'ஏ ஜி ஐ'... வந்துட்டான்யா.. வந்துட்டான்..! யாருடா இவன்?

நிபுணத்துவம் வாய்ந்த நாராயண வேம்பு உடனான இந்த உரையாடல், AI-யின் எதிர்காலத்தை மிகவும் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது.
ஏ ஜி ஐ ரோபோ
ஏ ஜி ஐ ரோபோImage credit- AI Image
Updated on

அமெரிக்கா ரிட்டர்ன் நாராயண வேம்பு ஒரு மென்பொறியாளர். டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் இங்கு வந்து ஒரு மென்பொருள் கம்பெனி நடத்தி வருகிறார்.

குடும்ப நண்பர். அவரிடம் கேட்டேன், “குவாண்டம் கணினி வந்திட்டு. அதுக்குள் வைக்க ஏ ஐ… வந்தாச்சு. அடுத்து என்ன சார்?”

அவர் சொன்னார்.. “அடுத்து ஏ ஜி ஐ ஆர்ட்டிஃபீஷியல் ஜெனெரல் இண்டெலிஜென்ஸ்... (AGI Artificial General Intelligence) அதுக்குப் பின் ஏ எஸ் ஐ.. அதாவது ஆர்ட்டிபீஷியல் சூப்பர் இண்டெலிஜென்ஸ் (ASI Artificial Super Intelligence)”

“கொஞ்சம் எளிமையா சொல்லுங்களேன்..”

“இப்போ உங்க போனில் உள்ள ஏ ஐ கூகுள் மெனு, வாட்ஸ் அப் மெட்டா, மைக்ரோ ஸாஃப்ட் கோ பைலட், சாட் ஜிபிடி இவை மனிதர்களுக்கு உதவ வந்துள்ளன. அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடி பதிலை ஆராய்ந்து தர தான் வடிவமைக்கபட்டுள்ளன. ஒரு லைப்ரரி, ஒரு டியூஷன் வாத்தியார், சர்வரோக சந்தேக நிவாரணி போல.

ஏ ஜி ஐ வந்துவிட்டால் மனிதர்களால் சிந்திக்க முடியாத விஷயங்களையும் செய்ய இயலும். அப்போது வழக்கமான மனித சிந்தனையின் கோட்பாடு மாறும். அந்த ஏ ஜி ஐ இப்போது சாதாரணமாக நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்கள், மருத்துவத்துறை, கலாச்சார விஷயங்களில் புதுமையைப் புகுத்தி இப்படி வாழலாம் எனச் சொல்லும்.

இதையும் படியுங்கள்:
AI-யால் வரப் போகும் ஆபத்து... கூகுள் முன்னாள் தலைவர் எச்சரிக்கை!
ஏ ஜி ஐ ரோபோ

வாகனங்களின் டிசைன் மாறும். கல்வி முறையை ஆராய்ந்து மொத்தமாக மாற்றி விடும். உலகம் சுருங்கும். பொதுவான நிதி மற்றும் நீதி மையம் இருக்கும். கரென்ஸி பொதுவானதாக மாறும். டாலர் யுவான், ரூபாய், யூரோ, பவுண்ட், ரூபிள் இருக்காது.

பணம் எனும் பொருள் கோட்பாட்டில் மாற்றம் வரும்.. உதாரணமாக ஜி பே பண்ணுவோம் என்பதை முன்பு நீங்கள் நினைத்தது உண்டா.. அஞ்சு ரூபா என்றாலும் செய்ய முடியுது இல்லியா.

புது வாழ்வு என எம் கே தியாகராஜ பாகவதர் சிறையில் இருந்து வந்து ஒரு படம் நடித்தார் இல்லையா… மனித சமுதாயம் ஏ ஜி ஐ வழிகாட்டுதலில் ஒரு புது வாழ்வை வாழ வைக்கும்,” என்றார் நாராயண வேம்பு.

“முக்கியமா என்னென்ன மாறுதல் வரும்?”

