
தாய் நாட்டிலேயே வேலை பலருக்கு கிடைப்பதில்லை. அவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை நாடி செல்லும் பணிநாடுநர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அயல் நாட்டில் பணிபுரிவதை பெருமையாகவும், சிறிதுகாலம் அங்கு பணிசெய்து சம்பாதித்து விட்டு தாய் நாடு திரும்பி வசதியாக வாழமுடியும் எனவும் பலர் நம்புகின்றனர். சிலருக்கு அயல்நாட்டில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் நண்பர்கள், உறவினர்கள் மூலமும் இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவ்வாறு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்பவர்கள் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். செல்ல இருக்கும் நாட்டின் சட்ட-திட்டங்கள், வாழ்க்கை முறைகள், பணியின் தன்மை போன்றவற்றின் அறிவு முழுவதுமாய் அவர்களுக்கு தெரிந்திருப்பது நல்லது. ஏராளமான பணச்செலவு செய்து அவர்கள் செய்யும் பணிக்கான பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு படியையும் கவனமுடன் எடுத்து வைத்து பயணத்தை தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும்.
முதல் படியாக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்படாத முகவர்களின் மூலம் கிடைக்கும் பணிகள் நம்பகத்தன்மையற்றவையாக இருக்கலாம். எனவே இவற்றில் கவனமும், எச்சரிக்கையும் தேவை. எனவே, அரசின் பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டுபவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு, வேலைக்கு சேர்த்துவிடும் நிறுவனம் அரசிடம் பதிவு பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்வது பிற்காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களை தவிர்க்கும்.
அதேபோல் சுற்றுலா விசாவில் சென்று மாட்டிக் கொள்பவர்களும் உண்டு. அரசின் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா நிறுவனங்கள் மூலமே அயல்நாட்டு சுற்றுலாக்களுக்கு செல்ல வேண்டும். அவர்களின் தொழில் அனுபவம் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவ்வாறு செல்லும்போது அயல்நாட்டில் பயணிக்கும் எல்லா இடங்களுக்கும் நம்முடைய பாஸ்போர்ட், மற்றும் விசா அனுமதியை உடன் கொண்டு செல்ல வேண்டும். அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் கேட்கும்போது அவற்றை அவர்களுக்கு காட்ட வேண்டியிருக்கும். பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு அந்நாட்டு சட்டப்படி வழங்கப்படும் தண்டனை உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தெரிவது இல்லை. முறையான ஆவணங்கள் இன்றி வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அந்த நாட்டை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு தண்டனையோ அடிமைத்தனமான வேலை ஒன்றோ கண்டிப்பாக செல்பவர்ககளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், பணி புரிய இருக்கும் நிறுவனம் பற்றிய தகவல்களையும் முழுமையாக முன்னதாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா, பணியில் சேர்வதற்கான தேவையான ஆணை போன்ற அனைத்து ஆவணங்களையும் முறையாகப் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்.
வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெற்று இருக்கும். பணியாற்ற செல்பவர்கள் அந்நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு போதும் பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் பெறும் ஆவணங்களைக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம். nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல், nrtchennai@tn.gov.in, https://nrtamils.tn.gov.in. ஆகிய வலைதளத்தில் ஆய்வு செய்யலாம்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை பணிக்குச் செல்லும் வெளிநாடுகளில் பெற முடியும். எனவே பணிக்காக வெளிநாடு செல்லும் பணிநாடுநர்கள் இவற்றை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.