சிறுகதை: நிஜம் எது? நிழல் எது?

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

பேருந்தை விட்டு இறங்கி அந்த ஒற்றையடி பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தாள் கயல். அவள் ஊருக்குள் வரும் கடைசி பேருந்து அதுதான். அவளை இறக்கிவிட்டு பேருந்து தூரமாக சென்று இருளில் மறைந்தது.

ஆபீஸில் இருந்து கிளம்பும்போதே கயலுக்கு தெரியும் எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும், ஊருக்கு இப்படி நடுஜாமத்தில்தான் வந்து இறங்க முடியும் என்பது. இருப்பினும் அவளுக்கு வேறு வழியில்லை.

ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆனதாலும், அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையிலும், தேவையில்லாத பயத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வந்தாள். அப்படி அவள் வரவழைத்துக்கொண்ட தைரியம் பேருந்தை விட்டு இறங்கும் வரையே நிலைத்திருந்தது.

இப்படி கயல் பயப்படுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. சின்ன வயதில் கயலின் பாட்டி சொன்ன பேய் கதைகள்தான் அவளை இப்போது நடுங்க வைத்தன.

என்னதான் படித்திருந்தாலும், பேய், பிசாசு எல்லாம் கட்டுக்கதை என்று சொன்னாலும், தனியாக அதுவும் இரவு நேரத்தில் சுடுகாட்டைத் தாண்டிச் செல்வதென்றால் பயம் இருக்கத்தானே செய்யும்.

கயலின் மனதில் எண்ண அலைகள் வந்துமோதின... இனி கயலின் வாயிலாகவே கதைத் தொடரட்டும்.

 பாட்டி அடிக்கடி சின்ன வயதில் விளையாட போகும்போது, “அந்த சுடுகாடு பக்கம் மட்டும் போய்டாத கயல். அதுவும் அங்கே இருக்கும் புளியமரம் கீழே மட்டும் நிற்கவே கூடாது” என்று கண்ணை உருட்டியவாரே சொல்வார்.

இப்போது வளர்ந்துவிட்டாலும், இன்னும் அதையெல்லாம் நினைத்தால் எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது.

இங்கே இதை சொல்வதற்கான காரணம், அந்த சுடுகாட்டைத் தாண்டித்தான் இப்போது நான் என் வீட்டிற்குப் போய் ஆகவேண்டும்.

நழுவி வந்த கைப்பையை தோளில் மறுபடியும் எடுத்து மாட்டிக்கொண்டே பார்த்தேன். இரண்டு பக்கமும் மரம் சூழ்ந்திருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத குண்டும் குழியுமான சாலை. இருளை எடுத்து மை பூசிகொள்ளும் அளவிற்குக் கருமை. ஆங்காங்கே எரிந்துகொண்டிருந்த தெரு விளக்குகள்.  விடாமல் ரீங்காரமிடும் பூச்சிகள் என்று கிலி ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அம்சங்களும் அந்த இரவில் இருந்தது.

“என்ன ஒரு ஆள் கூடவா இருக்க மாட்டார்கள். இப்படி சாலை வெறிச்சோடி இருக்கிறதே?” என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

“ஒரு மணிக்கு யார் இருப்பா?” என்று மனமே அதற்கு பதிலையும் சொல்லியது.

 “சரி கடகன்னு எதையும் பற்றி சிந்திக்காமல் போனால் விரைவில் வீட்டுக்கு சென்றுவிடலாம்” என்று மனதில் நினைத்துக்கொண்டே கண்ணை உருட்டி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டேன்.

ஒரு இருபது  நிமிட நடைப்பயணத்தில் வீட்டை அடைந்து விடலாம்தான். ஆனாலும் அதற்குள் நான் எதிர்கொள்ள போகும் சவால்களை நினைத்தால்...

“நேரம் கெட்ட நேரத்திலெல்லாம் வீட்டிற்கு வராதே” என்று அம்மா ஒருமுறை எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்:
ரசம் ரஸமாய் இருக்க சில ஐடியாஸ்..!
ஓவியம்: தமிழ்

தூரத்தில் புகை கிளம்பி வானத்தை நோக்கி போவது தெரிந்தது. ஏதோ எரிந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

இந்த நேரத்தில் சுடுகாடு வழியாக போய்க் கொண்டிருக்கிறேன். அங்கே என்ன எரியும் என்பதை எளிதில் என்னால் கணிக்க முடிந்தது.

