
நம்மில் பலர் நகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து சாகும் வரை நகரத்திலேயே உயிர் விடுகிறோம். நமக்கு கிராம வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரியாது.
என் நண்பர் குணாளன் அதற்கு விதி விலக்கு. ஆம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி தான் அவரது சொந்த ஊர். அவர் பட்ட படிப்பிற்கு கோவை வந்தார். வேளாண்மை மற்றும் பொறியியல் தான் அவரது 5 வருட படிப்பு.
படிப்பு முடிந்ததும் படித்த கல்லுரியிலேயே பேராசிரியர் பணி கிடைத்தது. தனது அக்கா மகள் சாந்தியை மணம் முடித்து கோவையில் செட்டில் ஆனார். அவருக்கு கதிர் என்று ஒரு மகன். அவர் குரல் வித்தியசமாக இருக்கும். நகர வாழ்க்கை அவருக்கு பிடித்து இருந்தாலும்… அவருக்கு கிட்டமபட்டியை மறக்க முடிய வில்லை.
வயலுக்கு அருகே பம்ப் செட். நான் ஒரு முறை சென்று இருந்த போது பம்ப் செட்டில் குளிக்க பேராசை. தண்ணீர் பொத்து பொத்து என்று உடலில் விழுவதை பெரிதும் விரும்பினேன். குளியலை விட்டு வர மனமே இருக்காது.
டிபன் இட்லி கொடுத்தார். இதில் விசேஷம் என்ன என்றால் தொட்டுக்க வேர்கடலை சட்னி. வேர்க்கடலை சட்னி எனக்கு புதிது. எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
குணாளன் மற்றும் சாந்தி என்னை நன்றாக பார்த்து கொண்டார்கள். வயலுக்கு அந்த பக்கம் ஒரே பச்சை பச்சை என ஒரு மலை. கிராமத்தில் எந்த சப்தமும் கேட்க முடிய வில்லை.
எனக்கு அந்த அமைதியான வாழ்க்கை மிகவும் பிடித்து இருந்தது. அவர் சம்மரில் கிட்டம்பட்டி சென்று விடுவார். வருட வருடம் 5 நாட்கள் குணாளன் வீட்டிற்கு நானும் போய் விடுவேன். பக்கத்தில் உள்ள கிராமங்களை அவர் காட்டுவார். பக்கம் உள்ள நகரம் குருவரெட்டியூர். அது ஒரு பெரிய கிராமம் தான்.
அவர் என்னை விட பெரியவர். அதனால் சீக்கிரம் ஓய்வு பெற்று கிட்டம்பட்டி சென்று விட்டார். அவரால் கோவையையும் மறக்க முடியாத நிலை. எனவே கோவையில் ஒரு வீடு வாங்கி விட்டார்.
மகன் மேற்படிப்பிற்காக அயல்நாடு சென்று விட்டார். நான் தொலைபேசி அலுவலகத்தில் இந்த வருடம் ஓய்வு பெற்று விட்டேன். நான் கல்யாணம் செய்து கொள்ள வில்லை.
நான் யோசித்தேன். திரும்ப திரும்ப யோசித்தேன். சரி என்று முடிவு எடுத்தேன். ஆம். என் ஓய்வு காலத்தில் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். சரி. கிட்டம்பட்டி போய் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த வாரம் நான் கோவை சென்று குணாளனிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவர், "நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்தீர்களா..?" எனக் கேட்டார்.
"ஆம். நீங்கள் தான் நான் குடியிருக்க ஒரு வாடகை வீடு பார்த்து தர வேண்டும்" என்று சொன்னேன். "சாப்பாட்டிற்கு?" எனக் கேட்டார். "இல்லை நானே சமைத்து சாப்பிட்டு விடுவேன்" என்று சொன்னேன். குணாளன் பேசினார்.
“ சரி… வாடகை வீடு வேண்டாம். எங்கள் வீட்டில் அவுட் அவுஸ் இருக்கிறது… ! “
“இல்லை தோஸ்த் அது சரிப்பட்டு வராது… ! “
“ஒரு பிரச்னையும் இல்லை. எங்களுக்கும் பேச்சு துணையாக இருக்கும்..! “ என்றார். சாந்தியும் வரவேற்றார்.
எனக்கு நாளையோடு பணி நிறைவு பெறுகிறது. அடுத்த திங்கட்கிழமை இங்கே வந்து விடுவேன். குணாளன் வழி அனுப்பி வைத்தார்.
திங்கட்கிழமை… கிட்டம்பட்டி…
அமைதியான வாழ்க்கை…
புறப்பட்டு விட்டேன்!