இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டமும் அரசுப் பணி நீட்டிப்புச் சிக்கலும்!

இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் அரசுப் பதவி நீட்டிப்புச் சிக்கல்களையும் அலசும் கட்டுரை
அரசுப் பணி | Extension of government tenure
அரசுப் பணி |Extension of government tenureImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

உலகில் அதிக மக்கட்தொகை கொண்ட நமது நாட்டில், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் உள்ளதா? அல்லது தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளம் சக்தி வீணடிக்கப்படுகிறதா? அரசுப் பணிகளில் வழங்கப்படும் பதவி நீட்டிப்புகள் தகுதியான இளைஞர்களின் வாய்ப்பைப் பறிக்கிறதா? நாட்டின் மனித வளமும் நிர்வாகச் சவால்களும் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள்படி, நமது இந்திய நாட்டின் மக்கட்தொகை இன்றைய தேதியில், தோராயமாக 148 கோடி என்று கூறப்பட்டுள்ளது. அத்தோடு, உலக மக்கட் தொகையில் சுமார் 17.8 % இந்திய மக்களாகவே உள்ளனர்.

அதனால்தான் நாம் உலகில், ஜனத்தொகையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளோம். உழைக்கும் வயதில் உள்ள இளைஞர்கள் எண்ணிக்கையும் நமது நாட்டில்தான் அதிகம்.

நமது நாட்டின் தற்போதைய ஒட்டு மொத்த படித்தோர் சதவீதம் 80.9% ஆகும்.

பாலின வாரியாகப் பார்த்தோமானால், ஆண்களில் 87.2 விழுக்காட்டினரும்,பெண்களில் 74.6 சதவீதத்தினரும் எழுதப் படிக்க அறிந்தவர்களாக உள்ளனர்.

நகர்ப் புறங்களில் 88.9 சதவிகிதத்தினரும், கிராமங்களில் 77.5 விழுக்காட்டினரும் கற்றவர்களாக இருக்கின்றனர்.

அரசுப் பணிகளுக்கும், ஐடி யில் உள்ள பணிகளுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உண்டு. அரசுப் பணியில் ஒரு முறை சேர்ந்து விட்டால் போதும்.

பணிக்காலம் முழுவதையும் ஓட்டி விடலாம். நாளடைவில் பதவி உயர்வுகள் மூலம் உயர்பதவிக்கு வரலாம். இன்றைய சாப்ட்வேர் எஞ்சினீயர்களில் பெரும்பாலானோர் அடிக்கடி கம்பனி மாறுபவர்களாகவே இருக்கின்றனர்.

பணிப் பாதுகாப்பு அங்கு அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை. பேப்பர் போடுவதும் (ரிசைன் செய்வது), அப்ளை பண்ணுவதுமாகவே இன்றைய இளைஞர்களில் பலர் உள்ளனர்.

அதிகச் சம்பளம் பெறுவது உண்மைதான் என்றாலும், அடிக்கடி கம்பனி மாறும் நிலையும் உள்ளது. பணி புரிந்த தங்கள் பெற்றோர் பல வருடங்களுக்குப் பிறகு வாங்கிய தொகையை முதல் மாதத்திலேயே அவர்கள் வாங்குவதும் நாம் காணும் நிதர்சனம்.

இதையும் படியுங்கள்:
எந்திரனாகும் மனிதன்: வேலையைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு!
அரசுப் பணி | Extension of government tenure

அதோடு உலக நாடுகள் பலவற்றிலும் இன்று நமது இளைஞர்கள் பணியாற்றி வருவதும், முக்கியப் பொறுப்புகள் வகித்து வருவதும், நமக்கெல்லாம் பெருமை தேடித் தரும் விஷயம்!

நமது நாட்டிலும், மருத்துவம், பொறியியல், ஐஏஎஸ், ஐபி௭ஸ், ஐஆர்எஸ், ஐஇஎஸ் என்று பல உயர்நிலைப் பணிகளுக்கான படிப்புகளும் சிறப்புப் பெற்று, இளைஞர்களைக் கவர்ந்துள்ளன. ஐஐடி போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களும் இயங்கி, பல துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்கி வருகின்றன.

ஓர் அலுவலகம் என்று எடுத்துக் கொண்டால், கடை நிலை ஊழியரிலிருந்து உயர்மட்ட அதிகாரி வரை நிலையும், எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழியர்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, குறைவின்றிப் பணியாற்றும் தகுதிக்கு உயர்த்தப்படுகிறார்கள்.

உதாரணமாக, ஒருவர் ஐஏஎஸ் பாஸ் செய்தவுடன் முதலில் உதவி/துணை ஆட்சியர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இதுவே தொடக்க நிலை பணியாகும். ஒவ்வொரு நிலையிலுமுள்ள தேவையானவற்றைக் கற்ற பிறகு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, மத்திய அரசில் பணியாற்றினால் உச்ச நிலை பதவியாகிய மத்திய அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) ஆகவும், மாநில அரசென்றால் தலைமைச் செயலராகவும் (Chief Secretary) பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுகின்றார்.

