இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை: மாதவனின் 'G.D.N' படம் வசூலில் சாதனை படைக்குமா?

கோவையின் மாபெரும் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பயோபிக் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?
Gopalswamy Doraiswamy Naidu - G.D.N
Gopalswamy Doraiswamy Naidu - G.D.N
Updated on
Kalki Strip
Kalki Strip

'இந்​தி​யா​வின் எடிசன்’ என்று கூறப்​படும், ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்கை கதை நடிகர் மாதவன் நடிப்பில் 'G.D.N' என்ற பெயரில் திரைப்​பட​மாக உருவாக்கப்பட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக ஜூலை 17-ல் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஆர்.மாதவன் நடித்து இயக்கிய ராகெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" படத்​தைத் தொடர்ந்​து, வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்​டும் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட பல மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இதன் OTT வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜி.டி.​நா​யுடு​வாக நடிக்கும் மாதவனுடன், சத்​ய ​ராஜ், ஜெய​ ராம், பிரி​யா மணி, துஷாரா விஜயன், தம்பி ராமை​யா, வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்​துள்​ள இப்படத்தில், மாதவன் ஜி.டி. நாயுடுவாக மாறுபட்ட பல வயது தோற்றங்களில் நடித்து அதகளப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மாதவன் "G.D.N." திரைப்படத்தில் ஜி.டி. நாயுடுவாக இயல்பாகத் தோன்றுவதற்காக பல மாதங்கள் தீவிரமாகத் தயாராகியுள்ளார். ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, பேச்சுகள், சம்பவங்கள் மற்றும் ஆவணங்களைத் தொகுத்து, தனக்காக ஒரு விரிவான ஆடியோபுக் உருவாக்கி, அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையை ஆழமாகப் புரிந்துகொண்டார் என்றும்,

ஜி.டி. நாயுடுவின் பழைய 16 மி.மீ. வீடியோக்களைப் பார்த்து, அவரது நடை, உடல் மொழி, முகபாவனைகள் மற்றும் பேசும் விதத்தை நுணுக்கமாகப் பயிற்சி செய்ததாகவும்,

G.D.N - Madhavan
G.D.N - Madhavan

ஜி.டி. நாயுடுவைப் போலவே தோற்றமளிக்க தலைமுடி, மீசை, உடை மற்றும் ஒப்பனையில் முழுமையான மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்காக தனது வழக்கமான தோற்றத்தையே மாற்றத் தயங்கவில்லை" என்று இயக்குநரும் மாதவன் பற்றி குறிப்பிட்டுள்ளார். மாதவன் ஒரு பேட்டியில் "ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை விட, அவரது நோக்கங்கள்தான் மிகப் பெரியவை. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை இந்தியப் பாடத்திட்டங்களில் இடம்பெறும் போது தான் இந்தப் படத்தின் வெற்றி உண்மையானதாகும்" என்று கூறியுள்ளது ஜி டி நாயுடுவின் குன்றாத புகழுக்கு ஒரு துளி சான்று.

'GDN' திரைப்படம் முழு வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் பயோபிக் என்பதால் ஏற்கனவே ஜி.டி. நாயுடு பற்றி கூகுள் சொன்னதுதானே என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஆம் ஜி.டி. நாயுடுவின் முக்கிய கண்டுபிடிப்புகள், இந்திய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அவரது கனவு, அதிகார அமைப்புகளுடனான மோதல்கள், அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டம், ஆகிய உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர்.

G.D.N - Madhavan and Priyamani
G.D.N - Madhavan and Priyamani

அதேபோல எத்தனையோ மேதைகள் இருக்க இவரைப் பற்றி படமெடுக்க வேண்டிய காரணங்கள் அநேகம். முக்கியமாக இந்தியாவில் உற்பத்தித் துறையை ஊக்குவித்து, நாட்டை உலகின் முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட 'Make in India' என்ற திட்டம் பரவலாக பேசப்படுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே, இந்தியர்கள் தங்களுக்குத் தேவையான இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் தாங்களே உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நடைமுறையில் செயல்படுத்தியவர் ஜி.டி. நாயுடு.

ஜி.டி. நாயுடுவின் புகழுக்கு காரணமாக எண்ணற்ற கண்டுபிடிப்புகள் இருப்பினும் அவரது வெற்றி மகுடத்தில் வைரங்களாக மின்னும் 5 முக்கிய சிறப்புகளாக இவை கருதப்படுகிறது.

1. இந்தியாவின் 'எடிசன்'

முறையான உயர்கல்வி இல்லாவிட்டாலும், தன்னுடைய ஆர்வம், சுய கல்வி மற்றும் விடாமுயற்சியால் 100-க்கும் மேற்பட்ட புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். குறிப்பாக எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் கொண்ட ரேடியோ, சுவர் கடிகாரம், ஸ்பிரிங் ஜூஸர், கிழங்கு தோல் எடுக்கும் கருவி, தானியங்கி ஒளிப்பட கருவி, ரேடியோகிராம், மின்சார பம்ப் என அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் எளிய ஆனால் அவசியமானதாக இருந்தது. 1937-ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு மின்மோட்டார்களில் ஒன்றை உருவாக்கினார். இது கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. பல அத்யாவசியமான கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக விளங்கியதால் அவர் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படுகிறார்.