“கல்யாணம், குழந்தைகள், குழந்தைகளின் படிப்பு, உத்யோகம், குழந்தைகளின் வேலை வாய்ப்பு, குழந்தைகள் திருமணம், வெளி நாட்டில் வேலை, ரிடையர்மெண்ட், பென்ஷன், நோய் ஆபரேஷன், மருந்து, ஆஸ்பத்திரி மரணம்….

இப்படி சாதாரணமாக மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஏ ஜி ஐ புகுந்து அதில் புதுமைகளை புகுத்தும்…மேம்படுத்தும். நீங்கள் வாழும் வழக்கமான வாழ்வு முறையை அடுத்த நூற்றாண்டில் 2136ல் மக்கள் வாழ மாட்டார்கள். அதற்குள் ஏ எஸ் ஐ வந்து விடும்.”

“அது என்ன புது அயிட்டம்?“

“ஆர்ட்டிஃபீஷியல் சூப்பர் இண்டெலிஜென்ஸ். இது தியரி அளவில் தான் இருக்கு. இருந்தாலும் அதன் அடிப்படை வேறுபாடு சொல்றேன். ஏ ஜி ஐ மனிதன் போலவே சிந்தித்து செயல்படும்.. ஆனால் வேகம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் விரைவாக..

ஆனால் ஏ எஸ் ஐ மனிதனை விஞ்சி சிந்திக்கும். ஏ எஸ் ஐ என்ன செய்யும் என்றால் நாம் ஒரு புரோகிராம் எழுதித் தந்தால் அதை பல மடங்கு தானாக மெருகேற்றி மாற்றி எழுதிக் கொள்ளும்... பல கோடி ஐன்ஸ்டீன் மூளைகளின் சக்தியைக் கொண்டு சிந்திக்கும். அதன் ஐ க்யூ வை அளவிட முடியாது. ஏ எஸ் ஐ ஒரு ஒரு மனிதன் என்றால் இப்போதுள்ள மனித மூளை திறன் ஒரு சின்ன ஓரறிவு புழு தான்.

ஒரு ஐடியா கோடிட்டு காட்டிவிட்டால் போதும், அதுவாகவே தயார் படுத்திக் கொள்ளும். ஒரே நேரத்தில் எல்லா துறைகளிலும் புகுந்து புறப்படும்.. பயாலஜி, மருத்துவம் விண்வெளித்துறை இப்படி

உதாரணத்துக்கு பாராசிட்டமால் காய்ச்சல் மாத்திரை இருக்கு இல்லியா.. அதுக்குன்னு சில பக்க விளைவுகள் இருக்கு. அதை இல்லாதபடி அணு மூலக் கூறுகளில் மாற்றம் செய்யும்.

புது தனிமங்களை உருவாக்கும்.. புதிய மெட்டல்கள் வரும். சூரிய சக்தியிலேயே எல்லாம் இயங்கும். தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட அளவு மழை பெய்ய வைக்கும். சந்திரனில் காற்று இல்லை.. காற்று உற்பத்திக்கு வழி சொல்லும்..மக்கள் அங்கே குடியேறுவார்கள்.

சஹாரா பாலைவனத்தில் விளையக் கூடிய நெல், கோதுமை, மரபணு மாற்ற பயிர்கள் உருவாக்கும். வீடுகளில் சமைக்க வேண்டாம். காமன் கிச்சன் கோட்பாடு வந்து விடும். சத்தான உணவு கிடைக்கும்...”

“ஓ. பலே சென்னையில் பெரு வெள்ளம்.. ஆனால் மழை நீர் தேங்காது.. இது எல்லாம் சரியா தான் இயங்குது என்பதற்கு எப்படி டெஸ்ட் செய்வாங்க?”

