
உலக நாடுகளின் மூத்த அண்ணனான அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டமால், டுமீலென்று, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வர்த்தக நிலைப்பாட்டை எடுத்து, பன்னாட்டு வர்த்தகத்தை நிலை குலையச் செய்து வருகிறார்.
நமது நாட்டின் வர்த்தகத்திற்கு முதலில் 25 விழுக்காடு வரியென்றார். பின்னர் என்ன நினைத்தாரோ! ராதிகாவை இரவு இரண்டு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி நமது சரத்குமார் அரசியல் முடிவு எடுத்தது போல, மேலும் 25 சதவீதம் கூட்டப்படுகிறது என்று அறிவித்து விட்டார். அவருடைய முந்தைய அறிவிப்புகள் எவையும் நீண்ட நாட்கள் நின்றதில்லை!
உண்மையில் உலகப் பொருளாதாரம் வலுவடைய அதிகமாக உழைப்பவர்கள் சீனர்களும், இந்தியர்களுந்தான் என்பது உலகறிந்த உண்மை. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலாக, சற்றேறக்குறைய 35 சதவீத மக்கள் இவ்விரண்டு நாடுகளை மட்டுமே சேர்ந்தவர்கள். (இந்தியா 17.80% + சீனா 17.20%)
இன்றைய நிலையில், உலகின் பெரும்பாலான நாடுகளில் வர்த்தகத்தைத் தனதாக்கி வைத்திருப்பவை சீனத் தயாரிப்புகளே! சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்களில் ஆரம்பித்து வீட்டு உபயோகப் பொருட்கள் வரை எல்லாவற்றின் தயாரிப்புக் கேந்திரம் சீனாவே. சில பொருட்களின் டிசைன்கள் மற்ற நாட்டவை என்றாலும் மேனிபேக்சர் செய்யப்படுவது சீனாவில்தான். உதாரணமாக ஐகியா(IKEA) என்ற பெருநிறுவனத்தின் பொருட்கள் சிலவற்றில் டிசைன் இத்தாலி என்றும் தயாரித்தது சீனா என்றும் இருப்பதை யாம் கண்டுள்ளோம்.
நமது நாடும் பல ஆக்கபூர்வ முயற்சிகளை மேற்கொண்டு, பல துறைகளில் முன்னேறி வருகிறது. இங்கும் பல தயாரிப்புத் தொழிற்சாலைகள் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து விட்டன.
உற்பத்தி ஒரு கண் என்றால் நுகர்வே மற்றொரு கண். இரண்டு கண்களும் ஒன்றாய்ச் செயல்பட்டால் தான் பொருளாதாரம் முன்னேறும். டிமாண்டும் சப்ளையும் சம அளவில் இருக்க வேண்டும். அதிக அளவு டிமாண்டைப் பெருவாரியான மக்களால் மட்டுமே உருவாக்க முடியும். நுணுக்கமும், திறமையும், சலிப்பில்லாமல் உழைக்கும் மனநிலையும் உள்ளவர்களால்தான் உற்பத்தியைப் பெருக்க முடியும். பெருகும் உற்பத்தி அதே வேகத்தில் நுகரப்பட்டால் தான் பொருளாதாரம் வளரும். இந்த நிலையில், அமெரிக்காவின் ஜனத்தொகை, உலக ஜனத்தொகையில் 4.20% மட்டுமே. வளர்ந்த நாடுகளில் முதன்மையான நாடாக அது விளங்குவதாலேயே, மிஸ்டர் ட்ரம்பால் தினம் ஓர் உத்தரவு போடப்படுகிறது. எதுவும் நிரந்தரம் ஆக்கப்படுவதில்லை என்பது சமீபத்திய வரலாறு!
இந்தியாவும் சீனாவும் கைகோர்க்க வேண்டிய நேரமிது. இரு நாட்டுத் தலைவர்களும் இருக்கின்ற இறுக்கமான பொருளாதாரச் சூழலை மனத்தில் கொண்டு, அதற்கேற்றவாறான உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லைப் பிரச்னைகளையும் ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். எந்தெந்தப் பொருட்களின் உற்பத்தியில் யார் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதலில் வரையறுத்துக் கொண்டு, அதனை முழுமையாகப் பின்பற்ற உறுதி மேற்கொண்டு செயல்பட வேண்டும். உற்பத்திப் பொருட்களை எந்தெந்த நாடுகளில் யார் யார் மார்க்கெட் செய்யலாம் என்பதையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பரஸ்பர நன்மைக்காக இருவரும் கூடுமானவரை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறான முடிவுகள் விரைந்து எடுக்கப்பட்டு இரு நாடுகளும் இணையுமானால் வல்லரசுகள் வாய்பிளந்து நிற்கும். உலகப் பொருளாதாரம் ஆசிய நாடுகளின் கைக்குத் திரும்பும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என்ற பிம்பம் உடையும்.
இந்தியா மற்றும் சீன மக்கள் நட்புடன்தான் பழகுகிறார்கள். இந்தியர்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்வதும் அதுபோலவே சீனர்கள் இந்தியாவின் பல மொழிகளையும் கற்றுக் கொள்வதும் வழக்கமாகி வருகிறது. எனவே,மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி, அமைதிக்கும் உலக உயர்வுக்கும் அடிகோல வேண்டும்!
நடக்குமா...?