“இன்னைக்குன்னு பார்த்தா இப்படி நடக்கணும்” என்று நொந்துகொண்டேன். வேறு வழியில்லை பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். அதில் முதல் கண்டம் இந்த சுடுகாடு.

மெதுவாக சுடுகாட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். திரும்பி என்ன எரிகிறது என்று பார்க்கும் அளவுக்குத் தைரியம் இல்லை. வேர்வை துளிகள் முகத்தில் துளிர்த்துகொண்டிருந்தன.

“அப்பாடா! ஒரு வழியாக முதல் கண்டத்தை கடந்தாகி விட்டது” என்று எண்ணி பெருமூச்சு விட்டேன்.

போகும் வழி முழுக்க பூக்களாக கிடந்தன. அதன் நறுமணம் காற்றில் கலந்து வந்து சுவாசத்தில் இணைந்தது. பூவின் மணம் எப்போதும் எனக்கு அமைதியைக் கொடுக்கும். ஆனால், இப்போது இந்த இடத்தில் பதற்றத்தையே கொடுத்தது.

 “இப்படி சாலையில் கிடக்கும் பூக்களை மிதிக்கக்கூடாது; தாண்டி வந்து விடவேண்டும்” என்று பாட்டி கூறியிருக்கிறார்.

“அப்படியில்லாமல் தப்பித்தவறி அந்தப் பூக்களை மிதித்துவிட்டால் இறந்தவரின் ஆத்மாவும் நம்முடனேயே சேர்ந்து வந்துவிடும்” என்று கூறி பயமுறுத்தியிருக்கிறார்.

ஏனோ பாட்டி சிறு வயதில் கூறி என்னை பயமுறுத்தியது எல்லாம் இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருவது விந்தையாகவே இருந்தது.

யோசித்துக்கொண்டே நடந்ததில் சுடுகாட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி வந்துவிட்டேன். ஆனால், இப்போது இரண்டாவது கண்டம் இருக்கிறது. அதுதான் அந்தப் புளிய மரம்.

பகலிலேயே அந்தப் புளிய மரத்தை பார்க்க பயமாகத்தான் இருக்கும். அதற்கு பக்கத்தில் எந்த சின்ன குழந்தைகளையும் ஊர் மக்கள் விளையாடவிட மாட்டார்கள். அந்த மரத்தில்தான் ஒரு அம்மாவும், அவளுடைய குழந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற கதை உண்டு. அந்தப் பக்கமாக வரும் சின்னக் குழந்தைகளை அந்தப் பேய் தன்னுடைய குழந்தை என்று நினைத்து பிடித்துக்கொள்ளும் என்று கதை சொல்வார்கள்.

“அது அந்த மரத்தில்தான் அமர்ந்து அந்த வழியே வருபவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்று கூறியது சரியாக இப்போது நான் அந்த மரத்தைக் கடக்கும்போது ஞாபகத்துக்கு வந்தது.

இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. தலைவிரி கோலமாக ஒருவர் அமர்ந்திருப்பதுபோல இரவில் காட்சி தந்தது அந்தப் புளியமரம்.

அதன் பக்கம் திரும்பிப் பார்க்காமல் ஓரக்கண்ணாலேயே பார்த்துக்கொண்டே அந்த மரத்தைக் கடக்க முற்பட்டேன்.

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

ரத்தில் ஏதோ வெள்ளையாக இருப்பதைப்போல தெரிந்தது. ஆனால், அது என்னவென்று சரியாக தெரியவில்லை. இப்போது அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு தைரியமும் இல்லை.

இருக்கும் எல்லா சாமிகளின் பெயர்களையும், தெரிந்த மந்திரங்களையும் கடகடவென்று உச்சரித்துக்கொண்டே கடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென்று லேசாக காற்று அடிக்க அங்கே ‘ஜல்ஜல்’ என்ற சத்தம்.

என் இதயம் ஒரு வினாடி நின்று துடித்தது. “ஒருவேளை இதுவரை கேள்விப்பட்ட கதைகளெல்லாம் உண்மையோ?” என்று மனம் நினைத்தது.

சலசலவென்ற சத்தத்துடன் என் எதிரிலே வெள்ளையாக ஏதோ ஒன்று வந்துவிழுந்தது. ஒரு நிமிடம் உறைந்துபோனேன். பின்பு சுதாரித்துக்கொண்டு அருகில் சென்று பார்த்தேன்.

