இன்றைய விரைவான கால ஓட்டச் சூழலில், மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலும், தொழில் வல்லுநர்கள் பணியிடங்களிலும் தங்களது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட வேண்டியதாக இருக்கிறது. இதனால், உடல் நலனுக்கான உடற்பயிற்சிகளைச் செய்வதற்குக் கூட அவர்களுக்குத் தேவையான நேரமில்லாத நிலையே நீடிக்கிறது.
இதே போன்று மருத்துவமனைகள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் உடல்நிலையினைக் கவனத்தில் கொள்ளாமல் நீண்டநேரம் பணியாற்ற வேண்டிய சூழலும் இருக்கிறது.
உணவு மூலம் பரவும் நோய்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் (NCDs என அறியப்படும் Non-communicable diseases) அதிகரித்து வரும் இச்சூழலில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில், 196 மில்லியன் பேர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருக்கின்றனர். அதே நேரத்தில், 135 மில்லியன் பேர் அதிக எடை அல்லது பருமனானவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருக்கிறது. இந்நிலையில், உணவு மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 100 மில்லியனில் இருந்தது. வருகிற 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 முதல் 177 மில்லியன் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை நேரடியாகப் பாதிக்கும். மேலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மில்லியன் கணக்கானவர்களை பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
தற்போதைய உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் போன்றவை இவ்வுலகின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாகவே இருக்கின்றன. புவி வெப்பமடைவதில் பங்களிக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு 30% எனும் அளவில் உணவு உற்பத்தியேக் காரணமாக இருக்கிறது. இதே போன்று உலகளாவிய
உணவுக் கழிவுகள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு 6.7% எனும் அளவில் இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், வீட்டிலோ, பணியிடத்திலோ, பள்ளியிலோ அல்லது வெளியிலோ எங்கு இருந்தாலும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உறுதி செய்வதன் மூலம் தடுப்பு சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
சரியான சாப்பாடு - இந்தியா:
மேற்காணும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (Food Safety and Standard Authorities of India - FSSAI) "சரியான சாப்பாடு - இந்தியா” (Eat Right India) எனும் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பு “சரியான சாப்பாடு, சிறந்த வாழ்க்கை” என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
“பாதுகாப்பாக சாப்பிடுங்கள், உடல் நலத்திற்காகச் சாப்பிடுங்கள், நிலையான உணவைச் சாப்பிடுங்கள்” எனும் மூன்று முதன்மைக் கருப்பொருட்களாகக் கொண்டு, உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடையே, திறன் மேம்பாடு, கூட்டு மற்றும் அதிகாரமளிக்கும் அணுகுமுறைகள் போன்றவைகள் கலந்த இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துச் சூழலை ஒழுங்குபடுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இதன் செயல்பாடுகளில் ஒன்றாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களில் இருக்கும் உணவகங்களில் தயாரித்து வழங்கப்படும் உணவு பாதுகாப்பானது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை உறுதி செய்திடும் வகையில் "சாப்பிடச் சரியான வளாகம்” (Eat Right Campus) எனும் தரச்சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
சான்றிதழ் பெறுவது எப்படி?
இந்த அமைப்பில் பதிவு செய்திடும் நிறுவன வளாகங்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் சுயமதிப்பீட்டின் வழியாகவோ அல்லது பட்டியலில் இடம் பெற்ற முகமைகளின் வழியாகவோ தணிக்கை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், அதிலுள்ள இடைவெளிகளையும், முன்னேற்றத்தின் பகுதிகளையும் கண்டறிகிறது. அதன் பிறகு கண்டறியப்பட்ட இடைவெளிகளைச் சரி செய்திட வளாக நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின் மூலம், உணவுப் பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் உணவைக் கையாளுபவர்களுக்கு வளாகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்தச் செயல்முறை இத்திட்டத்தின் முக்கியமான படியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, வளாகத்திலிருக்கும் இடைவெளிகள்
அல்லது குறைபாடுகள் சரி செய்து, அதனை மேம்படுத்திட வேண்டும். வளாகத்தில் மேம்பாடுகள் செய்யப்பட்டவுடன், மூன்றாம் தரப்பு தணிக்கைக்கு அவ்வளாகம் உட்படுத்தப்படுகிறது. அதன் பிறகு, வளாகத்திற்கு ஐந்து நட்சத்திர அளவில் மதிப்பீடு வழங்கப்படுகிறது.
இம்மதிப்பீட்டில் மூன்று அல்லது அதற்கு மேம்பட்ட நட்சத்திரங்களைப் பெறும் வளாகத்திற்கு "சாப்பிடச் சரியான வளாகம்” (Eat Right Campus) எனும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் இரண்டு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். சான்றிதழ் வழங்கப்பெற்ற வளாகத்தில், இந்தச் சிறந்த நடைமுறைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கும், இந்த முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்கும் வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமனம் செய்திட வேண்டும். சான்றிதழ் புதுப்பிக்கப்படும் வரை, உணவுப் பாதுகாப்புத் துறை அல்லது தணிக்கை முகமைகள் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்திடத் தங்களது வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
சான்றிதழின் பயன்:
தற்போதைய நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களின் வளாகங்களுக்கு "சாப்பிடச் சரியான வளாகம்”சான்றிதழ் பெறுவது இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும், இது வளாகத்திற்கும், வளாகத்திலுள்ள தனி நபர்களுக்கும் உடல் நலம் மட்டுமின்றி, பொருளாதாரத்திற்கும் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.
இதன் மூலம்,
வளாகத்தில் பாதுகாப்பான, உடல் நலத்திற்கான மற்றும் நிலையான உணவு கிடைக்கிறது.
வளாகத்தில் உள்ள மக்களிடையே உணவு மூலம் பரவும் நோய்கள், குறைபாடு நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களின் நிகழ்வுகள் குறைக்கப்படுகின்றன.
பணிக்கு வராமல் இருப்பது மற்றும் வேலை நேர இழப்பு போன்றவைகளைக் குறைக்கிறது. மேலும், மக்களின் நல்வாழ்வு, ஊக்கம் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
பணியிடம், நிறுவனம், மருத்துவமனை, சிறை அல்லது தேயிலை தோட்டத்திற்கான சுகாதாரச் செலவுகளின் சுமைகளைக் குறைக்கிறது.
மேற்சொன்ன காரணிகள் அனைத்தும் வளாகத்திற்குக் கூடுதல் பொருளாதார நன்மைகளை விளைவிக்கும்.
மேலும், சாப்பிடச் சரியான வளாகமாக அங்கீகரிக்கப்படுவது வளாகத்தின் மதிப்பு மற்றும் அதன் வணிகக் குறியீட்டு மதிப்பை அதிகரிக்கும். அதன் வழியாக, வருங்காலத்திற்கான மாணவர்கள் அல்லது பணியாளர்களை கவர்ந்திழுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மற்ற வளாகங்களிலும் ஏற்படுத்தும். இதன் விளைவாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இச்சான்றிதழ் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள், https://www.eatrightindia.gov.in/ எனும் இணையதளத்தினைப் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.