நடுக்கடலில் தத்தளித்த குடும்பம்... 4 கி.மீ கடலில் நீந்தி ஒற்றை ஆளாக மீட்ட 13 வயது சிறுவன்!

Joanne and Austin with Beau (12) and Grace (8)
Joanne and Austin with Beau (12) and Grace (8)Img Credit: ABC
Published on
Kalki Strip
Kalki Strip

மேற்கு ஆஸ்திரேலியாவில் சவுத் ஆஃப் பெர்த் என்ற இடத்திலிருந்து 125 மைல் தள்ளி உள்ளது க்விண்டால்ப் என்ற கடற்கரை.

ஜாலியாகப் பொழுதைக் கடலில் சற்று நேரம் குழந்தைகளுடன் அங்குள்ள ஜியோகிராப் பே (Geographe Bay rescue) என்னும் இடத்தில் கழிக்கலாம் என்று நினைத்தாள் தாயான ஜோன் ஆப்பிள்பீ.

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை. பகல் நேரம்.

13 வயதே ஆன மகன் ஆஸ்டின், குழந்தைகள் பீயூ (12), க்ரேஸ் (8) ஆகியோருடன் பேடில்போர்ட் எனப்படும் விளையாட்டுப் படகில் ஏறிய தாயார் கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்றாள்.

திடீரென்று காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. துடுப்புகள் அலை அடித்துக் கொண்டு சென்றது.

என்ன செய்வதென்று ஜோன் திகைப்பதற்குள் அலைகள் படகை கடலுக்குள் வெகு தூரம் இழுத்துச் சென்று விட்டது.

எல்லோரும் உயிர் காக்க உதவும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டனர். நிமிஷத்திற்கு நிமிஷம் நிலைமை மோசமானது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணோம்!

பிழைக்க முடியுமா, அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்கலானாள் ஜோன்.

வேறு வழியில்லை, துணிந்து ஒரு முடிவை அவள் எடுத்தாள்.

ஆஸ்டினை நோக்கி, "நீ கடலில் குதித்து கரையை நோக்கி நீந்து. அங்கே யாரையாவது உதவிக்கு அழை” என்றாள்.

இதைச் சொல்ல அவள் மனம் துடித்தது. என்றாலும் ஆஸ்டினின் நீச்சல் பயிற்சி மீது அவளுக்கு அபார நம்பிக்கை இருந்தது.

ஆஸ்டினும் உடனே கடலுக்குள் குதித்தான். முரட்டு அலைகளுடன் போராடி நான்கு கிலோமீட்டர் தூரம் நீந்திக் கரையை அடைந்தான்.

இருட்ட ஆரம்பித்து விட்டது.

கரையை அடைந்த ஆஸ்டினுக்குத் தன்னை நம்பவே முடியவில்லை. தானா இவ்வளவு தூரம் நீந்தி வந்தது?

அங்கிருந்து இரண்டு மைல் தூரம் சென்றால் தான் போன் பூத் இருக்கும்.

அங்கே ஓடினான் ஆஸ்டின்.

அவசர உதவியை அழைத்தான்.

“காப்பாத்துங்க, காப்பாத்துங்க, ஹெலிகாப்டர் வேண்டும். ப்ளேன் வேணும். படகு வேணும். என்னோட அம்மாவும்,, தம்பியும் தங்கையும் கடலில் மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்க. உடனே வாங்க.”

பேசி முடித்து விட்டு அப்படியே கீழே விழுந்தான் ஆஸ்டின். அங்கு விரைந்து வந்த உதவிப் படை அவனை உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றது.

அங்கிருந்து தனது தந்தைக்குப் போன் செய்து நடந்ததை விவரித்தான் ஆஸ்டின்.

தனது தாய், தம்பி, தங்கை ஆகியோர் உயிருடன் இருப்பார்களா என்று ஏங்கியவாறு இருந்தான் அவன்.

இதற்குள் உதவிப்படை ஒன்று கடலுக்குள் சென்று ஜோன் சென்ற படகைத் தேட ஆரம்பித்தது.

மாலை மணி ஆறு.

இருட்ட ஆரம்பித்து விட்டது.

இதையும் படியுங்கள்:
சவாலாகும் புற்றுநோய்; கைகொடுக்கும் பாரதத்தின் 'டிஜிட்டல்' ஆயுதம்!
Joanne and Austin with Beau (12) and Grace (8)

ஒரு பெரிய அலை வந்து படகை ஆட்டி குழந்தைகளைப் படகிலிருந்து தள்ளி விட்டது. குழந்தைகள் கடலில் விழ ஜோன் அலற, நல்லவேளையாக உதவிப் படை அவர்களைக் கண்டு விட்டது. கடற்கரையிலிருந்து சுமார் 9 மைல்கள் தள்ளி இருந்த படகை அவர்கள் கண்டனர்.

ஜோனும் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.

டாக்டர்களும் போலீஸ் அதிகாரிகளும் மகிழ்ச்சியில் குதித்தனர்.

ஆஸ்டினை ஏற்றிச் சென்ற அதே ஆம்புலன்ஸ் இவர்களையும் அழைத்துச் சென்றது. தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்பதை ஆம்புலன்ஸில் இருந்த உதவியாளர் மூலம் அறிந்து மகிழ்ந்தாள் ஜோன்.

கார்டியன் பத்திரிகை இதைப் பெரிய செய்தியாக 04-02-2026 இதழில் வெளியிட்டது.

பிபிசிக்கு பேட்டி கொடுத்த ஆஸ்டின், “என்னால் நம்பவே முடியவில்லை. அது ஒரு நீண்ட கனவு” என்றாள்.

காலம் முடியும் முன்னே காலன் வர மாட்டான் என்பது நமது நம்பிக்கை அல்லவா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com