

ஒரு நிமிஷம் இந்த வார்த்தையை அடிக்கடி எல்லா சீரியல்களிலும் கேட்டிருப்போம்.
ஒருத்தர் பேசிவிட்டு கிளம்பும் போது மறக்காமல் அடுத்த நடிகர் பேசும் டயலாக் இதுதான். இந்த வார்த்தையை கேட்டு கேட்டு எரிச்சல் தான் அதிகம் வந்தது.
அதே நேரம் 'ஒரு நிமிஷம்' பல நேரம் நல்ல முடிவுகளுக்கு காரணமாகி விடுகிறது.
சிறந்த முடிவுகள் ஒரு நிமிடத்தில் எடுக்க முடியுமா...? 'பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்' - கவியரசர் நமக்காகத்தான் பாடியுள்ளார்.
நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் பாதையில் முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும்போது... அந்த நிமிடம் வரும் போது சட்டென்று முடிவு எடுத்து விட வேண்டும். அங்கே ஒத்திவைப்பு கூடாது.
உடலை நன்றாக வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி செய்யச் சொல்வார்கள். மூச்சுப் பயிற்சி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
முகம் அழகாக இருக்கிறதா என்று அவ்வப்போது கண்ணாடியை பார்த்து தெரிந்து கொள்கிறோம். முகம் மட்டுமல்ல அகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி.
"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்"
நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டி விடும் என்பதை இந்த குறளின் மூலம் விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்று ஒரு காதல் பாட்டை பட்டுக்கோட்டையார் 'தங்கப்பதுமை' படத்தில் பாடியிருப்பதை 80 கிட்ஸ் வரை கேட்டிருக்கலாம். காதலன் முகத்தில் காதலியின் முகம் தெரிவதை அழகாக சொல்லியிருப்பார். தங்கள் முகத்தை பார்க்க கண்ணாடி தேவையில்லை; ஒருவர் முகமே மற்றவரை பிரதிபலிப்பதாக சொல்லிவிட்டார்.
காதலில் மட்டுமல்ல எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
நம் முகத்தை ஒரு தடவை நம் எதிரே உருவகப்படுத்தி பாருங்கள்...அது உங்களால் செய்ய முடிந்தால் நீங்கள் ஒருமுகப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
தினமும் ஒரு நிமிடம் இந்த பயிற்சி செய்து பாருங்கள். ஒரு மிகப்பெரிய மாற்றம் உங்களுக்குள் வரும்.
தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தானே அதியமான்... எப்படி? .ஈகை குணம் அதிகம் உள்ள மன்னர்கள் நல்ல முடிவை எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை.
பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும் வந்தியத்தேவன் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அந்த ஒரு நிமிடத்தில் தான். அது அவனது வாழ்வில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியதை படித்திருக்கிறோம்.
ஒரு நிமிஷம் 60 விநாடிகள்தான். சொடுக்கு போடும் நேரத்தில் அந்த நிமிஷம் கடந்து சென்று விடும். எந்த ஒரு நிமிஷம் நம் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
"just a tiny little minute, but eternity is in it" - சிறிய குட்டி நிமிடம் தான் ஆனால் அதில் நித்தியம் பொதிந்துள்ளது.
Dr.Benjamin E Mays அவர்கள் ஒரு நிமிடம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் ஒரு வரி அது.
'ஒரு நிமிஷம்' என்று யாரவது நம்மிடம் சொன்னால் அந்த நிமிடத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவோம்.