களும் தீர்ந்து விட பசி தாளாமல் கையிலிருந்த பிஸ்கட்டுகளை ரேஷன் முறையில் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
அந்தக் குழுவில் இருந்த ஃப்ராங்க் வைல்ட் (Frank Wild) என்பவர் இனியும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையை அடைந்தார்.
ஷாகில்டன் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் கையிலிருந்த கடைசி பிஸ்கட்டை எடுத்து அவரிடம் தந்தார்.
வைல்ட் அதை வாங்க மறுத்தார். உடனே ஷாகில்டன் வைல்டிடம் அதை அவர் வாங்க மறுத்தால் அந்த பிஸ்கட்டை தான் உறைபனியில் புதைத்து விடுவேன் என்றார். உடனே வைல்ட் அதை வாங்க ஒப்புக் கொண்டார்.
வைல்ட் பின்னால் எழுதினார் இப்படி: “உலகத்தில் அச்சடிக்கப்பட்ட எல்லாப் பணமும் கொடுத்தாலும் கூட அந்த பிஸ்கட்டை வாங்க முடியாது.”
பசியால் வருந்தும் ஒருவரே அந்த பிஸ்கட்டின் உண்மையான விலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
அந்தக் கணத்தில் ஷாகில்டன் ஒரு குழுவின் தலைவர் எப்படிப்பட்ட தியாகத்தை தனது உயர் நிலைமையையும். அதிகாரத்தையும் கருதாமல் செய்ய வேண்டும் என்பதை நிரூபித்தார்.
தனது சகாக்கள் துன்பப்படும் போது அவர்களை அவர் துன்பப்பட விடவில்லை. அவர்களுடன் அதே ஸ்லெட்ஜ் வண்டிகளில் தான் அவர் சென்றார்.
அவர்கள் சாப்பிட்ட அதே உணவைத் தான் அதே ரேஷன் அளவில் தான் உண்டார். ஒரே டெண்டில் தான் அவரும் அவர்களுடன் உறங்கினார். சேர்ந்து பகிர்ந்து கொண்ட அந்த கடுமையான துன்பமே அவரது தலைமைக்கான மதிப்பையும் அடையாளத்தையும் அளித்தது.
தன்னுடன் கூட வரும் சகாவின் துன்பத்தைப் போக்க தன்னிடம் இருப்பதை தியாகம் செய்யும் ஒரு பண்பே அவரது உண்மையான தலைமைப் பொறுப்பின் மகத்துவத்தை உணர்த்தியது. அத்துடன் அந்த தியாகமானது ஷாகில்டனின் உண்மையான தேவையைத் தியாகம் செய்ததை உணர்த்துகிறது. அந்தக் கணத்தில் அந்த இடத்தில் ஒவ்வொரு கலோரி உணவும் விலை மதிப்பே இல்லாததாகும். தன்னிடம் இருந்த ஒரே ஒரு பிஸ்கட்டை அவர் கொடுத்தது அவரது உயிரைத் தக்க வைப்பதையும் இழந்த ஒன்றாகும்.
பெயருக்குத் தியாகம் செய்வது என்பதற்கும் உண்மையான தியாகம் என்பதற்கும் உள்ள வேறுபாடு இது தான்!
இன்றைய பல தலைவர்கள் பெயருக்குப் பல விஷயங்களைத் தியாகம் செய்கின்றனர். அந்த தியாகத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படப்போவதில்லை.
இன்னொரு விஷயம் யாருக்குமே தெரியாமல் அந்தரங்கமாய் அவர் செய்த செயலானது, அவருக்குப் புகழைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதையும் அவர் அறிந்ததே தான்.
தலைமை தாங்கும் போது உருவாகும் சின்னச் சின்ன கணங்களும் கூட குழுவின் நெருக்கத்தை அதிகமாக்க உதவும். அவை யாராலும் பார்க்கப்படாமல் கூட இருக்கலாம். அந்தச் சிறிய கணங்கள் தாம் வாழ்நாள் முழுவதும் அதை அனுபவித்தவருக்கு நினைவில் இருக்கும்.
பின்னால் வைல்டின் எழுத்துக்கள் இதை நிரூபித்தன.
ஷாகில்டனுக்கோ இது வழக்கமான ஒரு செயலாகத் தான் இருந்தது. குழுவினருடன் அனைத்தையும் பகிர்வது, ஒரே டெண்டில் உறங்குவது இவையெல்லாம் அண்டார்டிகா பனிச்சறுக்கு சாகஸத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது.
இந்த பிஸ்கட் சம்பவம் அனைவருக்குமான ஒரு உதாரணமாகவும், குறிப்பாகத் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்களுக்கான சிறப்பான செயலாகவும் திகழ்கிறது.
தன் சகாவுக்காக தன்னையே இழக்கக்கூடத் தயாராக இருக்கும் இந்த பிஸ்கட் சம்பவம் ஒவ்வொரு தலைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உன்னத வழிமுறையாகும், இல்லையா?!
உண்மையான தலைவர்களின் தியாக மனப்பான்மை மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்ற தெளிவான புரிதலைப் பெற்று, உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் ஒரு சிறந்த தலைவராக மாறுவதற்கான உத்வேகத்தைப் பெறுங்கள்.