
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதனைதொடர்ந்து ஆகஸ்டு 1-ந்தேதி, 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்,
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். அத்துடன் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு இந்தியா முதல்முறையாக பகிரங்கமாக பதிலடி கொடுத்தது. ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், பல்லேடியம், உரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருவதையும் அம்பலப்படுத்தியது.
24 மணி நேரத்துக்குள், இந்தியா மீதான வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக டிரம்ப் 5-ம்தேதி அறிவித்த நிலையில் நேற்று இந்தியா மீது மேலும் 25 சதவீத வரி விதித்ததுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணமாக, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் என்ற வகையில், கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, ஆகஸ்டு 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
‘இந்தியா மீதான இந்த வரி நியாயமற்றது’ என்றும் பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக, இந்தியா மீது கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதால் இந்தியாவின் ஏற்றுமதி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக ஜவுளி மற்றும் ஆடை, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் மற்றும் காலணிகள், இறால், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் எந்திரங்கள், கெமிக்கல் போன்ற பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில், டிரம்பின் 50 சதவீத வரி அறிவிப்பு, அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஜவுளி தொழில்துறை கூட்டமைப்பு கூறியுள்ளது. இதுபோலவே பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் டிரம்பின் இந்த அறிவிப்பால் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அரசின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை அறிந்து கொள்ள காத்து இருக்கிறார்கள்.