ஐக்கிய நாடுகள் (United Nations) அவையின் ஆதரவுத் திட்டமாக, மனிதநேயத்திற்கான ஒளிப்படம் எடுத்தல் (Photography 4 Humanity) எனும் பன்னாட்டுப் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உலகெங்குமிருக்கும் ஒளிப்படக் கலைஞர்களின் ஒளிப்படங்கள் வாயிலாக மனித உரிமைகளின் சக்தியை உயிர்ப்பிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக இப்போட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.
படங்களுக்கான கருப்பொருள் என்ன?
இந்த ஆண்டு போட்டியானது காலநிலை நீதியை (Climate Justice) ஊக்குவிப்பதாக இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பதும் ஒரு மனித உரிமைப் பிரச்னையாகவே இருக்கிறது. தற்போது அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதைக் காட்டும் ஒளிப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட அகதிகள், மிகவும் சிறியவர்கள், மிகவும் வயதானவர்கள், ஊனமுற்றோர் மற்றும் காயமடைந்தவர்கள், ஏழைகள், பழங்குடியினர், தீவு மக்கள் மற்றும் பெண்கள் படங்களாகவும் இருக்கலாம். காலநிலை மாற்றத்திற்காக வாதிட்டு வெற்றியடைந்தவர்களின் படங்கள், காலநிலை மாற்றத்தைத் தணிக்க மற்றும் மாற்றியமைக்க உதவுபவர்களின் படங்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.
யார் யார் பங்கேற்கலாம்? கால வரையறைகள் உண்டா?
மேற்காணும் நோக்கங்களை முதன்மைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பெற்ற ஒளிப்படங்களுடன் இப்போட்டியில் பங்கேற்க முடியும். 18 வயது நிறைவடைந்த ஒளிப்படமெடுத்தலில் ஆர்வமுடையவர்கள் மற்றும் தொழில் முறையிலான ஒளிப்படக்காரர்கள் என்று அனைவரும் இப்போட்டியில் பங்கேற்க முடியும். இப்போட்டிக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் 1-8-2023 முதல் 1-8-2024 வரையிலான காலத்தில் எடுக்கப் பெற்றதாக இருக்கவேண்டும். இப்போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. இப்போட்டியில் பங்கேற்கும் ஒருவர் ஐந்து ஒளிப்படங்கள் வரை சமர்ப்பிக்கமுடியும். ஒவ்வொரு ஒளிப்படத்திலும் தலைப்பு, நாள், எடுக்கப்பெற்ற இடம் மற்றும் ஒளிப்படமெடுத்தவரின் பெயர் போன்றவை இருக்கவேண்டும். ஒளிப்படங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 1-8-2024.
பரிசீலனை:
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து ஒளிப் படங்களையும் உலகின் மிகச்சிறந்த ஒளிப்படக்காரர்கள், மனித உரிமை வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்படத் தொகுப்பாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட நடுவர் குழு பரிசீலித்து, உலகளாவிய நிலையில் பரிசுக்குரிய ஒருவரையும், காட்சிப்படுத்துவதற்கேற்ற மிகச் சிறந்த 10 ஒளிப்படங்களையும், குறிப்பிடத் தக்கதாகக் கருதப்படும் 20 ஒளிப்படங்களையும் தேர்வு செய்து கொடுப்பர்.
பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒளிப்படம், காட்சிப்படுத்துவதற்காகத் தேர்வு செய்யப்பெற்ற 10 ஒளிப்படங்கள், குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் 20 ஒளிப்படங்கள் போன்றவை குறித்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10ஆம் நாளில் ஐக்கிய நாடுகள் அவையின் வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும்.
பரிசளிப்பு மற்றும் காட்சிப்படுத்துதல்:
பரிசுக்குத் தேர்வு செய்யப்பெற்ற படத்திற்கு ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் ($5000USD) பரிசுத் தொகையாக வழங்கப்படும். பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒளிப்படத்துடன், மிகச் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பெற்ற 10 ஒளிப்படங்கள் மற்றும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் 20 ஒளிப்படங்கள் ஆகியவை, ஐக்கிய நாடுகள் அவையின் உலகச் சுற்றுச்சூழல் நாளான 5-6-2025ஆம் நாளன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் உலகளாவிய காலநிலை உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் விபரங்களுக்கு:
இப்போட்டியில் பங்கேற்கவும், கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் விருப்பமுடையவர்கள், https://www.photography4humanity.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.