
அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO). அக்னி பிரைம் ஏவுகணையானது சுமார் 2,000 கி.மீ. தூரம் வரைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. டிஆர்டிஓ விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு படைக்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்துக் கொடுப்பதில் டிஆர்டிஓ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று அக்னி பிரைம் ஏவுகணையானது முதன்முறையாக இரயில் மீதுள்ள மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவப்பட்டது. இதன்மூலம் இரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
ஏவுகணை சோதனை மற்றும் ராக்கெட் ஏவுதல் உள்ளிட்ட பல சாதனைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்தச் சாதனைகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளனர். இந்நிலையில் இன்று இரயிலில் இருந்தே அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது டிஆர்டிஓ. ஏவுகணை சோதனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் சாதனையைப் பாராட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “இரயில் மீது அமைந்துள்ள மொபைல் லாஞ்சரை விஞ்ஞானிகள் சிறப்பாக வடிவமைத்தனர். இதன்மூலம் இன்று அக்னி பிரைம் ஏவுகணை இரயிலில் இருந்தே சோதனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்கைத் துல்லியமாக தாக்கும். இந்த ஏவுகணை சோதனையின் வெற்றிக்குப் பின்னால் எண்ணற்ற விஞ்ஞானிகளின் உழைப்பும், ஆயுதப் படையின் உழைப்பும் உள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ மேற்கொண்டது. இந்தச் சோதனை ஒடிசா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போதே இந்தச் சோதனை வெற்றியடைந்த நிலையில், தற்போது இரயில் மீதுள்ள மொபைல் லாஞ்சர் மூலம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.