
வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். குறிப்பாக, வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் செல்கின்றனர்.
அதிலும், வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் படிக்கிறார்கள்.
சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள்.
வளைகுடா நாடுகள், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் இடங்களாக உள்ளன.
உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அதிக இந்தியர்கள் செல்லும் நாடுகளாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.
உலகமயமாக்கல் காரணமாக, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாடுகளில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பரவலாக அனைத்து மக்களுக்கும் கிடைக்கின்றன. வளர்ந்த நாடுகளில் அதிக ஊதியம், சிறந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கல்வி வாய்ப்புகள் இருப்பதால், இந்தியர்களை அந்த நாடுகள் ஈர்க்கின்றன. சில நேரங்களில், இந்தியாவிலுள்ள பொருளாதார சூழ்நிலைகள் காரணமாகவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
சமீபத்தில் வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடர்பான கேள்விகளுக்கு இணையமைச்சர் அளித்த பதில்களில் இதைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020 ஜனவரி முதல் 2025 ஜூன் 30 வரை) 16,06,964 இந்தியத் தொழிலாளர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் செல்லும் நாடுகளில் பாதுகாப்பான பணிபாதுகாப்பு இருப்பதை உறுதி செய்த பிறகே இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1.71 கோடி இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் 18.8 இலட்சம் என வகைப்படுத்தி மத்திய அரசு தரவுகளை பராமரித்து வருகிறது. இருப்பினும் இவர்களின் துறை சார்ந்த நிபுணத்துவம் தனிப்பட்ட முறையில் வகைப்படுத்தும் எந்த முயற்சியும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை 96 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு இணைய வழி விசா இசைவுகளை இந்தியா வழங்கியுள்ளது. மாநிலங்கள் அவையில் இதுத் தொடர்பான கேள்விக்கு பதிலினை அளிக்கும்போது வெளியுறவு இணை அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.
2020ல் 171 நாட்டு பயணிகளுக்கு இ-விசா வழங்கப்பட்டது. தற்போது 181 நாட்டுப்பயணிகளுக்கு இ-விசா வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி வரை விசா வழங்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 96,44,567ஆகும்.
சர்வதேச புனித யாத்திரைகளான ஹஜ், சீக்கிய யாத்திகர்களுக்கு அமைச்சகத்தின் உதவிகள் குறித்து அவையில் ஏற்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபிய அதிகாரிகள் இந்தியாவிற்கான ஹஜ் ஒதுக்கீட்டினை அறிவிப்பதாக கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக 01.75 லட்சம் இந்திய யாத்ரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கர்தார்பூர் குருத்வாராவிற்கு இந்திய சீக்கியர்கள் எளிதாகவும் சுமுகமாகவும் சென்று வர இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2019ல் ஓர் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம் 4 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய சீக்கியர்கள் இதுவரை பாகிஸ்தான் குருத்துவாராவுக்கு சென்று வந்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் காரணமாக இந்தச் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அமைச்சர் கூறியுள்ளார்.