இது போலவே பல அலுவலகங்களில் இயக்குனர் பதவி உச்ச நிலை பதவியாக உள்ளது. அலுவலகத்திற்கு அலுவலகம் உச்ச நிலை பதவியின் பெயர் மாறுபடலாம். அதனை அடைவதற்குத் தகுதியான கல்வி நிலையும், அனுபவமும் வரையறுக்கப்பட்டுள்ளன.

மக்கட் தொகையில் நம்பர் ஒன் நாடாக உள்ள நமது நாட்டில், மனித வளத்திற்குக் குறைவேயில்லை. தகுதிகளிலும் நம் இளைஞர்கள் பின் தங்கவில்லை. தேவைக்கு அதிகமான கல்வித் தகுதியுடனேயே அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசுப் பணி |Extension of government tenure
அரசுப் பணி |Extension of government tenureImage credit: Gemini AI

பத்தாம் வகுப்புப் படித்திருந்தாலே போதுமென்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படும் பணிகளுக்குப் பட்டதாரிகளும், முது நிலைப் பட்டதாரிகளும் அப்ளை செய்வதாகச் செய்திகளில் படிக்கிறோம். சில சாதாரணப் பணிகளுக்குக் கூட டாக்டரேட் வாங்கியவர்களும் விண்ணப்பிப்பதாக, அங்கொன்றும், இங்கொன்றுமாகச் செய்திகள் வருகின்றன.

இதிலிருந்தே, நம்மிடம் உள்ள படித்தவர்களின் தொகைக்கேற்ப, பணிகளின் எண்ணிக்கை இல்லையென்பதும், பற்றாக்குறை நிலவரந்தான் அங்கும் என்பதும் தெளிவாகும். எனவேதான் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இளம் சக்தி வீணாக்கப்படுகிறது. இதுதான் உண்மைக் கள நிலவரம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!

நிலைமை இவ்வாறிருக்க, அரசுப் பணிகளில் பதவி நீட்டிப்பும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுவதை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதே! மனித இயல்பே உச்ச நிலைப் பதவிக்கு ஆசைப்படுவதுதான். அது நியாயமானதுங்கூட.

அதனை அடைய நினைப்பவர்கள், அதற்கான தகுதியைப் பெற்றுத்தான் அதற்கென காத்திருக்கிறார்கள். பதவி நீட்டிப்பும்,கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுவதால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது.

அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். பணத்தை எப்படி அடுத்தவர் தட்டிப் பறிப்பது குற்றமோ, அது போல ஒருவரின் பதவியையும் தட்டிப் பறிப்பது குற்றமே. ஒரு தனி மனிதனின் சட்ட உரிமையைத் தடுக்கும் செயலல்லவா இது! அரசாங்கமே இதனைச் செய்வதை எப்படி ஏற்பது?

பெருந்தலைவர் ஆட்சியின்போது, ஓர் ஐஏஎஸ் ஆபீசர் தலைமைச் செயலர் பதவிக்குத் தன் சர்வீஸ் சீனியாரிட்டிபடி உயர்ந்து விட்டாராம். மற்ற சீனியர் ஆபீசர்களோ அவர் தலைமைச் செயலராக வருவதை விரும்பவில்லையாம்.

இதையும் படியுங்கள்:
காக்கிச் சட்டைக்குள்ளும் கனிவிருக்கும்!
அரசுப் பணி | Extension of government tenure

கர்ம வீரரிடம் அவரின் சில குறைகளைப் பெரிது படுத்திக் கூறி, அவரைத் தவிர்த்து விடலாம் என்று கூறினார்களாம். ஆனால் பெருந்தலைவரோ, இது வரை பணியாற்றித் தானே வந்திருக்கிறார். அவரின் பதவி உயர்வை நாம் ஏன் தடை செய்ய வேண்டும்?

அது தவறாகி விடாதா? அவர் ஏதாவது தவறான முடிவுகள் எடுத்தால் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம். அவர் ஆட்சியின் சிறப்புக்கு இது போன்றவையும் காரணமோ!

ஜனத்தொகையும், கல்வி வளமும் சிறந்த நமது நாட்டில், பதவி நீட்டிப்பையும், கூடுதல் பொறுப்பு வழங்கலையும் குறைத்து, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பைக் காப்போமாக!

இந்தக் கட்டுரையை வாசிக்கும்பொழுது, இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பு மற்றும் பதவி வாய்ப்புகள் குறித்த தற்போதைய கள நிலவரங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டின் மனித வளத்தை எவ்விதத் தடையுமின்றிச் சரியான பாதையில் பயன்படுத்தத் தேவையான விழிப்புணர்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com