இந்தியா, சீனா நட்பு கொண்டால்... பிம்பம் உடைக்கலாம்! பெருமை சேர்க்கலாம்!

இந்தியா, சீனா ஆகிய இருபெரும் ஆசிய நாடுகளும் பரஸ்பர நன்றி பாராட்டி, எல்லைப் பிரச்னைகளுக்கு நிரந்தர சுமூகத் தீர்வு கண்டு, நட்புக் கொள்ள வேண்டும்.
india and china
india and chinaimg credit - blog.careerlauncher.com
Published on

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வானதிலிருந்தே நாளொரு அறிவிப்பும், பொழுதொரு பயமுறுத்தலுமாக பூமிப் பந்தையே சூடடையச் செய்து வந்தார். பதவியேற்றதிலிருந்து தான் அறிவித்த அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகிறார்.

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் பலர் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறி விட்டதாகக் கூறி, அவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற ஆணையிட்டார். சட்டத்தை மீறும் எவரும் குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படுவார்கள். மனித வளர்ச்சி என்பது குற்றங்களை மன்னித்து, குற்றம் இழைத்தவர்களையும் மனுதாபிமானத்துடன் நடத்துவதுதான். ஆனால் வளர்ந்த நாடான அமெரிக்கச் சட்ட திட்டங்களோ, வேறு மாதிரியாக உள்ளன. விமானத்தில் ஏற்றப்பட்ட எவரும் எதிர்ப்பைக் காட்டவோ, வன்முறையில் ஈடுபடவோகூட முயற்சிக்கவில்லை. இருப்பினும் கை, கால்களில் விலங்கிடப்பட்டே கொண்டு வரப்பட்டனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதைக் கூட 'அவர்கள் நாட்டுப் பிரச்னை' என்று ஒதுக்கி விடலாம்.

ஆனால் வரி விதிப்பு விஷயத்தில் ‘பிக் பிரதர்’ நடந்து கொள்வதோ, சிறுபிள்ளைத் தனமாக உள்ளது! வளர்ந்த நாடுகளின் நிழலில் தான் சில வளரும் நாடுகள் ஒதுங்கி நிற்கும்! வளரும் நாடுகளின் பொருளாதாரமும், அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களும் இதன் மூலம் பாதுகாக்கப்படும். இது இரண்டு நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் தெரிந்தே நடப்பதுதான். இதன் மூலம் இரு நாட்டினருமே திருப்தி அடைவார்கள். இதுதான் உலக நியதி. டிரம்போ, வளர்ந்த நாட்டின் அதிபதி என்பதையும் மறந்து, ஒரு வணிகரைப் போல் லாப-நஷ்டக் கணக்கு பார்ப்பது ஏன் என்றே தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
அமெரிக்கா விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும் – எலான் மஸ்க்!
india and china

சில தலைவர்கள் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற இதுபோல் ஏதாவது அபத்தங்களை அரங்கேற்றி விட்டு, சப்பைக் கட்டாக இது என் நாட்டு மக்களின் விருப்பம் என்பார்கள். அமெரிக்க அதிபரால் இப்போது அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனெனில் அமெரிக்காவின் அனைத்து, 50 மாகாணத் தலை நகர்களிலும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள்கள் கட்டுகின்றன. எலான் மஸ்கை எதிர்த்தும் ஏகப்பட்டோர் கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருட்களுக்கு மேலும் வரியைக் கூட்ட முடிவு செய்து, அறிவிக்கவும் ஆரம்பித்து விட்டன. இந்நிலையில், உலகப் பொருளாதாரத்தை ஒரு கண்ணோட்டம் விட்டால், என் மனதை ஒரு கருத்து சூழ்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் விற்பனையாவது சீனப் பொருட்கள்தான். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி! ஐரோப்பாவின் எந்த நாடாக இருந்தாலும் சரி! சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களில் ஆரம்பித்து, பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, எல்லாவற்றின் தயாரிப்புமே சீனாவில்தான்!

