
ஊர் சிறப்பு:
தாமிரபரணி நதி அமைந்துள்ள மிகவும் தொன்மையான நகரம் கல்லிடைக்குறிச்சி. கல்+இடை+குறிச்சி என்பதால் கல்லிடைக்குறிச்சி ஆனது.
மணிமுத்தாறு:
அம்பை இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட ஊராக இருந்ததால் இந்த பெயர் என வரலாறு கூறுகிறது. கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் இரண்டும் இரட்டை நகரமாகும். இரண்டையும் தாமிரபரணி நதி பாலம் பிரிக்கிறது. இங்கு எண்ணற்ற கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன. இங்கு இருந்து தென்காசி திருநெல்வேலி 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான குமார கோயில், 850 ஆண்டுகள் பழமையான ஆதிவராக பெருமாள் கோயில், குலசேகரமுடையார் கோயில், அறம்வளர்த்த நாயகி கோயில், அகஸ்தியர் கோயில், பகளிகூத்தர் மானேந்தியப்பர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் என பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.
அப்பளம்:
கல்லிடைக்குறிச்சி அப்பளம் என்றால் உலக புகழ் பெற்றது. இங்கு சீதாராமன் அப்பளம், ஆஞ்சநேயா அப்பளம், வராக அப்பளம், M.S. அப்பளம் பிரபலம். இந்த அப்பளங்கள் இங்கு இருந்து வெளி ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது.
மடங்கள்:
திருவாவடுதுறை ஆதீனம் மடம், வெளாகுறிச்சி ஆதீன மடம், தருமபுரம் மடம், சிருங்கேரி மடம் போன்றவை புகழ் பெற்றவை. இந்த ஊர் வடக்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, திம்மராஜ சமுத்திரம் என மூன்று பிரிவாக பரந்து விரிந்து உள்ளது. முற்காலத்தில் தெற்கு கல்லிடைக்குறிச்சி முழுவதும் பனை மரங்களாக இருந்தது. இங்கு பெரும்பாலான கோவில்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
தேவாலயம்:
புனித அந்தோனியார் ஆலயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மேல்முக நாடார் தெருவில் ஒரு பெரிய சர்ச் உள்ளது.
மசூதிகள்:
இங்குள்ள ரஹ்மத் ஜும்மா மசூதி 100 ஆண்டுகள் பழமையானது. இவை தவிர சின்ன பள்ளிவாசல், பெரிய பள்ளி வாசல் என மசூதிகள் உள்ளன.
தொழில்:
விவசாயம் பிரதானம். நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. தாமிரபரணி நதியும் கன்னடியன் கால் பாசானம் நடைபெறுகிறது. பீடி சுற்றல், மண் பாண்டம் செய்தல், பாய் முடைதல் முதலியன.
கல்வி நிலையங்கள்:
இங்கு திலகர் மேல் நிலை பள்ளியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். 1911-ல் 240 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடுநிலை பள்ளியாக தொடங்கி இன்று நூறு ஆண்டுகளை கடந்து ஆல விருஷம் போல் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தினமணி ஆசிரியர் A.N. சிவராமன் இங்கு ஆசிரியராக பணி ஆற்றினார். இவை தவிர அரசு மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
திருவிழாக்கள்:
தாமிரபரணி நதி கரையில் தாமிரபரநீஸ்வரர் கோயில், சாய்பாபா கோயில் உள்ளது. கோட்டை தெரு கிருஷ்ணன் கோவில் மிகவும் பழமையான கோவில். அகஸ்தியர் கோவில் பங்குனி திருவிழா, ஆதிவாராக பெருமாள் கோயில் தேர் திருவிழா, வாழ உகந்த அம்மன் கோவில் விழா, காந்தாரி அம்மன் கோவில் விழாக்கள், பிரபலம். பொதிகை மலையில் சிவன் பார்வதி திருகல்யாண காட்சியை அகஸ்தியர் இங்கு இருந்து கண்டு களித்ததாக வரலாறு உண்டு. அதனால் இந்த இடம் கல்யாணபுரி என்று முன்னர் அழைக்கப்பட்டது.
முதியோர் காப்பகம்:
இங்கு கோமதி சங்கர தீட்சிதர் நினைவாக வக்கீல் விநாயகம் என்பவர் ஒரு முதியோர் இல்லமும், டாக்டர் பத்மநாபன் விஷாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு முதியோர் நிலையமும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
அணை கட்டுகள்:
இங்கு இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் பாபநாசம், மணிமுத்தாறு அணைக்கட்டுகள் உள்ளன.
தாமிரபரணி ஆற்று பாலம்:
இங்குள்ள பழைய பாலம் 1840-ம் ஆண்டு சுமார் 17000 செலவில் கட்டப்பட்டது. அது குறுகிய பலமாகவும் பழுதடைந்த காரணத்தால் அதன் அருகே புதிய பாலம் 1964-ம் ஆண்டு 5 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ளது. இன்றும் பழைய பாலம் புதுப்பிக்கப்பட்டு நடைபாதை பூங்காவாக மாற்றப்பட்டு உள்ளது.
முடிவுரை:
இங்கு பல்வேறு சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இயற்கையான சூழ்நிலையில் இருப்பதால் இங்கு அடிக்கடி சினிமா ஷூட்டிங், சீரியல் ஷூட்டிங் நடைபெறுகிறது. பழமையான தெருக்கள் அகிராஹாரங்கள் இன்றும் தொன்மை மாறாமல் பறை சாற்றி கொண்டுள்ளன.