
புறநகர்ப் பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் அபார்ட்மென்டில் குடிபோயிருக்கும் என் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
என் ஸ்கூட்டரை ஒரு தயக்கத்தோடேயே அந்தக் கட்டிடத்துக்குள் ஓட்டிச் செல்ல முனைந்தேன். நான் எதிர்பார்த்தபடியே பிரதான வாயிலருகே நின்றிருந்த ஒரு காவலர் ஓடோடி வந்தார். ‘‘வெளியார் வண்டிகள்லாம் உள்ளாற விடக்கூடாது, வெளியவே நிறுத்திடுங்க,’’ என்று சற்று கடுமையாகவே கேட்டுக் கொண்டார். இது பொதுவாக ஒவ்வொரு அபார்ட்மென்ட்டிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுதான்.
என் ஸ்கூட்டரை காம்பவுண்டு சுவரை ஒட்டி நிறுத்திவிட்டு வாசலருகே வந்தேன். ‘‘யாரைப் பார்க்கணும்? எங்கேருந்து வரீங்க?’’ என்று என்னை மறித்தபடி நின்ற காவலர் கேட்டார். அவருக்கு சுமார் அறுபது வயதாவது இருக்கும். முகத்தில் அனுபவம் போட்டிருந்த கோடுகள் அதிகம். ஆனால் அவர் உடல்வாகு எளிமையானது. ஒரு காவலருக்குரிய பலம், கம்பீரம், ஏன், குரலிலும்கூட கரகரப்பு இல்லாதவராக இருந்தார். ஒப்புக்கு ஒரு காவலாளி என்று அவரைப் போட்டிருந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இதுபோன்ற காவலர்களுக்குப் பல பொறுப்புகள்.
அறிமுகமில்லாதவர்களை பல கேள்விகளால் விசாரித்து உள்ளே அனுப்புவது முதல், அனாவசியமாக எந்த விற்பனை பிரதிநிதியும் உள்ளே நுழைந்துவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு குடியிருப்பிலும் வசிப்போர் எல்லோரையும் இவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, அந்தக் குடியிருப்புவாசிகளைப் பார்க்க வருவோரையும் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அடிக்கடி இப்படி வரும் விருந்தினரைத் தவிர எப்போதாவது, என்னைப்போல வருகிறவர்களையும் கண்களால் பார்த்து மனதிலும், மூளையிலும் பதிவு செய்து கொள்கிறார்கள். அடுத்து வரும்போது தங்கள் ஞாபசக்தி என்ற கணினியைத் தட்டிவிட்டு ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். சிலசமயம், சில புதுமுகங்களை, அவர்களுடைய தகுதி அறியாமல் இவர்கள் தடுத்து நிறுத்தும்போது, அதனால் வெகுண்டெழும் குடியிருப்புவாசிகளின் கோபத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.
இவர்கள் அமர்ந்துகொள்ள அல்லது தங்குவதற்கு சிறு அறையை சில அடுக்ககங்களில் காண முடிகிறது. ஆனால் பெரும்பாலான அடுக்ககங்களில் இந்த வசதி இல்லை. இவர்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள மொட்டை மாடியில் உள்ள கழிப்பறையைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த சமயத்தில் யாராவது கட்டிடத்தினுள் நுழைந்து அதனால் ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால் அதற்கும் இவர்களே பொறுப்பாக வேண்டியிருக்கிறது.
பெரிய நிறுவனங்கள், அலுவலங்களில் பணியாற்றும் இதுபோன்ற காவலர்கள் ஒப்பந்த அடிப்படையில், பாதுகாவலர் பணிவாய்ப்பு அமைப்புகளிலிருந்து வருகிறவர்கள். இவர்களுக்கென்று தனியே சீருடையும், அடையாளக் குறிப்பும் இருக்கும். ஆனால் தனியார் குடியிருப்பு அடுக்ககங்களில் யார் சிபாரிசிலாவது வருபவர் காவலராகப் பொறுப்பு ஏற்கிறார். இவர் ஏதேனும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவராகவோ, வேறு வேலை எதுவும் கிடைக்காதவராகவோ இருப்பார்.
இது தவிர, அடுக்ககத்தில் குடியிருப்போர் தமக்கு வேண்டப்பட்டவர்களை இந்தப் பணிக்கு சிபாரிசு செய்வதும் உண்டு. இந்த உரிமையில், சிபாரிசு செய்தவர், காரைத் துடைத்துத் தரச் சொல்வது போன்ற தம் சொந்த வேலைகளையும் அந்தக் காவலாளி மீது சுமத்துவதுண்டு. இதைப் பார்த்து மற்ற குடியிருப்புவாசிகளும் அதே சேவையைப் பெறவேண்டுமானால், அவர்கள் அந்தக் காவலருக்கு உபரியாக பணம் கொடுக்க வேண்டும்!
இத்தகைய காவலர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் சொற்பமானதுதான். அதிலும், ஏதேனும் பாதுகாவலர் பணியமர்த்தும் நிறுவனம் அனுப்பி வைக்கும் காவலர்கள் என்றால், அவர்களுக்கு நிறுவனம்தான் சம்பளத்தை நிர்ணயிக்கும். அவ்வாறு அவர்களை அனுப்புவதால், தமக்கென்று குறிப்பிட்ட கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டுட்டுதான் காவலருக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.
வேறு வேலை எதுவும் கிடைக்காததால் இந்தப் பணியை மேற்கொள்பவர்களைவிட, ஓய்வு நேரத்தில் ஏதேனும் வேலை செய்யலாம் என்று வருபவர்கள், தமக்கு அளிக்கப்படும் சம்பளத்துக்காக அதிகம் வாதிடுவதில்லை. கொடுத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
பேருந்து, ரயில், விமானத்தை செலுத்தும் ஓட்டுநர்களின் பொறுப்பில் தங்களையும், தங்கள் உடைமைகளையும் ஒப்படைத்து நிம்மதியாகப் பயணம் செய்யும் பயணிகள்போல, அடுக்ககங்களில் வசிக்கும் மக்கள், காவலர்களின் பொறுப்பில் நிம்மதியாக உறங்குகிறார்கள். வீட்டின் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லாமல் வெளியே போய் தம் வேலைகளைப் பார்க்கிறார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை.