டீ ஷாப் என்பது எந்த ஊரிலும் தவிர்க்க முடியாத ஓர் இடம். ஒரு கப் டீக்காக மட்டும் மக்கள் அங்கு கூடுவதில்லை. நட்புடன் பழகவும், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் என்பதே முக்கிய நோக்கம்.
உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் இதம் தரும் இடம் டீ ஷாப்.
மேற்கு வங்காளத்தில் சம்பூர் என்ற ஊரில் ஒரு சிறிய தெருவில் உள்ளது அந்த நூறாண்டுகள் பழமை வாய்ந்த டீ ஷாப். வேறெந்த டீ ஷாப்பிலும் கிடைக்காத உற்சாகம் இங்கு கிடைக்கிறது. மற்ற கடைகள் போன்றதல்ல இது.
அசோக் சக்கரவர்த்தி என்ற, இக் கடையின் உரிமையாளர் தினமும் காலையில் வந்து இந்தக் கடையைத் திறந்து வைத்துவிட்டு, அவரது வேலைக்குச் சென்று விடுவார். இந்த டீக்கடையில் சம்பளம் வாங்கிக்கொண்டு பணி புரியும் வேறு பணியாளர்களும் கிடையாது. இருப்பினும் காலை முதல் இரவு 7 மணி வரை கடை எந்த வித குழப்பமுமின்றி நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அது எப்படி என்கிறீர்களா?
கடைக்கு மிக அருகில் வசித்து வரும் மக்கள் மற்றும் அந்தக் கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களும் இணைந்து இந்தப் பணியை செய்து வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்றவர்களாயிருக்கின்றனர். முறைப்படி அவர்கள் செய்துவரும் பணிக்கு சன்மானமாக ஒரு ரூபாய் காசு கூட உரிமையாளரிடமிருந்து பெறுவதில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. டீ டிக்காஷன் இறக்குவது, வாடிக்கையாளர்களுக்கு டீ சப்ளை பண்ணுவது, காசு வாங்குவது, இடத்தை சுத்தமாகப் பராமரிப்பது என அனைத்து வேலைகளும் பிசிறின்றி நடந்து வருகிறது.
எழுதப்படாத விதிகளின்படி, புரிதலுடனும் சம உரிமையுடனும், இந்த வேலையை இவர்தான் செய்யவேண்டும் என்ற பாகுபாடு இன்றியும் வம்பு தும்பு ஏதுமின்றியும் கடை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. டீயை தயாரித்து அவர்களும் அருந்துகின்றனர், வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றனர்.
குடும்பம் போல் சேர்ந்து கதை பேசவும், ஆரோக்கியமான முறையில் தர்க்கம் செய்யவும், ஜோக்கடிக்கவும் செய்கின்றனர். வங்காளிகளின் பாரம்பரிய முறையில் அட்டா (Adda) எனப்படும் குடும்பங்கள் ஒன்று கூடும் நிகழ்வு போல் இந்த டீ கடை தோற்றமளிக்கிறது.
நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தக் கடையில் இது வரை பணம் செலுத்தப்படாமல் கடனில் உள்ளதாக ஒரு ஆவணத்திலும் ஒரு தொகையும் குறிப்பிடப்படவில்லை என்பது மற்றும் ஒரு ஆச்சரியமான விஷயம்.
இந்த அகில உலக தேநீர் தினத்தில், சுவை மணம் போன்றவற்றைத் தாண்டி, நம்பிக்கை, பகிரப்படும் சந்தோஷம் மற்றும் சமூக அக்கறையை நினைவூட்டும் விதத்தில் நூறாண்டுகள் கடந்தும் இந்த டீ ஸ்டால் அமைதியாகவும் வலுவாகவும் நிமிர்ந்து நிற்பது இங்கு தயாரிக்கப்படும் டீயை ஸ்பெஷல் ஆக்குகிறது எனலாம்.