
ஜெர்மெனியில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நம்ம ஊர் மாதிரி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட முடியாது. முதலில் ஃபேமிலி டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி அதற்குப் பின் தான் அவரை பார்க்க முடியும். இந்த அப்பாயின்ட்மென்ட் டாக்டர்-லிப் ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். தினமும் நள்ளிரவு 12 மணிக்கு இந்த 'ஆப்'பை அப்டேட் செய்வார்கள். யாராவது அப்பாயின்ட்மென்ட் கேன்சல் செய்திருந்தால் நள்ளிரவு 12 மணிக்கு அந்த ஸ்லாட் நமக்கு கிடைக்கும்.
'நன்றாக காய்ச்சல் அடிக்கிறது அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்குமா?' என்றால் அதுவும் கிடைக்காது. அப்படியானால் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்களா? இந்த மாதிரியான அவசரகால சிகிச்சைக்காக தனியாக மருத்துவமனைகள் உண்டு. அவை பெரும்பாலும் மாலை ஏழு மணி முதல் தான் இயங்கும். அங்கு நம் மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டை காட்டி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி அங்கே செல்ல முடியவில்லை, பயங்கரமாக வயிறு வலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் 112 என்ற நம்பருக்கு போன் செய்தால் உடனே ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வரும். அதில் மருத்துவர்களும் இருப்பார்கள். உடனடி சிகிச்சை தந்தும் உங்களுடைய பிரச்சனை சரியாகவில்லை என்றால் உடனே ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கூட்டி செல்வார்கள்.
இந்த ஸ்ட்ரெச்சரை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் தான் ஜெர்மனியில் உள்ள அனைத்து பில்டிங்குகளிலும் லிஃப்ட்டுகள் கட்டமைக்கப்பட்டிருக்கும். எல்லா கட்டிடங்களிலும் ஆறடி நீள ஸ்ட்ரெச்சருக்கு ஏற்ற வகையில் நீளமான லிஃப்ட் இருக்கும். கூடுதலாக தேவை என்றால் பெரிய, சிறிய லிஃப்டுகள் இருந்தாலும் இந்த ஆறடி நீள லிஃப்ட் கண்டிப்பாக ஒவ்வொரு கட்டிடங்களிலும் இருந்தே ஆக வேண்டும்.
'இன்று தலை வலிக்கிறது, அலுவலகம் செல்ல முடியாது' என்றால் ஃபேமிலி டாக்டரிடம் 'சிக் நோட்' வாங்கி அலுவலகத்துக்கு ஈமெயிலில் அனுப்ப வேண்டும்.
இது மாதிரியான 'சிக் லீவ்' எடுத்தால் அது நம்முடைய விடுமுறை நாளை பாதிக்காது. உடல்நலம் இல்லாமல் 'சிக் லீவ்'-ம் ஆறு வாரம் எடுத்துக் கொள்ளலாம். நாம் தலைவலி, காய்ச்சல் என்று எடுக்கும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் ஒரு வார விடுமுறை எல்லாம் இந்த ஆறு வாரத்தில் இருந்து தான் கழியும். நம்முடைய 30 நாட்கள் விடுமுறை அப்படியே தான் இருக்கும்.
ஆறு வாரம் தாண்டியும் உடல்நிலை சரியில்லாமல் போனால் உதாரணமாக பெரிய ஆபரேஷன் செய்திருக்கிறார்கள் அல்லது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஆறு வாரம் வரை நம்முடைய கம்பெனியிலிருந்து சம்பளம் வந்துவிடும், அதற்கு மேல் சிக்-லீவ் எடுக்கும் போது நம்முடைய மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து நமக்கு சம்பளம் தருவார்கள்.
அதுபோல மருத்துவரிடம் சென்று நோய்க்கு மருந்து விவரங்களை கேட்டறிந்தபின் மருந்து சீட்டுகளை டாக்டர் நம் கைகளில் தர மாட்டார். அந்த மருந்து சீட்டு நேரடியாக மெடிக்கல் ஸ்டோர் 'டேட்டா-பேஸ்'க்கு போய்விடும். நாம் ஜெர்மனியில் இருக்கும் எந்த மெடிக்கல் ஸ்டோரியிலும் நம்முடைய மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டை காட்டினால் போதும். அவர்கள் சிஸ்டத்தில் பார்த்து நம் மருந்து சீட்டில் எழுதி இருக்கும் மருந்தை நமக்குத் தருவார்கள்.
ஆக மொத்தத்தில் டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்குவது தான் சிரமமே தவிர உயர்ரக மருத்துவ சிகிச்சை வசதிகள் ஜெர்மெனியில் எல்லோருக்கும் உண்டு.