
நாளை பொங்கல். போகி கொண்டாடி தெருவெங்கும் சாம்பல். பொங்கலுக்கு ஊரைப்பார்க்க சென்றவர்கள் வந்தவுடன் குப்பையை எடுத்து பையை நிரப்ப மாநகராட்சி ஊழியர்கள் காத்திருந்தனர். பஸ்களில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லும் பல்லவன். என் கிளினிக் ஈ அடித்துக்கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் மூடிவிட்டு கிளம்பலாம். மனைவி தூரத்து சொந்தம் கல்யாணத்திற்கு சென்று விட, வீட்டில் நான் மட்டுமே. காலை மெதுவாக எழலாம்.
என்னைப்பற்றி ......
புற நகர் பகுதியில் பத்துக்கு முப்பது அறையை இரண்டாய் தடுத்து ஒரு சிறு கிளினிக். இருபது வருடமாய் என்னுடன் இருக்கும் அசிஸ்டன்ட் சாமி.
சோம்பல் முறித்துக்கொண்டு கொட்டாவி விட வெளியே ஒரே ஆரவாரம்.
'காலை பிடிங்க, தள்ளுப்பா, டாக்டர் இல்லையா?' பதிலுக்கு காத்திருக்காமல் கூச்சலிட, கதவை தள்ளி ஓடி வந்தான் சாமி.
'சார்,ஒரு ஆளை தூக்கிட்டு வராங்க சார், ஆக்சிடென்ட் சார்'
'டேய், நான் என்னடா செய்ய முடியும், கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய கேஸ் அது.'
அதற்குள் உள்ளே பலர் நுழைந்து 'டாக்டர் வண்டிலே அடிச்சிட்டு போய்ட்டான் சார், கொஞ்சம் பாருங்க சார்.'
என் கிளினிக் வாசலில் பூ விற்கும் ஆயா 'அண்ணன் கை வைச்சலே போறும் எழுந்திடுவார்' என்று எனக்கு ஐஸ் வைக்க, பல்ஸ் பார்த்தேன் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. வெளியே ரத்த காயம் இல்லை. கண்களில் டார்ச் அடிக்க பாப்பா விரியத் தொடங்க, 'இவர் இன்னும் பத்து நிமிடத்திற்குள் இறப்பார். என்னால் ஒண்ணும் செய்ய முடியாது ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்க' என்றேன்.
அவ்வளவுதான். காக்காய் கூட்டம் போல அனைவரும் கலைய, காத்திருந்தால் போல அவர் மூச்சு அடங்கியது.
நான், சாமி கூட அவர் இல்லை அது!
'சார், என்ன சார் செய்யப்போறோம்?'
'இருடா, என்னை புடுங்காதே'
கைகள் லேசாக நடுங்க வெறும் சளி, ஜுரம், பூச்சி பாத்திருந்த எனக்கு இது புது அனுபவம்.
'வாசு சார் வீட்டில் இருப்பார், போன் பண்ணட்டுமா?' என் பதிலுக்கு காத்திருக்காமல் சாமி போன் செய்ய, 'இருடா, நானே பேசறேன். வாசு உடனே வா'
ஐந்தே நிமிடத்தில் வந்தான் இடுக்கண் களைய. வாசு எனக்கு மிக நெருக்கமான கல்லூரி தோழன். அசந்தர்ப்பமாக பேசுவதில் வல்லவன்!
'என்னடா,என்ன ஆச்சு?"
சொன்னேன்.
'சாமி, நீ எங்கேடா இருந்தே?'
'சார், இன்டெர்வல்' என இழுக்க,
'ஏன்டா, டாக்டர் என்ன சினிமாவா காட்டறார், இன்டெர்வல் விட? Bathroom போனேன்னு சொல்லு, உங்க டாக்டர் இதல்லாம் சொல்லித் தரல்லையா?'
நான் முறைப்பதை பார்த்து 'சாமி, என்ன அநாவசிய பேச்சு? சார் ரொம்ப டென்ஷனா இருக்கார்.'
பெட்டில் இருப்பவரை பார்த்தான். 'நெத்தியில் ஒரு தழும்பு, கழுத்திலே ஒரு சிகப்பு கலர் கயிற்றில் ஒரு ருத்திராக்ஷம். ஒரு க்ளவ் குடு!'
சட்டை பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து பிரித்தான்.
ஒரு பத்து ரூபாய் நோட்டு, ஒரு ஐந்து ரூபாய் நோட்டு, ரெண்டு ஒரு ரூபாய் சில்லறை, ஒரு முருகர் படம்!
'டேய், ஒரு ஐடி கூட இல்லை, எப்படி யாருன்னு கண்டு பிடிக்கறது? சாமி, இந்த ஆளை நம்ப ஏரியாவிலே எப்பவாவது பார்த்து இருக்கே?'
'இல்லை சார். ஆளு புதுசா இருக்கார்'
'ரவி, இவரு உன்னோட பேஷண்டா? ஏதாவது தகராறு உண்டா? கொடுக்கல் வாங்கல் உண்டா?'