2. தொழில்துறை முன்னோடி

கோவையில் போக்குவரத்து மற்றும் இயந்திரத் தொழில்களை வளர்த்ததில் முக்கிய பங்காற்றினார். தொழில் வளர்ச்சிக்கு புதிய பாதையை அமைத்து கோவையை இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக உருவாக்கிய முன்னோடிகளில் ஜி.டி. நாயுடு முக்கிய இடத்தைப் பெற்றதால் அவர் 'தொழில்துறை முன்னோடி' என்று போற்றப்படுகிறார். 1920-களில் யூ.எம்.எஸ். (United Motor Service) என்ற பேருந்து நிறுவனத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தியதில் இவரது பங்கு பெரியது. மின்மோட்டார்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களைத் தொடங்கி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தார்.

தொழில் வளர்ச்சியுடன் சேர்த்து, தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளித்து, திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

3. கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர்

'படிக்காத மேதை'யான நாயுடு, முறையான ஏட்டுக் கல்வி பயிலாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து புத்தகங்களை உருவாக்க ஊக்கமளிக்கும் விதமாக ஏட்டுக்கல்வியை விட 'செயல்வழிக் கற்றலே' சிறந்தது என்ற கொள்கையுடன் வசதியற்ற இளைஞர்களை தொழில் நிபுணர்களாக ஆக்கும் நோக்கில் 1945ல் உருவாக்கிய ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி (இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி) இன்று அரசு தொழில்நுட்பக் கல்லூரியாக (GCT ) பல இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க காரணமாக உள்ளது. நான்கு வருடப் பொறியியல் படிப்புகளை இரண்டாண்டுகளுக்குள் செய்முறைப் பயிற்சியுடன் முடிக்க முடியும் என்ற புரட்சிகரமான கல்விச் சிந்தனையை முன்மொழிந்த சிறப்பு இவருடையதே. மேலும் மாணவர்கள் அறிவியலை நேரிடையாக கற்க வேண்டும் என்பதற்காக தொழிற்சாலைகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் மூலம் தொழில்நுட்பக் கல்வியை எளிதாகக் கொண்டு சேர்த்தார்.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் ஜி.டி. நாயுடு கார் சேகரிப்பு!
Gopalswamy Doraiswamy Naidu - G.D.N

4. விவசாயத்தில் புதுமை செய்தவர்

தொழிற்துறை மட்டுமின்றி விவசாயத்திலும் பல புதுமைகளைச் செய்தார். அறிவியல் முறைகளையும் பொறியியலையும் விவசாயத்துடன் இணைத்து வியத்தகு சாதனைகளைப் புரிந்தார். விவசாயப் புதுமைகள், பயிர் பரிசோதனைகளை தன் சொந்த நிலத்தில் புதுமையான முறையில் விவசாயம் செய்து, பத்தடி உயரத்திற்கு மேல் பருத்திச் செடிகளையும், அடர்த்தியான தினை வகைகளையும் வளர்த்து சாதனை படைத்தார். அதிகப்படியான விளைச்சலைத் தரும் கலப்பினப் பயிர் வகைகளை உருவாக்குவதில் தீவிர ஆராய்ச்சி செய்தார். விவசாயப் பணிகளை எளிதாக்க வேளாண் உபகரணங்களை வடிவமைத்தார். அதில் நிலக்கடலையின் தோலைப் பிரிக்கும் 'கிரவுன்நட் டிகார்டிகேட்டர்' (Groundnut Decorticator) எந்திரம் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது.. இவரின் நவீன விவசாய முறைகளைக் நேரில் பார்வையிட்ட பிரபல அறிவியலாளர் சி.வி. ராமன், விவசாயமும் அறிவியலும் எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை ஜி.டி. நாயுடுவின் நிலம் உணர்த்தியதாகப் பாராட்டியுள்ளதே நாயுடுவின் சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சுயமாகக் கற்று சாதிப்பது எப்படி? ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பாடம்!
Gopalswamy Doraiswamy Naidu - G.D.N

5. எளிமையும் சமூகப் பொறுப்பும் கொண்ட தலைவர்

தனிப்பட்ட புகழை விட நாட்டின் முன்னேற்றத்தையும் இளைஞர்களின் திறன் வளர்ச்சியையும் முக்கியமாகக் கருதி செயல்பட்டவர் ஜி.டி. நாயுடு. காரணம் இவரது எளிமையான வாழ்க்கை. ஓட்டலில் பாத்திரம் கழுவுபவராக பணி செய்து, பணம் சேர்த்து மோட்டார் சைக்கிள் வாங்கி அதைப் பிரித்துப் பார்த்து மெக்கானிக் ஆனவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் எனினும் ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். சமூக பொறுப்புடன் இந்தியாவில் முதல் மின்மோட்டாரை தயாரித்து சிறந்த போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்தார். தொழிற்கல்வி மற்றும் பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்.விவசாயத்திலும் புதிய சோதனைகளைச் செய்து விவசாயிகளுக்கு உதவினார்.

இதையும் படியுங்கள்:
சென்னை மாநகராட்சிக்கு ஜி.டி. நாயுடு கொடுத்த மாஸ் ரிப்ளை!
Gopalswamy Doraiswamy Naidu - G.D.N

இந்த ஐந்து அம்சங்களே ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கும் எண்ணத்தை படக் குழுவினருக்கு அளித்திருக்கும். மேலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தடைகளை மீறி அவர் சாதித்த விதமும் காட்சிகளாக காட்டப்படுகிறது. பலரால் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் இந்திய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணம் திரைக்கு வருகிறது என்பதால் சினிமா பிரியர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இந்தப் படத்தை தங்கள் பிள்ளைகளுடன் காண காத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com