
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு
மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!
----------------
கொஞ்சமாய் சாரல் வீசிவிட்டு
ஓய்வெடுத்துக் கொள்கிறது
மழை!
இடைவேளை கிடைத்த மகிழ்வில்
மேகங்களுக் கிடையில்
மயங்குகிறான் சூரியன்!
அடுத்த ஷிப்ட்டுக்கு
இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறதென
சோம்பலாகிறான் சந்திரன்!
அடிக்கடி கண்களை மூடித் திறந்து
தங்களின் தூக்கத்தை
உறுதிப்படுத்திக் கொள்கின்றன
எறும்புகள்!
---------------
காலையில் கோவிலுக்குள்
கும்பிடும் போது
அருகிலிருந்தவர் மேல்
தெரியாமல் கை பட்டு விட்டது!
'எல்லா சாதிக்காரனையும்
கோவிலுக்குள் விட்டால் இப்படித்தான்' என
ஆவேசமாய் கத்தி தீர்த்தார்
வெளியே வந்தவுடன்!
கூட்டமும் அவருக்காய் தலை யசைத்தது!
மாலை 4 மணிக்கு
வெளிநாட்டு சாக்லேட் வேண்டுமென
தன் பேரனுடன் கடைக்கு வந்தவர்
மீதி பணத்தை வாங்கி
சட்டை பைக்குள்
பத்திரமாய் வைத்துக் கொண்டார்!
-------------------
பனித்துளியை சாப்பிடும்
அதிகாலை சூரியனுக்கு
நிமிர்ந்து நின்று நன்றி சொல்கிறது
புல்வெளி!
-------------------
பல முறை குளிக்கச் சொல்லியும்
பதவிசாய் மறுக்கிறது
பௌர்ணமி நிலா!
'கறை நல்லது' என்று
ஏதோ ஒரு விளம்பரக்காரன்
அதையும் ஏமாற்றி யிருக்கிறான்!