நான் பல நாடுகளிலும் சீனப் பொருட்களையே கண்டபோது வியந்து போனேன். அப்பொழுது சீனா உலகில் அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகவும் இருந்தது. எனது ஆச்சரியமெல்லாம், நம்மைப் போல அதிக மக்கட்தொகை கொண்ட ஒரு நாட்டால் எப்படி உலகத்திற்கே உற்பத்தி செய்ய முடிகிறது என்பதுதான். நமது நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அதிக மக்கட்தொகையே என்று அயராது சொல்வதெல்லாம் பொய்தானோ? என்ற எண்ணம் மெல்லத் தளிராகி, விருட்சமாக மனதில் பரவியது. இப்பொழுதும் அந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது. நாமோ இப்பொழுது மக்கட்தொகையில் உலகின் நம்பர் 1 நாடு ஆகி விட்டோம். ஆனாலும் பொருட்கள் உற்பத்தியில்?…

இதையும் படியுங்கள்:
சீனா கெத்து, இந்தியா வெத்து... ஏன் தெரியுமா?
india and china

நம் இயற்கை வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ஜன நாயகம் என்ற பெயரால் சோம்பேறித் தனத்தை வளர்த்து விட்டோம். மண் வளத்தை மட்டுமல்ல… மனித வளத்தையும் ஒழுங்காகப் பயன்படுத்தத் தவறி விட்டோம். இப்பொழுதுதான் மெல்ல முன்னேறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வளர்ந்த நாடுகளில், ஆள்வோரின் தவறுகளை உடனுக்குடன் சுட்டி, நிவாரணம் தேடி விடுகிறார்கள். நாமோ, “இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு குறையுமில்லே!” என்ற மனநிலை கொண்டு, துன்பங்களுக்கு விதியைக் குறைகூறிக் கொண்டு, பிறவியைக் குறை சொல்லிக் கொண்டு நாட்களை ஓட்டுகிறோம்.

அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக்கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்திற்கு ஏணிகளாய் இருந்து, நம் சொந்த வாழ்வுக்குச் சூனியம் வைத்துக் கொள்கிறோம்.

சரி! குறைகளையே சுட்டிக் கொண்டிருந்தால் அதனால் விளையப்போவது ஒன்றுமில்லை. நிறைகளும் நம்மிடத்தில் நிறையவே உண்டு.

உலகிலேயே உழைக்கும் வயதில் உள்ள உன்னத இளைஞர்களை அதிகமாக நாம்தான் கொண்டுள்ளோம். இந்திய இளைஞர்கள் இல்லாத நாடே புவியில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நமது திறமையான இளைஞர்களை உலகெங்கும் பரவச் செய்திருக்கிறோம். பொறியியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் நம் நாட்டினரே கோலோச்சி வரச் செய்திருக்கிறோம்.

விடாமுயற்சியுடன் வினையாற்றும் விரும்பத்தக்க பணியாளர்களை உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், உலக வல்லரசாக உருவெடுக்க இவற்றோடு இன்னும் சிலவும் தேவைப்படுகின்றன. அந்த நிலையை இப்பொழுது நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுந்தான் வல்லரசுகளாக இருக்க வேண்டுமா?

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ஏற்றத் தாழ்வு மிக்க பொருளாதாரம் இருப்பது ஏன்? காரணம் என்ன?
india and china

ஐரோப்பிய நாடுகள் சிலதானே உலகின் சிறந்த பத்து நாடுகளாக விளங்குகின்றன. நம்மாலும் இந்த நிலையையெல்லாம் அடைய முடியுந்தானே! அதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது கனிந்து வருகிறது. இதனைப் புத்திசாலித்தனமாக ஆசிய நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முன் வந்தால், இதுவும் சாத்தியமே!

நான் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தொடர்ந்து மாதக் கணக்கில் தங்கும்போது, அங்கு அதிகம் விற்பனையாகும் பொருட்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வருகின்றன என்பதை மௌனமாகக் கணக்கெடுப்பேன். நான் முன்பே குறிப்பிட்டுள்ளதைப்போல, சீனாவுக்குத்தான் முதலிடம். சுவிசில் தஞ்சாவூர் பொன்னி அரிசியையும், நமது ஊறுகாய் வகைகளையும் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கும். அமெரிக்காவின் சில இடங்களில் (வெர்ஜீனியா மற்றும் புளோரிடா மாகாணங்களில்) சாலைகளின் மேன் ஹோல்களின் மூடிகளின் மீது INDIA என்ற சீலைப் பார்க்கையில் மனதில் மகிழ்ச்சி கூத்தாடும்.

