இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்... 17 கோடி வாக்காளர்கள்... 20 லட்சம் இரும்புப் பெட்டிகள்...

நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் உருவாக்கிய 266 பக்க தேர்தல் அறிக்கை இன்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டியாகத் திகழ்கிறது.
Sukumar Sen
Sukumar Senimage credit-Wikipedia
Published on

இந்திய ஜனநாயகப் பாதையை வகுத்தது காந்திஜியும், ஜவஹர்லால் நேருவும் என்றால், அந்தப் பாதையை கட்டமைத்தவர் சுகுமார் சென். நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர். அவரை 'தேர்தல் ஆணையத்தின் தந்தை' என்கிறார்கள்.

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் பிரதமர் நேருவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே விடப்பட்ட சவால். இந்தியர்களுக்கு அவர்களின் வாழும் நாட்டை திறம்பட ஆளும் தகுதி இருக்கிறது என்று ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் நிரூபிக்க வேண்டிய சவால்.

இந்திய சுதந்திரம் என்பது வெறுமனே ஆட்சி மாற்றமாக இருக்கக்கூடாது. அது காலங்காலமாக இந்திய மக்களை அழுத்திக் கொண்டிருந்த சாதி, மதம் தவிர்த்து அவர்களுக்கு அதிகாரமும், சமூக விடுதலையாகவும் இருக்க வேண்டும் என்பதில் காந்திஜியும், நேருவும் உறுதியாக இருந்தனர். ஆகையால் தகுதியான வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அதிரடியான முடிவை எடுத்தனர்.

முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது வாக்களிக்க உரிமை பெற்ற 21 வயதிற்கு மேற்பட்ட 17 கோடி மக்களில் 15 கோடி மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை உருவானது எப்படி தெரியுமா?
Sukumar Sen

அதோடு மொழி, இனம் கலாச்சாரம் மற்றும் பல்வேறு சீதோஷ்ண நிலையில் வாழும் மக்கள் என நாடு முழுவதும் பிரச்னைகள் இருந்தன. அதோடு தேர்தலை நேர்மையாக நடத்திச் செல்ல அதை கண்காணிப்பவர்களுக்கு தேர்தலைப் பற்றிய விவரங்கள் தெரிய வேண்டும். இத்தனை சிக்கல்களையும் திறம்பட சமாளித்து இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டினார் ஒரு மனிதர் .

அவர் தான் மேற்கு வங்காளத்தில், ஜனவரி 2, 1899 அன்று பிறந்த சுகுமார் சென். அவரது தந்தை, அக்ஷய் சென், ஒரு அரசு ஊழியராக இருந்தார். நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர் சுகுமார் சென் ஆவார். அவர் கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் அவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர இங்கிலாந்துக்குச் சென்றார்; அங்கு அவர் கணிதத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் குடிமைப் பணியில் சேர்ந்த அவர், 1947-ல் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராகும் வரை பல மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

அடிப்படையில் ஓர் இந்திய அரசுப் பணி அதிகாரியான (ஐ.சி.எஸ்) சுகுமார் சென் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக மார்ச் 1950-ல், நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 21 முதல் டிசம்பர் 19, 1958 வரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை வகித்தார். அவரது தலைமையில், தேர்தல் ஆணையம் சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு பொதுத் தேர்தல்களை(1951, 1957) வெற்றிகரமாக நிர்வகித்து நடத்தியது.

1951ல் நடந்த முதல் தேர்தலின் போது இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 கோடி இருப்பினும், ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு, பெயரிட்டு, பதிவு செய்யப்பட்டது. கட்சிச் சின்னங்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை எப்படி வடிவமைப்பது? பின்னர், வாக்குச் சாவடிகளுக்கான இடங்களை அடையாளம் கண்டு, நேர்மையான மற்றும் திறமையான வாக்குப்பதிவு அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருந்தது.

224,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 20 லட்சம் எஃகு வாக்குப்பெட்டிகள் பொருத்தப்பட்டன; அவற்றை உருவாக்க 8,200 டன் எஃகு பயன்படுத்தப்பட்டது; தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல்களைத் தட்டச்சு செய்து தொகுப்பதற்காக 16,500 எழுத்தர்கள் ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்; பட்டியல்களை அச்சிடுவதற்கு சுமார் 380,000 ரீம் தாள்கள் பயன்படுத்தப்பட்டன; வாக்களிப்பை மேற்பார்வையிட 56,000 தலைமை அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இவர்களுக்கு மேலும் 280,000 உதவியாளர்கள் உதவினர். வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக 224,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எழுத்தறிவற்ற இந்திய வாக்காளர் தவறு செய்யக்கூடும்; எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னம் குறிக்கப்பட்ட ஒரு வாக்குப்பெட்டி இருந்தது, இதனால் வாக்காளர்கள் தங்கள் வாக்குத்தாளை அதில் எளிதாகப் போட முடிந்தது. ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்க, இந்திய விஞ்ஞானிகள் ஒரு வகையான அழியாத மையை உருவாக்கியிருந்தனர், அது வாக்காளரின் விரலில் பூசப்பட்டால், ஒரு வாரம் வரை அங்கேயே இருக்கும். இந்தத் தேர்தலில் மொத்தம் 389,816 குப்பிகள் மை பயன்படுத்தப்பட்டன. 1951ஆம் ஆண்டு முழுவதும், தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் இந்தப் புதுமையான செயல்முறை குறித்துப் பொதுமக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காகத் திரைப்படம் மற்றும் வானொலி ஊடகங்களைப் பயன்படுத்தியது.

சுகுமார் செனின் தேர்தல் நிபுணத்துவம் அவரை இந்தியாவைத் தாண்டியும் அழைத்துச் சென்றது. சூடான் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் கட்டமைப்பை உருவாக்கியவரும் சுகுமார் சென் தான். இன்றைக்கும் தேர்தல்கள் திறம் பட நடக்க காரணம் அவரின் கடினமான உழைப்பில் உருவான 266 பக்க தேர்தல் அறிக்கை. அது இப்போதும் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலின் கதை தெரியுமா?
Sukumar Sen

தனது பணி ஓய்விற்கு பிறகும் அவர் ஓயவில்லை, மேற்கு வங்க அரசு நிறுவிய பர்த்வான் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்றார். சுகுமார் சென் மதிப்புமிக்க பத்ம பூஷன் குடிமை விருதையும் பெற்றார். 13 மே 1963ல் காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com