

"அமரர் கல்கி அவர்களுக்கு எந்த கடவுள் பிடிக்கும்...ஈடுபாடு எந்த தெய்வத்திடம்..?"
பார்க்கில் குப்புசாமி தன் நண்பர்களிடம் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
"இதில் என்ன சந்தேகம்..அவர் சைவ குடும்பம்..சிவனே குல தெய்வம்" என்றார் ஓய்வு பெற்ற ஆர்க்கியாலஜிஸ்ட் நாகமுத்துசாமி.
கர்னல் கந்தசாமி, "ஆழ்வார்க்கடியான் என்னும் வீர வைஷ்ணவர் மூலம் ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை அடிக்கடி பொன்னியின் செல்வனில் மேற்கோள் காட்டுவார்..பெருமாள் மீது தான் ஈடுபாடு அதிகம்"
குப்புசாமி, "பல இடங்களில் கண்டேன் கண்டேன் காட்சிக்கினியன கண்டேன் என ஆழ்வார்க்கடியான் பாடுவான் நம்மாழ்வார் பாசுரங்களை.... தங்கை போல் உடன் வளர்ந்த நந்தினியிடம் கண்ணன் காத்திருக்கிறான் உன் சேவைக்கு எனச் செய்தி சொல்லி அனுப்புவான்....உண்மைதான்.. இருந்தாலும் நாகை சூடாமணி புத்த விகாரங்களைப் பற்றிக் குறிப்பிட்டு ஒரு சிக்கலான சமயத்தில் உடல் நிலை மோசமான நேரம் பொன்னியின் செல்வருக்கு புத்த பிட்சுக்கள் வைத்தியம் செய்து உதவியதைச் சொல்வார்...புத்தரிடமும் பக்தி உள்ளவர் அவர்"
நாகமுத்துசாமி,"சோழ மன்னர்கள் சிவ பக்தர்களே...ஆயினும் பெருமாள் கோவில் உற்சவங்களிலும் பங்கு பெற்றார்கள்...புத்த விகாரங்களுக்கு கொடையாக விளை நிலம் தந்து ஆதரித்தார் பொன்னியின் செல்வர் ஆட்சிக்கு வந்தபின்"..
குப்புசாமி, "பொன்னியின் செல்வனில் வைணவ அடியார்கள் ஆழ்வார்கள் பற்றி விளக்கமாகச் சொல்லி, இதற்கு மேல் வைணவ குரு பரம்பரை சொல்லும் என முடிப்பார்... இராமானுசர், கூரத்தாழ்வார், ஆளவந்தார் எனும் யமுனாச்சாரியார், பராசர பட்டர், இவர்களைப் பற்றி அடிக்கடி மேற்கோள் காட்டுவார்."
நாகமுத்துசாமி, "பார்த்திபன் கனவு கதையில் காளாமுகர் ஒருவர் வருவார்... காளாமுகர்கள் வீர சைவ கொள்கையினர்.. சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் மதுரை, தஞ்சையில் மடங்கள் நிறுவினர்... ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்களிடம் செல்வாக்கு இருந்தது அவர்களுக்கு. உடல் எங்கும் சுடுகாட்டு சாம்பல் பூசி, மண்டையோட்டு மாலை அணிந்து ஜடாமுடி தரித்தவர்கள்.. தற்போதும் தமிழ் நாடு, கர்நாடகா மாநிலங்களில் உள்ள வீர சைவ மடங்கள், லிங்கம் கழுத்தில் அணிந்த லிங்காயத்துகளின் மடங்கள் காளாமுகர் மடங்களே.. 'வீரபத்திரர் 'அவர்களின் கடவுள்...வைணவர்கள் அவர்கள் எதிரி என்பர்"
"சரி..நாளைக்குப் பேசுவோம்..இருட்டுது" என்றார் குப்பு.
கர்னல் உடனே, "இந்தோனேஷியாவுக்கு ஒரு போர் விஷயமாகப் போன விவரம் நாளைக்குச் சொல்றேன்.. அந்த நாடு 1998ல் வெளியிட்ட ₹20000 கரன்சியில் பிள்ளையார் படம் இருக்கும்.. ருப்பையா என்பார்கள் ரூபாயை, அங்கே.. கரபயா நகரில் சங்கர் அகுங்கோவிலில் பெரிய பிள்ளையார் விக்கிரகத்தை எல்லா மதத்தினரும் வழிபடுகிறார்கள்.. ஞானம், கல்விக்குக் கடவுள் அவர் அங்கே"
அன்று இரவு குப்புசாமி தன் மனைவி கமலாவிடம் இதையெல்லாம் கூறினார்.
கமலா உடனே,"கல்கி சார் சிவ பக்தருமில்லே..பெருமாள் பக்தருமில்லே..அவர் பிள்ளையார் பக்தர்.. கணபதி அடியார்"
"இது என்ன புதுக்கதை சொல்றே கமலா..?"
"சிவகாமியின் சபதம் படிச்சிருக்கீங்களா...அதில் மாமல்லச் சக்கரவர்த்தி வாதாபி கோட்டையை முற்றுகையிட்டு வாதாபி தகனம் நடக்கும்..அப்போ தளபதி பரஞ்சோதி சில வீரர்களை அழைத்து கோட்டை வாயிலில் இருக்கும் கணபதி விக்கிரகத்தை ஜாக்கிரதையாகப் பெயர்த்து எடுத்து வரச் சொல்வார்"
"அடடே நல்ல ஞாபக சக்தி உனக்கு"
"அந்தக் கணபதி தான் வாதாபி கணபதி.. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துசாமி தீட்சிதர் பாடிய அதே கணபதி.. வாதாபி கணபதிம் பஜேகம்...ஹம்ஸ்த்வனி ராகம்" பாடிக்காட்டினாள்.
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் அருகே திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் வாதாபி கணபதி தனி சன்னதியில் இருக்கார்..பார்த்து இருக்கேன் சின்ன வயசில்"
குப்புசாமி, "அந்தத் தளபதி பரஞ்சோதி தானே பிற்காலத்தில் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்..அப்பர் சுவாமிகள் அவர் வீட்டில் விருந்துண்டார். விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா என்று வரும்..விகர்த்தா என்பதற்கு, ஒன்றை மற்றொன்றாக மாற்றுபவர் பகவான் என வரும்..ஒரு போர்க்குணம் கொண்ட வீரத் தளபதி பரஞ்சோதி எப்படி சிவனடியார் சிறுத்தொண்டராக மாற்றப்பட்டார் பார்த்தியா கமலா?"
"அதெல்லாம் தெரியாது.. கல்கி அவர்கள் பிள்ளையார் பக்தர்.. இதுதான் ஆதாரம்...வந்து மெஷின் முடிஞ்சிட்டு... துணியை மாடியில் காய வைங்க...கிளிப் நல்லா போடுங்க..பறக்குது"
பக்கெட்டில் துணிகளுடன் போனார் மாடிக்கு குப்புசாமி...விகர்த்தாவுக்கு வாழும் உதாரணம் அவர்...இப்போது அவர் வேஷ்டி கட்டிய வேலைக்காரியாக மாற்றப்பட்டு உள்ளார். இன்று வேலைக்காரி லீவு.