நான் முறைக்க, 'இல்லடா,போலீஸ் இப்படிதான் கேட்பாங்க' என்றான், ஏதோ அன்றாடம் போலீஸ் கூட பழகினவன் போல!
போலீசுக்கு போன் செய்தேன்.
'கண்ட்ரோல் ரூம்'
பெயர்,விலாசம்,விவரம் சொன்னேன்.
'டாக்டர், நீங்க ஏன் ஆக்சிடென்ட் எல்லாம் ஹாண்டில் பண்ணறீங்க? பக்கத்தில் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி இருக்கே?'
'சார்,நான் உள்ளே இருந்தேன். என்ன ஆச்சுன்னு பார்க்கறதுக்கு முன்னே அடி பட்டவரை உள்ளே கொண்டு வந்துட்டாங்க. நான் பல்ஸ் பார்த்து இறக்கப்போறார் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கன்னு சொன்ன உடனே எல்லோரும் ஓடிட்டாங்க. ஐந்தே நிமிடத்தில் அவர் இறந்துட்டார்."
'இது ஆக்சிடெண்ட்ன்னு எப்படி நம்புறது? விட்னஸ் ஒன்னு கூட இல்ல?'
அசால்ட்டா கூட இருக்கலாம். வந்தவங்களோட பெயர், விலாசத்தோடு ஸ்டேட்மென்ட் வாங்கினீங்களா?'
'அசால்ட் செய்தவர்கள் பெயர் விலாசத்தோடு ஸ்டேட்மென்ட் தருவார்களா?' என்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.
'என் கிளினிக் வாசலில் பூ விற்கும் ஆயா கூட அடிபட்டவரோடு வந்தாள். அவங்க கிட்டே ஸ்டேட்மென்ட் வாங்கலாம்' என்றேன்.
'சார், ஆயா பொண்ணு ஊட்டுக்கு போய்ட்டு ரெண்டு வாரம் கழிச்சு தான் வருமாம். என்கிட்டே சொல்லிச்சு' என்றான் சாமி.
'என்னமோ டாக்டர், நீங்க செஞ்சது சரி கிடையாது.'
டொக்கென்று போன் வைக்கப்பட்டது.
'என்ன ரவி, என்ன சொல்லறாங்க?'
'வாசு, denying first aid is a crime, மினிஸ்டர் போன வாரம் பேட்டியில் சொன்னார். டாக்டர்கள் முதல் உதவி செய்தால் அவங்களை harass செய்ய மாட்டோம்ன்னு சொன்னார். போலீஸ் இப்படி சொல்லறாங்க.'
'சரி, விடு நான் மணவாளனிடம் பேசறேன்.'
'வாசு, மணி பதினொண்ணு, இப்போ டிஸ்டர்ப் செய்யலாமா?'
'ரவி, எமர்ஜென்சி, அவர் புரிஞ்சுப்பார்.'
மணவாளன் எங்கள் மருத்துவ சங்கத்தின் தலைவர். அரசாங்க மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்ற அவருக்கு அரசாங்க விதிகள் அத்துப்படி.
'சார், ஹாப்பி பொங்கல் சார், வாசு பேசறேன், நம்ப மெம்பர் ரவி, ஆமாம் சார்
எஸ், ரவிதான் சார், அவர் கிளினிக்கில் ஒரு பிரச்சனை...'
'உன்னை பேச சொல்லறார்.'
விவரத்தை கேட்டார். ஒரு நிமிடம் மௌனம்.
'ரவி, ஐடி இல்லைனா என்ன? நீங்க marks of identification வெச்சு ஒரு certificate கொடுங்க. மீண்டும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என் பொண்ணுக்கு தலை பொங்கல். வீடு முழுக்க விருந்தாளிகள்.' மீண்டும் டொக்!
'என்னடா,பேஸ் அடிச்சவன் போல இருக்க? என்ன சொன்னார்?'
'Certificate கொடுக்க சொன்னார், marks of identification base பண்ணி!'
'யாருகிட்ட கொடுக்கணும்? இது கிட்டேயா?' கட்டிலில் கிடந்தவரை காட்டினான்.
'வாசு, நீ இதை எரிக்கவோ புதைக்கவோ செய்யுன்னு சொன்னா, நான் என்ன செய்வேன்? நான் ஒண்ணு சொல்லட்டுமா? உன்னோட கார் டிக்கியிலே இதை ஏத்திட்டு பக்கத்துக்கு பாலத்திலிருந்து தண்ணியில் போட்டுட்டு எல்லாரும் வீட்டுக்கு போயிடலாம்!'
