மகாத்மா காந்திஜி அவர்களுக்குப் பிடித்த உடையும் உபதேசமும்!

Mahatma Gandhi
Mahatma GandhiImg Credit: Chris Nallaratnam
Published on
Kalki Strip
Kalki

அக்டோபர் இரண்டாம் நாள், காந்தி ஜெயந்தி!

புனிதமான மகான் அவதரித்த நாள்.

உலக மக்களுக்கு பல உண்மைகளை தான் வாழ்ந்து காட்டி உணர்த்திய மகான்.

அவரது வாழ்க்கை சரிதத்தில் எந்த இடத்தைத் தொட்டாலும் புத்துணர்ச்சியையும் புனிதத்தையும் பெறலாம்.

எடுத்துக் காட்டிற்கு அவருக்குப் பிடித்த இரண்டு உபநிடதங்களும் அவர் மேற்கொண்ட உடையுமே சாட்சிகள்.

அவற்றைப் பற்றிய சுவையான விவரத்தை அவர் வாயிலாகவே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா?

1.

ஈசாவாஸ்ய உபநிடதம் முழுவதையும் தன் கையினாலேயே எழுதி முடித்தார் காந்திஜி.

அதற்குக் காரணம் என்று கேட்ட போது அவர் கூறிய பதில் இது தான்:

“நான் அதை மனப்பாடம் செய்து கொள்ள விரும்புகிறேன். உபநிடதங்கள் எல்லாம் அடங்கிய ஒரு பெரிய புத்தகத்தை ஒவ்வொரு இடத்திற்கும் தூக்கிக்கொண்டு போக முடியாது.

ஆனால் இந்த சிறு பிரதியை எளிதாக எடுத்துச் செல்லலாம்”.

“மற்ற எல்லா உபநிஷத்துக்களும் மற்ற எல்லா வேத நூல்களும் திடீரென்று எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஈசோபநிஷத்தின் முதல் சுலோகம் மாத்திரம் ஹிந்துக்களின் மனத்தில் பதிந்திருந்தால், ஹிந்து மதம் எக்காலத்திலும் அழிவின்றித் திகழும்.

அந்த சுலோகத்தின் அர்த்தம் இது தான்:

“இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே எல்லாவற்றையும் தியாகம் செய்து அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒரு காலத்திலும் பேராசைப்படாதீர்கள்.”

சுலோகம் இது தான்:

“ஈசாவாஸ்ய மிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யவித் தனம்”

கொல்லத்தில் ஆற்றிய உரை – ஹரிஜன் 30-1-1937 இதழில் வந்தது.

2

ஸ்வேதாஸ்வர உபநிஷத்திலிருந்து ஒரு சுலோகத்தை எடுத்து அதை காந்திஜி ஶ்ரீ மகாதேவ தேசாயிடம் காட்டினார்.

யதா சர்மவதாகாசம் வேஷ்டயிஷ்யந்தி மானவா

ததா தேவமவிக்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி

இதைக் குறித்து காந்திஜி இப்படி கூறினார்:

“பண்டைய காலத்தில் நமது ஜனங்கள் எவ்வளவு ஆச்சரியகரமான அறிவு படைத்திருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மனிதன் மகோன்னதமான ஆன்மாவை அறிந்து கொண்டாலன்றி, அவனுடைய துக்கங்களுக்கு முடிவு ஏற்படுவதில்லை. இதை விளக்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஒரு உவமை அற்புதமானதாகும்.

அதாவது, ஒருவன் மான் தோலை எடுத்து உடலில் சுற்றிக் கொள்ளுவதைப் போல் ஆகாயத்தை எடுத்துச் சுற்றிக் கொள்ள முடியாது என்பதே அந்த உவமையாகும். இந்தச் சுலோகத்திற்குப் பல்வேறு பொருள்கள் கூறலாம். எனினும், அதன் மேலெழுந்தவாரியான அர்த்தம் கூட அற்புதமானதாக இருக்கிறது.”

“இந்த இரண்டு உபநிடதங்களிலும் ஆன்மாவைப் பற்றியே விளக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்குச் சமமான நூல் உலகில் வேறு எங்குமே இல்லை” என்று மேலும் அவர் கூறினார்.

“எனது இடுப்புத் துண்டை, ஶ்ரீ சர்ச்சில் அன்பு கூர்ந்து உலகம் முழுவதும் இலவசமாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்” என்று கூறிய மகாத்மா அதை ஏன் தான் அணிய நேர்ந்தது என்பதை விளக்கினார்.

1921ம் ஆண்டு மதுரைக்குச் சென்றார் மகாத்மா. ரயிலில் ஜனக்கூட்டம அதிகமாக இருந்தது. அனைவரும் அந்நிய உடைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் காந்திஜி கதர் உடுத்துபடி வேண்டினார். அவர்கள் கதரின் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறினர்.

பின்னர் நடந்ததை காந்திஜியின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:

“அவர்கள் கூறியதில் உள்ள அடிப்படை உண்மையை நான் உணர்ந்தேன். நான் அப்போது சட்டை, குல்லாய், பெரிய வேஷ்டி முதலியனவற்றை உடுத்திக் கொண்டிருந்தேன். அவர்கள் கூறியது ஓரளவே உண்மையாகும். ஆனால், நான்கு அங்குல அகலமும், சில அடிகள் நீளமும் உள்ள கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லாத லட்சக்கணக்கான மக்களின் திறந்த உடம்பின் மூலம் நான் முழு உண்மையையும் தெரிந்து கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
Mahatma Gandhi Quotes: காந்தி சொன்ன 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!
Mahatma Gandhi

என் உடலிலிருந்த துணிகளில் கண்ணியமான அளவுக்கு நான் எவற்றைக் களைய முடியுமோ, அவற்றையெல்லாம் களைந்து விடுவதைக் காட்டிலும், அவர்களுக்கு நான் என்ன சரியான பதில் கூற முடியும்?

அவ்விதம் செய்வதன் மூலம் உடைப் பஞ்சத்தினால் கஷ்டப்படும் பாமர மக்களுக்குச் சமமான நிலையை நானும் அடைய விரும்பினேன்.

மதுரைக் கூட்டத்திற்குப் பிறகு மறுநாள் காலையிலேயே நான் அவ்விதம் செய்தும் விட்டேன்.

எங் இந்தியா – 30-4- 1931 இதழிலிருந்து

ஆம், மறுநாள் காலை முதல் அவர் முழத் துண்டையே அணிய ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
காந்தி ஜயந்தி: "சுதந்திர கொண்டாட்டத்தில் என்னால் ஈடுபட முடியாது; என்னால் வர இயலாது!"
Mahatma Gandhi

லண்டன் வட்டமேஜை மகாநாட்டிற்கும் இதே உடையில் தான் செல்வேன் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதன்படியே சென்றார்.

“எனது இடுப்புத் துண்டு கொள்கை என் வாழ்க்கையில் இயல்பாக மலர்ச்சி பெற்றதாகும். யாதொரு முயற்சியுமின்றி, எவ்வித முன் ஆலோசனையுமின்றி அது இயல்பாக ஏற்பட்டதாகும்” என்று அவர் விளக்கமளித்தார்.

எங் இந்தியா - 9-7-1931 இதழிலிருந்து

இது தான் காந்திஜி!

உபநிடதம் கூறியபடி, மனம், மெய், மொழியால் சத்தியத்தை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார் அவர்.

அவர் நினவைப் போற்றுவோம். அவர் காட்டிய வழியில் நடப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com