ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளைக் கொண்டு செல்ல, தரைவழிப் போக்குவரத்தில், சரக்கு வாகனங்களுக்கு எரிபொருள் செலவு, இயந்திரத் தேய்மானம் என்று அதிகமான செலவுகள் ஏற்படுகின்றன. ஆனால், நீர்வழிப் போக்குவரத்து சாத்தியப்படும் இடங்களில் படகுகள், சிறிய மற்றும் பெரிய அளவிலான கப்பல்களின் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்லும் போது, அதற்கான செலவு மிகக்குறைவாகவே இருக்கிறது. இதனால் சரக்குகளை அனுப்ப, கடல் வழி போக்குவரத்தே பெரும்பான்மையாகத் தேர்வு செய்யப்படுகிறது.
இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்காக, சிறிய அளவிலான கப்பல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கப்பல்களை, 'கோட்டியா' என்று அழைக்கின்றனர். துறைமுகத்திற்கு வர முடியாத பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளைத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கவும், துறைமுகத்திலிருந்து பெரிய கப்பலுக்குக் கொண்டு சேர்க்கவும் 'கோட்டியா' வகைக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் 'கோட்டியா' வகையிலான சிறிய கப்பல்கள் கட்டுமானம் செய்யப்படுகின்றன. ஆயில் கோங்கு, இலுப்பை முதலான மரங்களில்தான் இவ்வகையான கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய வகைக் கப்பலின் தேவையைப் பொறுத்து, கோட்டியாவின் கட்டுமானப்பணிகளை முடிக்க ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். கப்பலுக்கான மரங்கள், மலேசியா மற்றும் மியான்மர் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
400 டன் சரக்கைக் கையாளும் திறன் கொண்ட 'கோட்டியா' உருவாக்க 350 டன் அளவிலான இலுப்பை மரங்களும், 3000 சதுர அடி கோங்கு மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 20 அடி நீளமும், 50 அடி உயரமும் கொண்ட 'கோட்டியா' செய்ய 50 இலட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். கட்டுமானம் செய்யப்பெற்ற கப்பலுக்குத் தேவையான இயந்திரப்பொறிகள், தொழில்நுட்பப் பொறிகள் ஆகியவை பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன.
முன்பெல்லாம் கடலூர் துறைமுகப் பகுதிகளிலுள்ள கப்பல் தயாரிக்கும் நிறுவனங்களின் மூலம், 10 டன்கள் வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்ட, சிறிய அளவிலான கோட்டியா கப்பல்களே கட்டுமானம் செய்யப் பெற்று வந்தன. ஆனால், தற்போது 100 டன் முதல் 400 டன் வரையிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட பெரிய அளவிலான கோட்டியாக்கள் கட்டுமானம் செய்யப்படுகின்றன.
சிறப்பான வேலைப்பாடுகள், பணியாளர்களின் கூலிக் குறைவு, கோட்டியா உருவாக்கத் தேவையான மரங்கள் எளிதாகக் கிடைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடலூரிலுள்ள கோட்டியா கப்பல் தயாரிக்கும் நிறுவனங்களின் செலவு குறைவாக இருப்பதால், இந்தியாவின் பிற பகுதிகளிலுள்ள கப்பல் நிறுவனங்கள் தயாரிக்கும் கோட்டியா கப்பல்களின் விலையை விட, இவை மிகக் குறைவாக இருக்கின்றன.
எனவே, கடலூர் பகுதியிலுள்ள கப்பல் கட்டுமான நிறுவனங்களில் தூத்துக்குடி, கோழிக்கோடு, மங்களூர் மற்றும் அந்தமான் பகுதிகளிலிருந்து அதிகமான ஆணைகள் பெறப்பட்டு கோட்டியா கப்பல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கோட்டியா கப்பல்கள் சிறிய அளவிலான கடல்வழி சரக்குப் போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதே போல், சிறிய துறைமுகங்கள் மற்று பெரிய கப்பல்களுக்கு இடையில் சரக்குகளைக் கையாளவும் பயன்படுத்தப்படுகின்றன.