“வழி இருக்கு. ஸ்டீவ் வோஸ்னியாக் என்ற ஆப்பிள் துணை நிறுவனர் ஒரு டெஸ்ட்டிங் வழி சொல்கிறார். வோஸ்னியாக் காஃபி டெஸ்ட் என்று பெயர். அதன்படி ஒரு ஏ ஜி ஐ ரோபோவிடம் ஒரு சோதனைச் சாலையில் வைத்து காஃபி போய் கிச்சனில் போடு என உத்தரவு போட வேண்டும்.

அது முன்பின் அறியாத ஒரு தெருவில் ஒரு வீட்டுக்குள் போய் கிச்சனைத் தேடி காஃபிக்கு தேவையான அத்தனையையும் தேடி போட்டு விட வேண்டும். அது தான் பரீட்சை. இதை ஏ ஐ மெஷின்கள் செய்ய முடியாது. ஏ ஜி ஐ ரோபோக்கள் செய்து விடும்.”

இந்த காஃபி டெஸ்ட்டை ரோபோக்கள் 2032ல் பாஸ் செய்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.

நான் கேட்டேன், “காபி போட்டு விட்டால் அதற்கு எல்லாம் தெரிந்து விட்டது என அர்த்தமா..?”

நாராயண வேம்பு சொன்னார் “இல்லை இன்னும் இரண்டு பரீட்சைகள் பாக்கி இருக்கு.”

“அது காலேஜ் மாணவன் டெஸ்ட், வேலைக்கு போகும் இண்டர்வியூ டெஸ்ட் என இரண்டு உள்ளது. மாணவன் டெஸ்ட்டில் அந்த ஏ ஜி ஐ ரோபோ ஒரு கல்லூரி வகுப்பில் மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வேண்டும். லேப் பரிசோதனைகள் செய்யணும்... பரிட்சை எழுதி மற்றவர்கள் போல் பாஸ் செய்து டிகிரி வாங்கணும்.”

“ஓஹோ.. அலெக்ஸா ரோபோ.. எம் டெக் டிகிரி போட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கு.”

“வேலைக்கு போக இண்டர்வியூ டெஸ்ட்டில் அது மற்றவர்களைப் போல் இண்டர்வியூ பேனல் முன் கேள்விகளுக்குப் பதில் சொல்லி செலக்ட் ஆக வேண்டும்.”

“இப்படி ஒரு டெஸ்ட்டிங் மெதட் எதுக்கு..?”

“மனித இனத்துக்கு உதவத்தானே இவைகளைக் கண்டுபிடிச்சிருக்கோம். அந்த ரோபோக்கள் சக மனிதர்களின் பிரச்னை, வாழ்வியல் நிகழ்வுகளில் எப்படி முடிவெடுப்பது என அறிந்து இருக்கணும் என்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். அந்த நிலையில் தான் அதுக்கு நியூரோ இண்டர் ஃபேஸ் அதாவது மனித மூளையுடன் இணைந்து சிந்திக்கும் தன்மை விளங்கும்,” என்றார் வேம்பு.

“போச்சு அப்போ ஏ ஜி ஐ ரோபோக்கள் பிளஸ் டூ, நீட் இதெல்லாம் படிச்சு தான் வரணும்..ட்யூஷன் போகணும்.. கோச்சிங் சென்டர் போகணும். அந்த மாணவன் படும் பாடு, பெற்றோர் படும் பாடுகள் அதுக்கு தெரிஞ்சிருக்கணும்... இந்தக் கருத்து அறிஞர் அண்ணா சொன்னதாச்சே, தம்பி. அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் நீ மக்களுடன் மக்களாக சேர்ந்து இரு.. அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்று உதவு.. உன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாதே.. இதைத் தான் விஞ்ஞானிகள் ரோபோக்களுக்குச் சொல்றாங்க..அப்போ, இந்த ஏ ஜி ஐ ரோபோ ஒரு கவுன்சிலர் தான்.”

சிரித்தார் நாராயண வேம்பு. “நமக்கு உதவத்தானே விஞ்ஞானம்.. நமக்காகத்தானே ஏ ஜி ஐ ரோபோ.. ரோபோவுக்காக நாம் இல்லியே...”