அது ஒரு பெரிய சைஸ் வெள்ளை நிற பாலித்தின் கவர். அந்த ‘ஜல்ஜல்’ சத்தமும் அதில் இருந்து தான் கேட்டிருக்கிறது.

“அடக் கடவுளே! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்? என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது” என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

“ஒரு வழியாக இரண்டு கண்டங்களையும் கடந்துவிட்டேன். இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்து விடுவேன்” என்று மனம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் வரும் விஷயத்தை முன்னதாகவே அம்மாவிடம் தெரிவிக்கவில்லை. “வீட்டுக்கு போய் அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி தரவேண்டும்” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அப்படியே யோசித்துக்கொண்டு நடந்தேன். திடீரென்று ஒரு ஆண் குரல் ‘கயல்’ என்று என் பெயரைச் சொல்லி அழைத்தது.

“அந்த நடுராத்திரியில் யார் என்னை அழைப்பது?” என்று எனக்கு சற்று பயமாகவே இருந்தது.

திரும்பி பார்க்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கையில், “சில நேரங்களில் பேய்கள்கூட நம் பெயரைச் சொல்லிக் கூப்பிடும். அப்போது திரும்பி பார்த்து விடவே கூடாது” என்று பாட்டி என்றோ சொன்னது மறுபடியும் நினைவுக்கு வந்தது.

மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அங்கே வயதான ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

“நீ செல்லத்தாயி பேத்தி கயல்தானே” என்று சரியாக கேட்டார்.

ஓ! யாரோ ஊரில் இருக்கும் பெரியவர் போலிருக்கு. நான்தான் இன்று எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டேயிருக்கிறேனே!” என்று நினைத்துக்கொண்டேன்.

“ஆமாம் ஐயா. நீங்கள் யார்?” என்று கேட்டேன்.

“நான்தான் ராமசாமி. இந்த ஊருலதான் பெட்டிக்கடை வைச்சிருக்கேன். உங்க பாட்டியை எனக்கு நல்லா தெரியுமே” என்று பேசிக்கொண்டே வந்தார்.

“அப்பாடா! பயந்துகொண்டே வந்ததற்கு இப்போது ஒரு வழி துணை கிடைத்தது” என்று சிறிது சந்தோஷப்பட்டேன்.

“எதற்கும் இவருக்கு கால் இருக்கிறதா? என்று பார்த்து விடுவோம். பேய்களுக்கு கால்கள் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று மனதில் தோன்றியது.

மெதுவாக கீழே குனிந்து பார்த்தேன். அதை அவரும் கவனித்து விட்டார். “என்னம்மா, கால் இருக்கான்னு பாக்குறியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஐயா? இந்த நேரத்தில் நீங்க இங்க எப்படி?” என்று கேள்வி எழுப்பினேன்.

“நானும் நீ வந்த அதே கடைசி பஸ்ஸில்தான்ம்மா வந்தேன். நீ முதலில் இறங்கி விருவிருன்னு நடந்து வந்துட்ட, எனக்கு வயசாயிடுச்சு இல்லையா? அதான் பொறுமையா வந்தேன்” என்று பதில் கூறினார்.

சிறிது நேரம் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். இருவரும் கால் அடி வைக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அதை கவனித்து கொண்டே சிறிது தூரம் வந்த எனக்கு இப்போது ஒருவர் அடி வைக்கும் ஓசை மட்டுமே கேட்டது.

இதையும் படியுங்கள்:
சிலிர்க்க வைக்கும் சிக்கிம் பயணம் சுற்றிப்பார்க்கலாம் வாங்க!
ஓவியம்: தமிழ்

திரும்பி பார்த்த எனக்கு அதிர்ச்சி. அந்த வயதானவரைக் காணவில்லை. இப்போதுதானே என்னுடன் பேசிக் கொண்டு வந்தார். அதற்குள் எங்கே போயிருக்க முடியும். என்னுடைய வீட்டை தாண்டித்தான் அவர் போக வேண்டும் என்றுகூட சொன்னாரே! அதனால் கண்டிப்பாக அவர் வீட்டிற்கு போயிருக்க முடியாது. “ஒருவேளை அவரும் பேயாக இருக்குமோ?”    என்ற சந்தேகம் வந்தது. இந்த நேரத்தில் இந்த இடத்தில் அவர் வந்ததே ஒரு அசாதரண விஷயம்தான் என்று எனக்கு அப்போதே தோன்றியதை இப்போது நினைத்துப் பார்த்தேன்.

