நாம் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!

political party
elections and voting
Published on
Kalki Strip
Kalki Strip

ரசியலை வேண்டாத ஒன்றென்று பலர் ஒதுக்க நினைத்தாலும், அது அட்டை போல அனைவரையும் ஒட்டிக்கொள்கிறது. பூமிப்பந்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை அதனாலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அரசியலைப்(political party) பற்றிச் சிந்தித்து எழுதி வைத்த அரிஸ்டாட்டில், “மனிதன் ஒரு சமூக விலங்கு,” என்றார். “ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே மற்றவர்களுடன் கூட்டாண்மைக்கான உந்துதலைக் கொண்டிருக்கிறான்!” என்பது அவர் வார்த்தைகள். அந்தக் கூட்டாண்மை உந்துதல்தான், இன்று கொள்கைகள் வேறுவேறாகக் கொண்டிருக்கும் கட்சிகளையும் கூட்டணியில் இணைக்கின்றன போலும்!

பிரிட்டிஷ் எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன், 1775-லேயே ஆழமான ஒரு மேற்கோளைச் சொன்னார்: “தேசப்பற்று என்பது ஓர் அயோக்கியனின் இறுதிப் புகலிடம்” (Patriotism is the last refuge of a scoundrel). அதற்குக் காரணம் என்னவெனில், அவர் காலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகள் பலரும் தாங்கள் செய்த தவறுகளை மறைக்கத் தேசப்பற்றைக் கேடயமாகப் பயன்படுத்தினார்களாம். இன்று வரை அதே நிலையே தொடர்கிறது என்பதே உண்மை.

நமது அரசியல்வாதிகள் அனைவரும் உண்மையில் தேசப்பற்றையே அடிப்படையாகக் கொண்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்தியிருப்பார்களேயானால், இன்று நம் நாடு மக்கள் தொகையில் 'நம்பர் ஒன்' ஆனதைப் போல, உலகின் 'நம்பர் ஒன்' நாடாக உயரும் வாய்ப்பையும் பெற்றிருக்கும். முதலிடம் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் முதல் 10 அல்லது 15 இடங்களுக்குள்ளாவது வந்திருக்க வேண்டும். ஆனால், நாம் இருக்கும் இடம் அவற்றுக்குள் இல்லை.

ஏன் இல்லை? என்பதை ஆராய்ந்தால் ஏகப்பட்ட காரணங்கள் சிறகடிக்கின்றன:

  • ஒரு காலத்தில் சேவைத்துறையாகச் செயல்பட்ட அரசியல், மெல்ல உருமாறி இன்று வியாபாரத் துறையாகிவிட்டது.

  • சேவை, பொறுமை, தியாகம், ஏழைகளின் பால் இரக்கம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த தலைவர்களின் எண்ணிக்கை மெல்லக் குறைந்து கொண்டே வருகிறது.

  • சரி, வியாபாரத்தையாவது முறையாகச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. வியாபாரம் என்று வந்துவிட்டால் லாபம்தான் குறியாக இருக்கும் என்பது அறிந்ததே. ஆனால், அந்த லாபம் நியாயமானதாக இருக்க வேண்டாமா?

  • தேர்தல் நேரம் வந்துவிட்டால் 'கட்சிக் கடை' திறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிடுகிறது. பெரிதாகக் கல்லா கட்ட நினைப்பவர்கள் ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி காய் நகர்த்துகிறார்கள். தங்கள் சமூக மக்களை அடிமைகளாக நினைத்துச் செயல்படுகிறார்கள். இறுதியில் தலைவர்கள் பயனடைகிறார்கள்; அவர்களைப் பின்பற்றுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்

இதையும் படியுங்கள்:
2018 கேரளா வெள்ளம்: மரணத்தின் பிடியில் ஒரு நீச்சல்! இன்றுவரை கேட்பாரற்று கிடக்கும் பைக்குகள்!
political party

நமது கடமை என்ன?

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் சாதாரண மக்களாகிய நமக்குச் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் நாமும் தப்பித்து, நாட்டையும் உயர்த்தலாம்.

  1. நல்லவர்களை, நாட்டுக்காக உழைப்பவர்களைத் தேர்ந்தெடுங்கள்.

  2. வாக்கு தவறாத, கொள்கைப்பிடிப்புள்ள மனிதர்களை அடையாளம் காணுங்கள்.

  3. பணத்திற்காகப் பச்சோந்தியாய் கட்சி மாறுபவர்களைப் புறக்கணியுங்கள்.

  4. ஜாதி, மதம், கட்சி என்ற எல்லைகளைக் கடந்து, உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 'தகுதியானவர் யார்?' என்று முடிவு செய்யுங்கள்.

இதுவே ஜனநாயகத்தை வளர்த்து, மக்கள் நிம்மதியாக வாழ நாம் செய்யும் பணியாகும். எனவே, விழிப்புணர்வுடன் இருந்து நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com