'Have you lost it Ravi? குடுகுடுன்னு போலீசுக்கு போன் பண்ணி உன்னோட பெயர் விலாசம் கொடுத்தே. மணவாளனிடம் சொல்லியாச்சு. பத்து பேர் உன் கிளினிக்கிற்கு இந்த ஆளை தூக்கிட்டு வந்ததை பார்த்தாங்க. இது தண்ணிக்குள்ளேயே இருக்குமா? மேலே வந்ததும் நீ, நான், நம்ம கூட சாமி எல்லாரும் உள்ளே போவோம். ஏற்கெனவே அசால்ட் அப்படின்னு போலீஸ் சொல்லறாங்க. பண்ணினதே நீதான் அப்படின்னு கேஸ் ஓவர்'.
அப்போது டெலிபோன் மணி அடித்தது.
சாமி எடுத்தான்.
'ஹாய் காது! எப்படி இருக்கே? நான் நல்லா இருக்கேன். அப்பா இருக்கார். ஒரு பேஷண்ட் இருக்கார். இல்ல இல்ல, அவர் டிஸ்டர்ப் ஆக மாட்டார். நான் அப்பாகிட்டே கொடுக்கறேன்.'
காதம்பரி {காது} எங்கள் ஒரே குழந்தை. B.Techஇல் முதல் மாணவியாக வந்து Stanfordல் உதவித்தொகையோடு PhD சேர்ந்துள்ளாள்.
'அப்பா, அம்மா போன் எடுக்க மாட்டேங்கறா. அதனால் உனக்கு பண்ணறேன். பேஷண்ட் இருக்காராம். நான் அப்புறம் கூப்பிடட்டா?'
'ஒண்ணும் பிராப்ளம் இல்லை. அம்மா மாயவரம் போயிருக்கா. ஏதாவது விசேஷமா?சும்மா கூப்பிட்டயா?'
'அப்பா. மாதுரி ஆண்ட்டி இங்க வந்திருக்காங்க. அவங்களோட டின்னருக்கு நாளைக்கு போகப்போகிறேன்."
குரலில் அவ்வளவு உற்சாகம்!
மாதுரியும் அவர் கணவன் விஷ்ணுவரதனும் I.A.S அதிகாரிகள். அவர்கள் மகன் சித்தார்த்தும் காதம்பரியும் LKGயில் தொடங்கி B.Tech வரை ஒரே வகுப்பு. நெருங்கிய நண்பர்கள். சித்தார்த் Princeton'ல்.
'சொல்லவே இல்லையே காது? பத்து நாள் முன்னாடி கூட அம்மாவோடு பேசினாங்களே மாதுரி?'
'ஆமாம்பா, எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கணும் அதனால் யாருக்கும் சொல்லலேன்னுட்டு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கறாங்க. அதை வாங்க வந்திருக்காங்க. Princeton போயிட்டு சித்துவை பார்த்துவிட்டு இந்தியா அடுத்த வாரம் போறாங்க.'
'விஷ்ணு சார் வரல்லையா?'
'அவர் இப்போ Chief Secretary இல்லையா, அவருக்கு லீவு கிடைக்கலே."
மூச்சு விடாமல் பேசும் மாதுரியும் ஒரு நாளைக்கு முப்பது வார்த்தை பேசும் விஷ்ணுவும் எண்ணெயும் தண்ணீரும் மாதிரி தோன்றினாலும் விஷ்ணுவின் subtle humorயை மாதுரி ரசிக்க மாதுரியின் bubblinessசை விஷ்ணு ரசிப்பார்.
'சரிப்பா, நான் நாளைக்கு பேசறேன். நீ பேஷண்டை பாரு.'
'டேய் ரவி, நீ லூசாடா? வெண்ணையை கையில் வெச்சிருக்கே, நெய்க்கு அலையறே? போன் போடுடா விஷ்ணுவுக்கு!'
முதல் மணியிலே எடுத்தார். 'விஷ்ணுவரதன்.'
விஷயத்தை சொன்னேன். 'நான் பாத்துக்கறேன்'என்றார் ர.சுருக்கமாய்!
அரை மணியில் ஒரு உதவி கமிஷனர் பேசினார். மின்னல் வேகத்தில் ஒரு ஜீப், ஆம்புலன்ஸ், போலீஸ் போட்டோகிராபர் வந்தனர்.
'ஏன் டாக்டர், நாங்க வரோம்னு சொன்னோம், அதுக்குள்ளே ரொம்ப மேல் இடத்துக்கு போயிட்டீங்க' என்றார் வந்த ஒரு பொய்யர்.
'உங்க கைப்பட ஒரு ஸ்டேட்மென்ட் கொடுங்க, கோர்ட்டுக்கு அப்புறம் வந்து சாட்சி சொல்ல வேண்டி இருக்கும்.'
எல்லோரும் சென்றவுடன் கிளினிக்கை மூடி வீடு திரும்பும் பொழுது, மப்ளர் மாமாக்கள் பால் வண்டிக்கு தவம் இருந்தனர். கோயிலில் பக்தி மணத்தோடு பொங்கல் மணமும் கலந்து வந்தது.
பாண்டை கூட கழட்டாமல் படுக்கையில் விழுந்து உறங்கிப்போனேன்.