யோகா: இந்தியர்களின் பெருமை இந்தியர்களின் உடைமை!

யோகா...
யோகா...

யோகா என்பது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனத்துடன் வாழும் ஒரு கலை. தனிமனித ஆற்றல் முழுமையாக மலர உதவுவது யோகா.

உடல், மனம், ஆன்மா என்னும் மூன்று பகுதிகள்தான் மனிதன். இந்த மூன்றையும் இணைத்து சமநிலையில் வைக்க உதவுவது யோகா.

யோகா என்ற சொல்லுக்கு, ஒன்றிணைத்தல் (to unite) என்று பொருளாம். நம் உடல், மனம், ஆன்மா இவற்றை ஒன்றிணைப்பதால் இந்தப் பெயர்.

யோகா என்பது வெறுமே உடலை வளைத்து ஆசனங்கள் செய்வதோ, மூச்சுப் பயிற்சியோ மட்டுமல்ல.உண்மையின் தன்மையை உணரவைத்து, நம்முள்ளிருக்கும் சக்திகளை வெளிக்கொணர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தில் நாமும் ஒரு பகுதியே, எல்லாமே ஒன்றுதான் என்று உணரவைப்பது. மனதின் வலிமையை அதிகரிக்கச் செய்வது.

ஒழுக்கம், உடல் அசைவு தோரணை (physical postures), மூச்சுப் பயிற்சி, புலனடக்கம், கூர்ந்த கவனம், தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவை யோகாவுக்குள் அடங்கியவை. அறிவியல் பார்வையுடன் சேர்ந்த ஓர் ஆன்மிக அனுபவம் மற்றும் கலை யோகா.

ல நூற்றாண்டுகளாகவே இந்திய நாட்டில், வீடுகளிலும், ஆசிரமங்களிலும், யோகக் கலை பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

3300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி  நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகள் மற்றும் பாறைப் படிமங்களில், யோகா சாதனா செய்யும் உருவங்களும் சிற்பங்களும் உள்ளன. கி.மு.1500க்கு முற்பட்ட ரிக் வேதத்திலும், கி.மு.1200க்கு முந்தைய அதர்வண வேதத்திலும் யோகா, மற்றும் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி பற்றி குறிப்புக்கள் உள்ளன.

கி.பி. 10ம் நூற்றாண்டில், முதுகுத்தண்டின் அடியில் இருக்கும் ‘குண்டலினி’ சக்தியைத் தட்டி எழுப்பும் ‘தந்திரக் கலையாக’ யோகா போற்றப்பட்டது.

12ம் நூற்றாண்டில், ஹட யோகா பிரபலமானது. மனதை நெறிப்படுத்தும் மனோதத்துவப் பயிற்சியை உள்ளடக்கியது இந்த யோகா.

யோகாவின் நன்மைகள் பலராலும் அறியப்பட்ட பின்னர், யோகா, இந்திய நாட்டின் ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாகவே ஒருங்கிணைக்கப்பட்டது.

யோகா...
யோகா...

யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் இந்தியாவில், யோகாவைக் கற்றுத் தரவும், அதில் ஆராய்ச்சிகள் செய்யவும் பல பல்கலைக் கழகங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

பக்தி, ஞானம், கர்மா என்று யோகாவில் பல வடிவங்கள் உண்டு.

மூச்சு, புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, உடல் தோரணை, தியானம் உட்பட பலவற்றையும் உள்ளடக்கிய “ராஜ யோகாவை”, யோகாவின் தந்தை என்றழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் நெறிப்படுத்தி, உலகுக்கு வழங்கினார்.

ஆதி சங்காராச்சார்யா, ராமானுஜாச்சார்யா, மத்வாச்சார்யா போன்ற பெரும் மகான்கள், ராஜயோகம் மற்றும் ஞான யோகாவின் வளர்ச்சிக்காக, யோகாவைப் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சென்றனர்.

இந்தப் பயிற்சிகள் மூலம்  ஒருவர் முக்தி  அல்லது விடுதலையை அடைய முடியும் என்றும், மனதைத் தெளிவுபடுத்த தியானம் அவசியம் என்றும் எடுத்துரைத்தனர்.

இன்றைய நவீன யோகா, ராஜ மற்றும் ஹட யோகா  இரண்டின் கலவையாக, மூச்சுப் பயிற்சி, தியானம், உடல் அசைவுகள் இவற்றைக்கொண்டது.

யோகாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இந்தியாவில் தரப்படுகிறது?

யோகா உடல் நலம் பேணும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.

ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, நுரையீரலின் திறனை மேம்படுத்துகிறது.

இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். எலும்புகளின்  பலத்தை அதிகரிக்கும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கும். ஜீரணமண்டலம் சரியாக இயங்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதும் யோகாவின் முக்கியப் பயன்களில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம்  (metabolism) சீராகும்.

மன நலம் என்னும்போது, மனதில் உண்டாகும் தேவையற்ற கவலைகளிலிருந்து விடுபட வைக்கும். உற்சாகமான மனநிலையை உருவாக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கோபம், சோம்பல், சோர்வு, பயம் இவற்றிலிருந்து விடுபட்டு வாழவும் யோகா உதவுகிறது என்பது யோகக் கலை ஆசான்களும், பயிற்சி பெற்றவர்களும் சொல்லும் உண்மை. தொடர்ந்து யோகா செய்துவரும் பலரும் தங்கள் உடல் சக்தி அதிகரிப்பதாக உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல, இன்று உலகம் முழுவதுமே யோகாவின் பயன்களை அறிந்து பல கோடி  மக்கள் யோகா செய்து வருகிறார்கள் என்பது நம் நாட்டுக்கே பெருமை.

யோகா மாஸ்டராக 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயிரக்கணக்கான பேருக்கு யோக பயிற்சி அளித்துவரும் மாஸ்டர் ராஜாராம் அவர்கள் சொல்வதைக் கேட்போமா?

“நான் கற்றுத்தருவது ‘ஆத்ம ஞான யோகா’ என்ற யோகா பயிற்சி. நேரிலும், அன் லைனிலும் கற்றுத்தருகிறேன். இதை நிறுவியவர் டி.எஸ். நாராயண குருஜி. ஆத்ம ஞான யோகா என்பது எளிமையான பயிற்சி. மன அமைதி, ஆரோக்கியம், நல்லுறவு போன்றவற்றைத் தரக்கூடியது. குறைந்தபட்ச வயது 10 முதல் 15க்குள் இருக்க வேண்டும்.

மாஸ்டர் ராஜாராம்
மாஸ்டர் ராஜாராம்

இந்த அவசர கால உலகில் பலருக்கும் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. குடும்பத்திலும் உறவுகளுக்குள் வரும் பிரச்னைகளுக்கு மன அழுத்தமே காரணமாகிறது.

மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம், தியானம், கண்களுக்கான பயிற்சி, வாழும் கலை நுணுக்கங்கள், இயற்கை உணவு, எளிய உடற்பயிற்சி, முத்திரைகள் மூலம் சில உடல் பிரச்னைகளுக்குத் தீர்வு இவையெல்லாம் ஆத்ம ஞான யோகா மூலம் சாத்தியமாகிறது..

ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சிரைப்பு, அலர்ஜிக் ப்ராங்காய்டிஸ், வீசிங், டஸ்ட் அலர்ஜி இவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக பயிற்சி பெற்றவர்கள் சொல்லும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த யோகா உதவுவதாகவும் பலரின் கூற்று. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம், ஆன்மிகப் பாதையில் கவனம் இவையும் சாத்தியமாகிறது என்கிறார்கள்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com