சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி? வாழ்நாள் முழுவதும் சிகிச்சை செய்து கொள்ளணுமா?

Diabetes...
Diabetes...Image credit - pixabay

சென்ற ஆண்டு எடுத்த புள்ளி விவர கணக்குப்படி, இந்தியாவில் பத்து கோடிக்கு மேற்பட்ட மக்கள், அதாவது மொத்த ஜனத்தொகையில் 12 சதவீதத்துக்கும் மேல் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்நோய் வருவதற்கான அறிகுறிகளுடன் (pre-diabetes) 15 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

இந்திய மக்களில் பாதிப்பேருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதற்கான ஒரு விழிப்புணர்வும், சர்க்கரை நோயால் வரும் இருதய பாதிப்பு, ஸ்ட்ரோக், கண்களில் விழித்திரை (retina) மற்றும் நரம்புகள் பாதிப்பு, neuropathy (nerve damage) மற்றும் சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை பற்றிய எச்சரிக்கை உணர்வும் இல்லை என்று சொல்லலாம்.

ஏன் இந்தியாவில் இத்தகைய பாதிப்பு, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மருத்துவர் வி.அலமேலு அவர்களிடம் கேட்டபோது, தெளிவான விளக்கங்களைத் தந்தார்.

டாக்டர் வி. அலமேலு M.S.M.Ch;FRCS அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

டாக்டர் வி.அலமேலு
டாக்டர் வி.அலமேலு

சர்க்கரை நோய் என்றால் என்ன, ஏன் வருகிறது டாக்டர்?

சர்க்கரை நோய் என்பது நமது உடலில் சர்க்கரை அளவு ரத்தத்தில் சரியான அளவைவிட அதிகரிப்பதால் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, சக்தியாக மாற்றி, நாம் இயங்கும் திறன் பெறுவதற்கு கணையத்தில் (pancreas) சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன.

இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ, இன்சுலின் சுரப்பி, அல்லது கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ, சர்க்கரை சத்தை சக்தியாக ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்பட்டு டயாபடீஸ் என்ற நீரிழிவு நோய் வருகிறது.

எந்த வயதில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது டாக்டர்?

சிறு வயதில் வருவது "ஜுவனைல் டயாபடிக்' .இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இதுவும் முதல் வகை. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். இத்தகைய சர்க்கரை நோயாளிகள் நம் நாட்டில், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர்.

இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது.

இதுதான் நம் நாட்டில் பெரும்பான்மையாகக் காணப்படுவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதைத் தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது.

chart...
chart...

இதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வோமா டாக்டர்?

இயற்கையாகவே இந்தியர்க்கு ஜெனெடிக் காரணங்களால் இந்நோய் வர வாய்ப்பு அதிகம். இதன் தலைமையிடம் இந்தியா (Capital of Diabetes mellitus) எனலாம். இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு, மற்றும் அதில் வரும் பாதிப்பு.

பாரம்பரியத்தில், நெருங்கிய உறவினர்க்கு இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் வரும் சாத்தியம் அதிகம்.

முக்கியமாக இது வாழ்க்கை முறையால் வரும் நோயும் கூட.

அதிகமான மன அழுத்தம் நம் மனநிலையை மட்டுமல்லாமல் கார்டிசால் என்ற ஹார்மோனை உடலில் தூண்டி டயாபடீஸ் வருவதற்கும் காரணமாக அமைகிறது.

முறையின்றி நேரம் தவறி சாப்பிடுதல்,

அதிக மாவுச் சத்து, இனிப்பு, அதிக எண்ணைய் இவற்றால் செய்யப்பட்ட துரித உணவுகளை உட்கொள்ளுதல். (இந்தியர்களிடையே நிறைய இனிப்புக்கள் இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் இல்லை.)

சுற்றுச்சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு.

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்.

அதிகப்படியான நேரம் நாற்காலியிலேயே அமர்ந்திருந்து வேலை பார்ப்பது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி அல்லது மொபைல் பார்ப்பது போன்றவை நாளடைவில் நம் மெடபாலிஸசத்தைப் பாதித்து உடல் பருமனுக்குக் காரணமாகிறது. டைப்-2 டயாபடீஸ் வருவதற்கு முக்கியத் தூண்டுகோல் உடல் பருமனாகும்

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீயப் பழக்கங்கள்.

இதன் அறிகுறிகள் என்ன டாக்டர்?

அதிக சோர்வு, களைப்பு, உடல் எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி அதிகமாகுதல், அதிக தாகம் எடுத்தல், கண் எரிச்சல், பார்வை பாதிக்கப்படுதல், நெஞ்சு வலி, சரும அரிப்பு, கால்கள் மரத்துப் போதல், பாதத்தில் சிறுபுண் தோன்றி குழிப்புண்ணாக மாறுதல், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே, 40 வயதைத் தாண்டிவிட்டாலே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை.

உடற்பயிற்சி
உடற்பயிற்சிImage credit - pixabay

நீரிழிவு நோய் இருப்பின், அது, உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் என்று சொல்கிறார்களே?

ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப்படுத்துவதால் 'ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், கண் விழித்திரை உட்பட, பாதம் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், மாரடைப்பும், சிறுநீரக ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படக் காரணமாகின்றன.

தவிர, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல வேதனை களையும் ஏற்படுத்துகிறது.  

சர்க்கரை நோயை எப்படி சமாளிக்க வேண்டும்?வாழ்னாள் முழுவதும் மாத்திரையோ இன்சுலினோ எடுக்க வேண்டுமா?

40 வயது தாண்டியவுடன், அனைவரும் சர்க்கரையின் அளவை சாப்பிடும் முன்னும் பின்னும் பரிசோதனை செய்யவேண்டும். கண், பற்கள், மார்பு, இருதயம், சருமம், கை கால் இயக்கம், பாத நோய் இவற்றையெல்லாம் அந்தந்த உறுப்புகளின் பாதிப்பிற்கேற்ப பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம்.

ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக சிறிது நாள் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று விட்டுவிடக்கூடாது.

மற்றொரு சர்க்கரை நோயாளி போடும் மாத்திரைகளை போடக்கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பொறுத்து எந்த மாத்திரை, இன்சுலின் எவ்வளவு போடவேண்டும் என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைப்படியே சிகிச்சை எடுக்க வேண்டும்.

முக்கியமாக, மாத்திரைதான் சாப்பிடுகிறோமே என்ற தைரியத்தில் இனிப்புக்களை சிலர் உண்கிறார்கள். அது தவறு. (என்றேனும் முக்கிய நாளில், இனிப்பை சாப்பிட நேர்ந்தால், அப்பொழுது, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால், அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல).

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியோடு இருக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும்?
Diabetes...

லோ ஷுகர் என்றால் என்ன டாக்டர்?

மாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பைவிடக் குறைந்துவிடும்.

இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். அப்போது நெஞ்சு படபடப்பு, பசி, வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.

பல மருத்துவ மனைகளில், save the foot என்ற வாசகம் காணப்படுகிறதே...

ஆம்சர்க்கரை நோயாளிகள் கால்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். புரையோடி விட்டால் காலையே எடுக்க வேண்டி வரும். தானாகவே வைத்தியம் செய்து கொள்ளக்கூடாது. அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சி, மன வலிமை, நடைப்பயிற்சி, தியானம், உற்சாகமான சிந்தனைகள் இவற்றால், சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, திடமாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com