HBD Thalapathy Vijay
HBD Thalapathy Vijay

HBD தளபதி – விஜய் 50!

அது 1992ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம். பல பெரிய கதாநாயகர்களை வைத்து இயக்கிய பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர், தன் மகனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கினார். படத்தை இயக்குனரே தயாரித்தார்.

படம் பார்த்து வெளியில் வந்த சிலர், ‘டைரக்டருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை நல்லாதானே இருந்தார்’ என்ற ரீதியில் பேசினார்கள். ‘இவனெல்லாம் எல்லாம் ஹீரோவா?' என்று திரைப்படத்துக்காரர்களே பேசினார்கள். சில பத்திரிகைகள் 'இந்தப் படம் விமர்சனத்திற்குக்கூட தகுதி இல்லாதது' என்று எழுதின. இருப்பினும் அப்பாவும் மகனும் தொடர்ந்து படங்களைத் தந்தார்கள்.

இன்று மகன் இந்தியாவின் மிகப்பெரிய ஹீரோ. அரசியல் நட்சத்திரம். நம்பிக்கையின் மறு உருவம். அப்பா – மகன் யார்? அவர்களுடைய பெயர்கள் என்ன என்று இங்க சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும்! அந்த மிகப்பெரிய ஹீரோவின் 50வது பிறந்தநாள் இன்று!

1992ஆம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடித்த முதல் படத்தின் பெயர் ‘நாளைய தீர்ப்பு’.

தன் மகன் விஜய்யை ஹீரோவாக்க உண்மையில் அப்பா எஸ்.ஏ.சிக்கு ஆர்வம் இல்லை. இருப்பினும் மகனின் பிடிவாதத்தால் அவனை ஹீரோவாக நடிக்க வைத்து படம் தயாரித்தார்.

Thalapathy Vijay
Thalapathy Vijay

அஜித் முதல் படமான ‘அமராவதி’யில் ஜோடியாக, குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்த சங்கவியை தன் மகனுடன் ஜோடி சேர்த்து கிளாமர் கதாநாயகியாக மாற்றி, இளம் வயது ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவைத்தார். (தல, தளபதி மோதல் அப்போதே ஆரம்பமாகி விட்டதோ!)

‘ரசிகன்’, ‘கோயம்முத்தூர் மாப்ளே’ போன்ற விஜய் நடித்த படங்கள் சுமாரான வெற்றி பெற்றாலும், விஜய் நடிக்கும் படங்களில் ஆபாசம் இருக்கிறது; இரட்டை அர்த்த வசனம் இருக்கிறது என்ற நெகடிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. விஜய்க்கு நல்ல படங்கள் அமைய வேண்டுமே என்று அப்பா எஸ்.ஏ.சி கவலைப்பட்டார்.

இயக்குனர் விக்கிரமன் ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டு விஜயை அணுகினார். (என் மகன் விஜய்க்கு ஒரு நல்ல படம் செய்துகொடுங்கள் என்று அப்பா எஸ்.ஏ.சி விக்ரமனிடம் நேரில் சென்று கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் இன்று வரை கோடம்பாக்கத்தில் நிலவுகிறது)

1996ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. "காதல் என்பது ஒரு சிலருக்கு செடி மாதிரி. ஒரு பூ உதிர்ந்தால் அடுத்தடுத்து பூ பூக்கும். ஆனால், சில பேருக்கு அந்த பூ மாதிரி ஒரு தடவை உதிர்ந்தா மறுபடியும் ஒட்ட வைக்கமுடியாது" என்று விஜய் சொல்லும் வசனத்திற்கு அன்று தியேட்டரே கை தட்டியது. விஜயை தவிர வேறு யார் சொன்னாலும் இந்தப் படமும் வசனமும் மக்களிடம் சென்று சேர்ந்திருக்காது என இன்று வரை ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

Thalapathy Vijay
Thalapathy Vijay

1990களின் மத்திய காலகட்டங்களில் அதிக காதல் கதை திரைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன.

‘லவ் டுடே’, ‘ஒன்ஸ் மோர்’, ‘நேருக்கு நேர்’ என மாறுபட்ட காதல் படங்களில் நடித்தார் விஜய். இதன் விளைவாக ரசிகர்களுடன் நிறைய ரசிகைகளும் விஜய்க்கு கிடைத்தார்கள்.

