

மரணத்தை வெல்ல முடியுமா என்ன? இதற்கு ஒரு மாநாடு வேறு நடக்கிறதா என்ன என்று கேள்வி கேட்போருக்கு பதில்: ஆம், மரணத்தை வெல்ல மாநாடு நடக்கிறது. ஒரு மாநாடு அல்ல, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் மாநாடு நடக்கிறது என்பது தான் பதில்.
மரணத்தை எப்படி வெல்வது என்பதை ஆராயும் பல்வேறு ஆகப் பெரிய உலகப் பணக்காரர்களும், விஞ்ஞானிகளும், ஆரோக்கிய மேம்பாட்டு நிபுணர்களும் இதில் பங்கேற்று உரையாற்றுவதால் இதை மரணத்தை வெல்வது பற்றி அறியத் துடிக்கும் மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
GLOBAL WELLNESS SUMMIT - GWS – என்று அழைக்கப்படும் இந்த உலக ஆரோக்கிய மேம்பாட்டு மாநாடு 2018ல் இத்தாலியில் நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது.
2025ம் ஆண்டில் துபாயில் நடைபெற்றது.
2026ல் தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடுகளுக்கு உற்சாகமூட்டி ஆர்வத்துடன் தங்களின் செயல்பாடுகளை விவரிக்கும் அறிஞர்கள் உலகப் பத்திரிகைகள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் இடம் பெறுகின்றனர்.
டேவ் ஆஸ்ப்ரே (DAVE ASPREY):
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான டேவ் ஆஸ்ப்ரே புல்லட் ஃப்ரூப் காபி நிறுவனத்தின் உரிமையாளர். மரணத்தை வெல்வதற்காக அவர் தனது உடலையே ஒரு சோதனைச்சாலை ஆக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காகத் திகைக்க வைக்கும் பல வழிமுறைகளை அவர் கையாள்கிறார்.
ஸ்டெம் செல்களை இவர் தனது உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவரது இடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை முதுகெலும்பு மற்றும் இதர முக்கிய பகுதிகளில் செலுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு ஆறு மாதமும் இந்த ஸ்டெம் செல் ஊசி போடுதல் நடக்கிறது. நூறு சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் துணை உணவுப் பொருள்களை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்கிறார். இன்ஃப்ரா ரெட் ஒளியில் தான் அவர் குளிக்கிறார்.
உயர்தர ஆக்ஸிஜன் அறையில் தான் அவர் இருக்கிறார். விமானப் பயணத்தின் போது விசேஷமான மஞ்சள் கண்ணாடியைத் தான் அவர் அணிவது வழக்கம். 1973ம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது வயது 53. "180 வயது வரை நிச்சயமாக வாழ்வேன்" என்கிறார் இவர். "அல்லது முயற்சியாவது செய்வேன்” என்பது இவர் குறிக்கோள்.
இவரது வீட்டில் உள்ள சோதனைச்சாலையின் பெயர் ஆல்பா லேப்ஸ்.
இங்கிருக்கும் சாதனங்களைக் கேட்டால் பிரமித்து விடுவோம். 21 நிமிடங்களில் 150 நிமிட உடல்பயிற்சி செய்ததன் பலனைத் தரும் ஒரு சாதனம் உட்பட ஏராளமான சாதனங்கள் உள்ளன.
இவரது புல்லட்ஃப்ரூப் உணவுத் திட்டம் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இவரது மனைவியான லனா ஆஸ்ப்ரே மூப்பைத் தடுக்கும் நவீன சிகிச்சைமுறையில் ஒரு நிபுணர். இவரது புத்தகங்களை சுமார் இருபது கோடி பேர் படித்துள்ளனர்.
இவர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் ஒரு பேச்சாளர்.
டான் பூட்னர் (DAN BUETTNER):
அடுத்து ப்ளூ ஜோன்ஸ் என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமான டான் பூட்னர் இன்னொரு பேச்சாளர்.
பட்டனே போடாமல் திறந்துவிட்ட சட்டையோடு நல்ல சிரித்த முகத்தோடு அடிக்கடி ஜோக்குகளை உதிர்க்கும் டான் பூட்னர் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தோரை நேரில் சந்தித்து அவர்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து மரணத்தை வெல்லும் அல்லது நீண்ட காலம் தள்ளிப் போடும் உத்திகளைச் சேகரித்திருக்கிறார்.
இவருக்கென்று தனி சிஷ்யர் கூட்டம் உண்டு.
ஜூன் யுன் (JOON YUN):
தென்கொரியாவில் 1967ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பெரிய டாக்டர். அமெரிக்காவில் ஹெக்டே ஃபண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்களின் உரிமையாளர். நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி மரணத்தை வெல்லும் வழியைக் காண்போரை உற்சாகப்படுத்தி வருபவர் இவர்.
இதற்காக 2014ம் ஆண்டிலிருந்து வருடம் ஒரு முறை இதில் சிறந்து விளங்குபவருக்கு பத்து லட்சம் டாலர் பலோ ஆல்டோ லாங்க்விடி பரிசை இவர் அளித்து வருகிறார்.
இப்படி இன்னும் பலர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் பேசி உலகினரை உற்சாகமூட்டி வருகின்றனர்.
ஆரோக்கிய மேம்பாடு பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்வதோடு நீடித்த ஆயுளுக்கான உத்திகளையும் இவர்கள் சொல்வதால் மக்கள் இவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.