வழக்குரைஞர்களில் சிலர் சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர் (Notary Public) எனும் கூடுதல் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர். சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞருக்கான தகுதிகள் எவை? அவர்களின் பணிகள் என்ன? என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.
சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்
சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர் சட்டம் 1952 (The Notaries Act, 1952) மற்றும் சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர் விதிகள் 1956 (The Notaries Rules, 1956) ஆகியவைகளைப் பின்பற்றி இந்திய நடுவண் அரசு அல்லது மாநில அரசு, தேவையான சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்களை நியமிக்கின்றது.
இந்திய நடுவண் அரசின் மூலம் இந்தியா முழுமைக்கும் அல்லது இந்தியாவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு என்றும், மாநில அரசால் குறிப்பிட்ட மாநிலம் முழுமைக்கும் அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் என்றும் சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தகுதிகள்
சான்றுறுதியளிக்கும் வழக்கறிஞர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், ஏழு வருடங்களுக்குக் குறையாமல் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும். நீதித்துறையில் உறுப்பினர்களாகப் பணியாற்றியவர் களும், இந்திய நடுவண் அரசு அல்லது மாநில அரசின் சட்டத்தின் தேவையுடைய பணிகளில் பணிபுரிந்தவர் களும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம்
சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், இந்திய நடுவண் அரசுக்கான விண்ணப்பமெனில், https://notary.legalaffairs.gov.in/ எனும் இணைய முகவரியிலான இந்திய அரசின் நீதித்துறையின் சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்களுக்கான இணையதளத்திலும், மாநில அரசுக்கான விண்ணப்ப மெனில், https://www.tnnotary.tn.gov.in/#/home எனும் இணைய முகவரியிலான மாநில நீதித்துறையின் சான்றுதியளிக்கும் வழக்குரைஞர்களுக்கான இணையதளத்திலும் விண்ணப்பிக்க முடியும்.
நியமனம்
இந்திய நடுவண் அரசு அல்லது மாநில அரசு இணைய வழியில் பதிவு செய்து பெறப்பட்ட விண்ணப்பங் களிலிருந்து தகுதியுடையவர்களைக் கண்டறிந்து, தேவைக்கேற்பத் தேவையான இடங்களுக்கு அல்லது மாநிலம் முழுமைக்கும் என்று சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்களை நியமனம் செய்யும். இதேப் போன்று, இந்தியா முழுமைக்குமான சான்றுறுதியளிக்கும் வழக்கறிஞர்களை இந்திய நடுவண் அரசு நியமனம் செய்கிறது. இந்திய நடுவண் அரசும், மாநில அரசும் தங்களால் நியமிக்கப்பட்ட சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்கள் குறித்தத் தகவல்களை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அரசுப் பதிவிதழில் வெளியிடுகின்றன.
செயல்பாடுகள்
சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட்ட பகுதிகளில், சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர்களின் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அதாவது,
1. எந்த ஒரு கருவியின் செயல்பாட்டினைச் சரிபார்த்தல், அங்கீகரித்தல், சான்றிதழ் அல்லது சான்றொப்பம் இடுதல். (இங்கு சரிபார்த்தல் என்பது, உண்மை மற்றும் ஆதாரங்களைச் சரிபார்த்தல் என்றும், அங்கீகரித்தல் என்பது, கருவியில் கையொப்பமிட்ட நபரின் அடையாளத்தையும், செயல்படுத்தும் தன்மையையும் உறுதிப்படுத்துதல் என்றும், சான்றிதழ் என்பது ஒரு முறையான அறிக்கையின் மூலம் செயல்படுத்தப்பட்ட கருவி சில தகவல்களைக் கொண்டுள்ளது அல்லது அதன் உள்ளடக்கங்களுடன் தொடர்புடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறது என்றும், சான்றொப்பம் என்பது சரியானது, உண்மையானது என்பதை உறுதிப்படுத்துவது என்றும் கொள்ளலாம்).
2. எந்தவொரு நபருக்கும் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்து வைக்க முடியும்.
3. எந்தவொரு ஆவணத்தையும் ஒரு மொழியில் இருந்து, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இருந்தால் அதைச் சரிபார்க்க முடியும்.
4. நீதிமன்றம் அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பால் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் விசாரணைகளில், ஆணையாளராக நியமிக்கப்பட்டு சாட்சியங்களைப் பதிவு செய்ய முடியும்.
5. இரு வேறு தரப்பினரிடையே தேவைப்படும் நிலையில் நடுவராக, சமரசராகச் செயல்பட முடியும்.
6. மதிப்புமிக்க சொத்துகளின் ஆவணத்திற்கு (உதாரணமாக, பத்திரங்கள், அடமானங்கள்) முக்கியமாக ஒப்புகை தேவைப்படுகிறது. அந்த ஒப்புகைகளை மேற்கொள்ளலாம்.
7. கல்விச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், மருத்துவப் பதிவுகள், விற்பனை ரசீதுகள் போன்றவைகளுக்கான நகல் சான்றிதழ்களில், அசல் ஆவணத்தின் நகல் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் பணியைச் செய்யலாம்.
என்று சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞருக்கென்று வரையறுக்கப்பட்ட மேலும் பல பணிகளைச் செய்திட முடியும்.
சான்றுறுதியளிக்கும் முத்திரை
சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞரின் செயல்பாடுகள் அனைத்திலும் அவரது கையொப்பம் மற்றும் சான்றுறுதியளிக்கும் முத்திரை இடம் பெற வேண்டும். அதில் பதிவு எண், நாள் இடம் பெற வேண்டும்.
சான்றுறுதியளிக்கும் முத்திரையானது, சான்றுறுதியளிக்கும் வழக்குரைஞர் விதிகள் 1956 மூலம் பரிந்துரைக்கப்பட்ட 5 செ.மீ விட்டம் கொண்ட வட்ட வடிவமைப்பிலான முத்திரையாக இருக்க வேண்டும். அதில் அவருக்கு அதிகாரமளித்த அரசின் பெயர், அதிகார வரம்பு, பதிவெண் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். முத்திரையில்லாத ஆவணங்கள் நிராகரிக்கப்படலாம்.