உலகமே வியக்கும் 'இலக்கிய மறுமலர்ச்சி'! சாதாரண மனிதர் ஒரு மொழியையே உயிர்ப்பித்த அதிசயம்!

பிப்ரவரி 19 -இலக்கிய மறுமலர்ச்சி நாள்!
Tamil thatha U.V. Saminathaiyar
Literary Renaissance Day
Published on

"வ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் ஆங்கிலம் படி, அடுத்த பிறவியிலும் சந்தோஷமாக வாழ நினைத்தால் சமஸ்கிருதம் படி. இதில் எதை படிக்க விரும்புகிறாய்?" என்று ஒரு தந்தை தன் மகனிடம் கேட்டார்.

"நான் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதால், தமிழ் படிக்க விரும்புகிறேன். அடுத்த பிறவியிலும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுகிறேன். அதனாலேயே தமிழ் கற்க விரும்புகிறேன்" என்றார் அந்த தமிழ் மீது பற்றுள்ள மகன். அவர்தான் இலக்கிய மறுமலர்ச்சி நாள்(Literary Renaissance Day) கொண்டாட காரணமான தமிழ் தாத்தா உ.வே சாமிநாதையர்.

முற்கால இலக்கியங்களே ஒரு சமூகம் தன் முன்னோர்கள் வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள துணை நிற்கின்றன. அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தின் பழங்கால வரலாற்றை பிற்கால சந்ததியினர் அறியத் தந்தவர் உ.வே. சாமிநாதர்.

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, நெருநானுற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.ச தான்.

சைவம் அதிகம் தழைத்தோங்கியிருந்த பாண்டி நாட்டினிலே சமணமும் சமம் பெற்றிருந்தது என்பதை உணர்த்தும் திருத்தக்கதேவரின் தமிழில் முதன் முதலில் முழுக்க விருத்தப்பாக்களால் அமைந்த சீவக சிந்தாமணி நூல் தமிழர்களுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் உ. வே. சா. சிலம்பும், மணிமேகலையும் அச்சு வடிவில் வந்ததற்கு காரணமும் அவரே.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி அதனை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதர் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே பயின்ற அவர் தமிழை கற்கும் பொருட்டு தஞ்சைக்குச் சென்றார். அங்கிருந்து தான் அவரது வாழ்க்கைப் பயணம் தமிழ்த் தொண்டு நோக்கி திரும்பியது என்று சொல்லலாம்.

தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியில் இருந்தபோது தொடங்கிய ஓலைச்சுவடிகள் தேடும் பணியானது அவரது இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது. 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சங்க இலக்கிய நூல்களை தேடிப்பிடித்து புதுப்பிக்க முடிவு செய்தார். ''வேணுவனலிங்க விலாசச்சிறப்பு" என்கிற நூல் தான் அவரின் முதல் பதிப்பக நூல் என்பது குறிப்பிடதக்கது. ஆற்றுப்படை நூல்கள், புராண நூல்கள் என சுமார் 90க்கும் மேற்பட்ட நூல்களை ஓலைச் சுவடிகளில் இருந்து படியெடுத்து பதிப்பித்து தந்துள்ள சாமிநாதர் தமிழறிஞர்களால் "தமிழ்த் தாத்தா" என போற்றப்படுகிறார். அவரை தமிழ் தாத்தா என்று 1935 ம்ஆண்டு செல்லமாக அழைத்தவர் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ் வாசன்.

அற்புதமான எழுத்தாற்றல், நகைச்சுவை இழையோடும் ஆற்றொழுக்கான பேச்சாற்றல் கொண்ட சாமிநாதருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் 1932 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இவரது பேச்சைக் கேட்ட தேசப்பிதா இவரிடம் தமிழ் பயில ஆசை கொண்டார் என்பது இவரது பேச்சாற்றலுக்கு சான்றாகக் கூறப்படும் ஒன்று. தேடித்தேடிச் சேர்த்த ஓலைச் சுவடிகளை பாதுகாத்தளித்த தமிழ்த் தாத்தா 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இதையும் படியுங்கள்:
மனவசியம் (Mesmerism) : இதுவும் ஒரு மருத்துவமா?
Tamil thatha U.V. Saminathaiyar

உ.வே.சாமிநாதய்யர் ஓலை சுவடிகளில் இருந்து பல அரிய தகவல்களை திரட்டி தமிழ் நூல்களாக வெளியிட்டார். அவர் உயிருடன் இருக்கும் வரை 99 நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு 5 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தது.

உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942 இல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உ.வே.சாவின் பிறந்த நாளை அரசு இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com