ப்படி பல இன்னல்களைத் தாண்டி ஒரு வழியாக வீட்டை அடைந்துவிட்டேன். இன்னமும் வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துகிடந்தது.

“என்ன ஆச்சு அம்மாவிற்கு? ஒருவேளை நான் வருவது தெரிந்திருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன்.

“அம்மா! அம்மா!”  என்று கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாக அம்மாவைத் தேடி கடைசியில் பெட்ரூமில் அம்மா ஒருக்களித்துப் படுத்திருப்பதைப் பார்த்தேன்.

“என்னம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் பாக்குறதுக்காக நேரம் காலம்கூட பார்க்காமல் வந்திருக்கேன். நீ என்னன்னா கண்டுக்கவே மாட்டேங்குறியே?” என்று பொய்யாக கோவித்துக்கொண்டேன்.

அம்மா எதுவுமே பேசாமல் விசும்பிக்கொண்டிருந்தார். என்னவென்று போய்ப்பார்த்தால் அம்மா அழுதுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

“எதுக்கும்மா அழற? என்ன ஆச்சு?” என்று கேட்டேன். இப்போதும் பதில் இல்லை.

“ஒருவேளை சொல்லாமல் வந்ததால் கோவமோ?” என்று நினைத்தேன்.

அப்போதுதான் பக்கத்து வீட்டு ராதா, அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

 “சில மணி நேரம் முன்புதான்ம்மா நான் ஊரிலிருந்து வந்தேன். இங்கு வந்ததும் என்னோட அம்மா நடந்த எல்லா விஷயத்தையும் கூறினார். அதான் உங்களைப் பாக்க நேரம் காலம்கூட பார்க்காமல் ஓடிவந்தேன்” என்று பதற்றமாகக் கூறினாள்.

“என்ன விஷயம்? ஏன் யாரும் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டறீங்க?”  என்று கடுப்பாகிக் கேட்டேன்.

இப்போது ராதாவும் அமைதியாக இருந்தாள்.

என் கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லாதது எனக்கு வியப்பாக இருந்தது.

......

......

......

நீண்ட மௌனத்திற்கு பிறகு ராதா அம்மாவிடம் சொன்னாள், “எல்லாம் நேரம்மா! யாருக்குத் தெரியும் கயல் வந்த பஸ் இப்படி விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்து அதில் பயணித்த அனைவரும் இறந்து போவாங்கன்னு. எல்லாம் விதிம்மா! என்னத்த சொல்ல” என்று வருத்தமும் விசும்பலுமாக கூறினாள்.

இதைக் கேட்டதும் எனக்கு தலையிலே இடி விழுந்ததுபோல இருந்தது.

“என்ன சொல்லறாங்க? அதான் நான் இவங்க முன்னாடியே நிக்கிறேனே? என்னை இவங்களால பார்க்க முடியவில்லையா? அதனால்தான் நான் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லையா?”

விரைந்து பூஜையறைக்கு சென்று பார்த்தேன். அங்கே என்னுடைய படத்திற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள்.

“கடைசியாக கயல் முகத்தைக்கூட என்னால பாக்க முடியலையேம்மா!” என்று அழுதுகொண்டே கூறினாள் ராதா.

என் தலையே சுற்றுவது போல இருந்தது. “அப்போ வரும்போது சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்தது என்னுடைய உடல்தானா?”

வேதனையுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். ராமசாமி ஐயா நின்றுகொண்டிருந்தார்.

“என்னம்மா! இப்போ புரியுதா? நாம இறந்துவிட்டோம் என்பதை புரிந்துகொண்டால்தான் மோட்சத்திற்கான கதவு திறக்கும். இல்லையென்றால் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்” என்று கூறினார்.

இப்போதுதான் புரிந்தது. இவரும் என்னுடன் பேருந்தில் வந்ததாக சொன்னார் அல்லவா? அப்படியானால்... அவரும் இறந்து விட்டார் என்று புரிந்தது. உண்மை புரிந்ததும்தான் நிழல் எது, நிஜம் எதுவென்பது விளங்கியது.

இனி இங்கு எனக்கு வேலையில்லை என்பதை புரிந்துகொண்டு வேதனையுடன் வீட்டை திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com