சரி! இனி செய்ய வேண்டியது என்ன? இந்தியா, சீனா ஆகிய இருபெரும் ஆசிய நாடுகளும் பரஸ்பர நன்றி பாராட்டி, எல்லைப் பிரச்னைகளுக்கு நிரந்தர சுமூகத் தீர்வு கண்டு, நட்புக் கொள்ள வேண்டும். அவரவர் எந்தந்தத் துறைகளில் கவனம் செலுத்தி உற்பத்தியைப் பெருக்க முடியுமோ அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழலில், விஞ்ஞான முன்னேற்றத்தில் ரொம்பவும் அட்வான்சாகச் சென்று, வியக்க வைக்கும் இடத்தில் சீனா உள்ளது. நாமும் விரைவாக முன்னேறிக் கொண்டுதான் உள்ளோம். உலகப் பொருளாதாரம் உயர்ந்து கொண்டு போக நம் இரண்டு நாட்டின் இளைஞர்களுந்தான் முக்கியக் காரணம் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

அமெரிக்காவின் பெரும்பாலான கம்பனிகள் லாபம் ஈட்ட, வியர்வை சிந்துபவர்கள் நம்மிரண்டு நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர்தான். அதோடு மட்டுமல்ல. உற்பத்தி, தேவையை அடிப்படையாகக் கொண்டது. அதிகமாக நுகரப்பட்டாலே உற்பத்தி உயரும். அந்த நுகர்ச்சியை அதிகம் ஏற்படுத்துவதும் நம் இரண்டு நாட்டின் மக்களே! ஏனெனில் உலக மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலாக (35%) இருப்பது நமது இரு நாட்டினரின் தொகைதான்! (இந்தியா 17.76% & சீனா 17.40%) தேவையும் இருக்கிறது… உற்பத்தியும் இருக்கிறது… நமது நாடுகளுக்குள் ஒற்றுமைதான் மிஸ்ஸிங்.

ஐரோப்பிய நாடுகள் முன்னேற்றம் அடைவதற்கு அவர்களின் ஒற்றுமையே முக்கியக் காரணம். ரஷ்யா, இஸ்ரேல் போன்ற சில நாடுகள் மட்டுமே, பக்கத்து நாடுகளுடன் பகை பாராட்டுகின்றன. மிகப் பெரும்பாலான நாடுகள் நட்புடனே பழகி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
All Weather Portfolio - இது வானிலை அல்ல; பொருளாதாரம்!
india and china

நமக்கோ…ஒரு பக்கம் நட்பு நாடு என்ற பெயருடன் இலங்கை நமது மீனவர்களுக்குத் தொல்லை தருகிறது. பாகிஸ்தானோ தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறது. சீனாவோ நமது எல்லைகளில் நாட்டங் கொண்டு, லடாக் பகுதியை ஆக்கிரமிக்க நினைக்கிறது. இந்த நிலையை மாற்றி, நான்கு நாடுகளும் நட்பு நாடுகளாகி, அவரவர் எந்தெந்தத் துறைகளில் உற்பத்தியைப் பெருக்க முடியுமோ அதில் மட்டுமே கான்சன்ட்ரேட் செய்தால், வளர்ச்சி பெருகும். இதற்கான முன் முயற்சிகளை நான்கு நாட்டுத் தலைவர்களும் இணைந்து எடுப்பார்களேயானால் ஆசியாவை அதிகாரமிக்கக் கண்டமாக மாற்ற முடியும்.

இதற்கு வித்திடுவது போல, சீனப் பிரதமரும் நாம் இணைந்து பணியாற்ற சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளார். டிப்ளமேடிக் யோசனைகள்தான் இப்பொழுது கை கொடுக்கும். முதலில் இந்தியாவும், சீனாவும் இணைய வேண்டும். அப்புறம் இரு நாடுகளும் சேர்ந்து, உலக நாடுகளுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தங்களைப் போட வேண்டும். ட்ரம்பின் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை என்பதை அவர் நடவடிக்கைகளே நிரூபிக்கின்றன. திடீரென 90 நாட்களுக்கு வரி விதிப்பு மாற்றங்களை ஒத்தி வைத்துள்ளார். ஆனால் சீனாவுக்கு மட்டும் உடனடி, உயர்ந்த வரி விதிப்பாம். யானை தன் தலையில் தானே சில சமயங்களில் மண்ணை வாரி இறைத்துக் கொள்ளுமாம்! முடிவு ஒரு சில நாட்களுக்கு உள்ளாகவே பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பித்து விடும்.

இந்த நேரத்தில் நாம் ஒன்றுபடுவதன் மூலம் பிம்பம் உடைக்கலாம்! பெருமை சேர்க்கலாம்! மேலும், தமிழ் நாட்டு வளர்ச்சி 9.69% என்பது நமக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு:சாதனை படைத்த இந்திய பொருளாதாரம்!
india and china

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com