பாசில் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ‘காதலுக்கு மரியாதை’ விஜய்க்கு பெரிய மரியாதையைப் பெற்று தந்தது. ‘காதலுக்கு மரியாதை’, ‘பிரியமானவளே’, ‘பூவே உனக்காக’ போன்ற காதல் திரைப்படங்களில் விஜய் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்காது என மற்ற அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும்கூட ஒத்துக்கொள்வர்.

கையில் பூவோடு காதல் பேசிய விஜய்யை தான் இன்றைய டைரக்டர்கள் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும் தந்து பாடாய்படுத்துகிறார்கள்.

ghilli
ghilli

காதலில் இருந்த விஜய் படங்கள், ‘கில்லி’ வெற்றிக்குப்பின்பு கமர்சியல் பாதைக்குத் தாவின. சினிமாவில் விஜய்யின் திரைப் பயணத்தை ‘கில்லி’க்கு முன்பு ‘கில்லி’க்கு பின்பு என பிரிக்கலாம். 2004ல் வெளியான ‘கில்லி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த மாதம் ரீ ரிலீஸ் செய்தபோதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:
GOAT பட கதை இதுதானா? லீக்கான தகவலால் ரசிகர்கள் குஷி!
HBD Thalapathy Vijay

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ‘சுறா’, ‘குருவி’, ‘வேட்டைக்காரன்’ போன்ற விஜய் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. 'சுறா சிக்கவில்லை’, ‘குருவி பறந்து போச்சு’, ‘வேட்டைக்காரனுக்கு என்ன வேலை’ என மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

Thalapathy Vijay
Thalapathy Vijay

இந்தக் கிண்டலுக்குப் பதில் சொல்லும்விதமாக 2013 தீபாவளி நாளில் ‘துப்பாக்கி’யாக வெடித்தார் விஜய். ‘துப்பாக்கி’ வெற்றிக்குப் பிறகு இந்தப் பத்தாண்டுகளில் வெற்றி, தோல்வி என மாறி, மாறி பயணிக்கிறார் விஜய்.

ரசிகர்களை அடிக்கடி நேரில் சந்திக்கும் விஜய், மக்களுக்கான பல நலத்திட்டங்கள், பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்குப் பரிசு தொகை வழங்குதல் போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்துவருகிறார்.

"அம்பேத்கர், அண்ணா, பெரியாரை படியுங்கள்" என்று மாணவர்கள் முன்னிலையில் கடந்தாண்டு பேசியவர் ஒரு ஆண்டிற்குள் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். சமீபத்தில் நடந்தேறிய நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது கட்சியை தேர்தல் களத்தில் இறக்கவில்லை. வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று சொல்லிவிட்டார். "எம்.ஜி.ஆர். போலத்தான் விஜய்" என்கிறார் நம்ம 'அரசியல் விஞ்ஞானி' செல்லூர் ராஜு.

ஒரு புகழ் பெற்ற இயக்குனரின் மகனாக இருந்தும் பல போராட்டங்களைச் சந்தித்தவர் விஜய். குறிப்பாக உருவக் கேலிக்கு ஆளானவர். வளர்ந்து வந்த ஆரம்பக்காலத்தில் ஒரு பத்திரிகை இவரின் உருவத்தை வைத்து கேலி செய்ய, அந்தப் பத்திரிகையுடன் சிறிது மோதல் போக்கைக் கடைபிடித்தார். இப்படியாக தனிப்பட்ட முறையிலும் திரையுலக வாழ்விலும், பலவிதமான ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, அவற்றை தன்னடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு பயணித்ததால்தானோ என்னவோ, தளபதி விஜய் நன்கு மெருகேறி, அமைதியும் ஆளுமையும் கொண்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்று, ‘மாஸ்’ ஹீரோவாக வலம் வருகிறார்!

தமிழ்த்திரை உலகின் மாஸ் ஹீரோ, லட்சோப லட்சம் ரசிகர்களின் 'தளபதி' இனி அரசியலிலும் வெற்றி பெற இந்தப் பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

logo
Kalki Online
kalkionline.com