நான் “ஒரு நல்ல டெஸ்ட்டிங் வழி நான் சொல்றேன்.. கொஞ்ச நாள் எங்க ஊரில் ஆட்டோ ஓட்டச் சொல்லுங்க… உலகம் நன்றாகப் புரிந்து விடும். எல்லோரும் எளிதில் புரிஞ்சுக்க ஏ ஐ, ஏ ஜி ஐ, ஏ எஸ் ஐ இதுக்குள்ள வித்தியாசத்தைச் சொல்லுங்களேன்” என்றேன்.

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்கின் xAI  ல் வேலைவாய்ப்பு : செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கு அழைப்பு..!
ஏ ஜி ஐ ரோபோ

“சொல்றேன்.. இந்த தெரு நாய்கள் தொல்லையை வச்சே விளக்கலாம். தெரு நாய்கள் மொத்தம் எத்தனை இந்தியாவில் இருக்கு, தமிழ்நாட்டில் எத்தனை, உங்க ஊரில் எத்தனை, உங்க தெருவில் எத்தனை என ஒரு டேட்டா கேட்டால் ஏ ஐ பதில் உடனே சொல்லிவிடும்.. அதில் எத்தனை நாய்கள் ரேபிஸ் அபாயம் உள்ளவை, ரேபிஸ் மருந்து உள்ள ஆஸ்பத்திரிகள் பற்றிய விவரங்கள், ரேபிஸுக்கு வைத்தியம் என்ன என ஏ ஜி ஐ சொல்லிவிடும். ஏ எஸ் ஐ நாயின் ஜீனை ஆராய்ந்து ரேபிஸ் தாக்காமல் இருக்க அதன் டி என் ஏ வில் ஜெனிட்டிக்கல் மாற்றம் செய்து விட வழி சொல்லும்.. இல்லையேல் நாய் உணவில் எந்த மருந்துகளைக் கலந்து தந்தால் ரேபிஸ் அட்டாக் வராது என சொல்லும்...”

“புரியும் படி.. கரெக்டா சொன்னீங்க.. அப்போ இந்த கொசுவையும், கரப்பானையும் ஒழிச்சிடலாம்.. வர வர காக்கைகளையே காணோம்.. கழுதைகள் எண்ணிக்கை குறைஞ்சிட்டு.. தேள் கிராமத்து ஓட்டு வீடுகளில் இல்லை.. இதுக்கெல்லாம் காரணம் ஏ ஐ மாதிரி தெரியலியே.. எதுவும் ஏலியன்ஸ் வேலையா இருக்குமோ?” என்றேன் நான்.

இதையும் படியுங்கள்:
200 மில்லியன் டாலர் வேண்டாம் என உதறிய கிளாட் ஏ ஐ... அமெரிக்க அரசாங்கத்தோடு நடக்கும் மாபெரும் மோதல்!
ஏ ஜி ஐ ரோபோ

சிரித்தார் நாராயண வேம்பு “அப்படி ஏலியன்ஸ் வந்து போறாங்கன்னா, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏ எஸ் ஐ மூலம் தான் முடியும். அதனால் தான் அவர்கள் பாஷையை, பழக்கவழக்கங்களை அறிய முடியும்.. அவர்கள் இருக்கும் கிரகம் எந்த நட்சத்திர குடும்பம்.. அதில் அந்த கிரகத்தில் நீர் இருக்கா, எத்தனை தொலைவு அது நட்சத்திரத்திடம் இருந்து உள்ளது..என ஆராய ஏ எஸ் ஐ தான் ஹெல்ப் பண்ணும். நிச்சயம் விண்வெளி நீள, அகல, உயரம், பருமனை ஏ எஸ் ஐ அளந்து விடும் மீட்டர் சுத்தமாக,” என்றார்!

logo
Kalki Online
kalkionline.com